கனன்றிடும் பெருநெருப்பு

 கனன்றிடும் பெருநெருப்பு
இருள் எங்கும் இருள்! நான் எங்கிருக்கிறேன்? என் நினைவுகள் மெல்ல விழித்தெழத் தொடங்கியது.
உடலெல்லாம் வலி! வலி! 
கைகளால் மெல்ல  உடலைத் தடவத் தொடங்கினேன். 
ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக வாழ்க்கையைப் போன்று மேடு பள்ளமாக இருந்தது. கையில் பிசுபிசுப்புடன் ஒருவித வாடை என் மூக்கின் நுனியை உரசியது. அது என் வயிற்றில் மிச்சமிருந்த பகுதியை வெளியே கொண்டு வந்துவிடும் போலத் தோன்றியது.
தட்டுத்தடுமாறி எழுந்து நின்றேன். அது ஒரு இருள் சூழ்ந்த சாலை.  விளக்கின் ஒளியில் மரங்கள் லேசாக அசைந்து கொண்டிருந்தது. அந்த மெல்லிய காற்று கூட என் உடலில் பட்டு வலியை ஏற்படுத்தியது.
“ஏன் இத்தனை வலி? என்ன நடந்து விட்டது எனக்கு?
ஏனோ அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என்று மனம் பரபரத்தது. மெல்ல கால்களை நகர்த்த முயற்சித்தேன். சுரீரென்று அடிவயிற்றில் வலி சுண்டி இழுத்தது. அதில் அப்படியே மடிந்து அமர்ந்தேன். அப்போது எனது பார்வையில் அது தென்பட்டது.
கையை நீட்டி அதை எடுத்தேன். நூல் போன்று ரத்தமும் சதையுமாக கிடந்தது. என்ன அது? எங்கிருந்து வருகிறது? என்று ஆராய்ந்தேன். அதிர்ச்சியில் ஒரு நிமிடம் என் இதயம் நின்று துடித்தது. 
என் கால்களுக்கிடையில் இருந்து தான் அந்த சதை கோளம் வந்தது. என்ன அது? 
என் குடல்!
என் உடலில் நடுக்கம் எழ ஆரம்பித்தது. மெதுவாக எழுந்து நின்ற என் கைகளில் அதுவும் இருந்தது. சுற்றிலும் பார்த்தேன் சாலையில் எவரும் இல்லை. மெல்ல அடியெடுத்து நடக்க ஆரம்பித்தேன். சற்று தூரம் போனதும் சாலையின் ஓரத்தில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. அவசரமாக அருகில் சென்றேன்.
ஒரு பெண்! 
முற்றிலும் நிர்வாணமாக கிடந்தாள். அவளைச் சுற்றி ரத்தக்கறைகள். அவள் மேல் சதைக் கோளம் உறைந்து போயிருந்த ரத்தத்துடன் கிடந்தது. சற்று யோசித்தப் பிறகு அது நான் தான் என்று புரிந்தது.
அப்போது சாலையின் எதிர்புறமிருந்து எவரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. நான் சற்று தள்ளி நின்று கொண்டேன். ஒரு மத்திய வயதுடைய ஆண் அந்த பெண்ணுடல் அருகே வந்து நின்றார். அவர் முகத்தில் அதிர்ச்சியும், வேதனையும். உடனே சத்தம் போட்டு தனக்கு தெரிந்தவர்களை அழைத்தார்.
அவரின் குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஓடி வந்தனர். அங்கு பெண்களை விட ஆண்களே அதிகம் இருந்தனர். ஒரு சிலர் பரிதாபமாகவும், ஒரு சிலர் அருவெருப்பாகவும், மற்றும் சிலர் வக்கிரமாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உயிரோடு இருந்தவரை எனக்கு ஆண்களின் பார்வைக்கான அர்த்தங்கள் புரியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்களை கூட கணிக்க முடிந்தது. கூட்டத்தில் இருந்த பலரின் மனம் கீழே கிடந்த பெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது.
முதலில் வந்தவர் மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாது அவசரமாக சென்று ஒரு போர்வையை எடுத்து வந்து என்னுடலை மறைத்தார். அதைக் கண்டு அவரை நோக்கி இரு கைகளால் தொழுதேன். அப்போதும் எனது கை உயர்ந்ததால் அடி வயிற்றில் மீண்டும் வலி.
அதை பொறுத்துக் கொண்டு அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தேன். அவள் மேல் போர்வை போர்த்திய பின் பல ஆண்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். அந்த வயதானவர் மட்டும் போலீசிற்கு தகவல் தெரிவித்தார். 
அதற்கு மேல் எனக்கு அங்கே நிற்க விருப்பமில்லை. மெதுவாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். அன்று இரவு நான் இறப்பதற்கு முன்  சென்ற மாலிற்கு சென்று நின்றேன். முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று ஒவ்வொரு இடமாக நின்று பார்த்தேன். எனது தோழனுடன் இங்கு தானே உணவருந்தினேன். இங்கு தானே அவனுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தேன். அப்போது என் மனதில் எத்தனை கற்பனைகள் எதிர்காலத்தைப் பற்றி. அதை சிதைத்தது யார்? 
அதன் பின் ஒவ்வொரு இரவும் நான் அந்த வீதிகளில் சுற்றி அலைய ஆரம்பித்தேன். என்னுடைய மரணம் நிகழ்ந்த அன்றிலிருந்து ஒரு மாதம் வரை நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே போராட்டங்கள். பெண்கள் வீதிக்கு வந்து போராடினர். நான் அணிந்த ஆடைகளினாலேயே என்னை சீரழித்தனர் என்றும் என் மீதே பழி போடப்பட்டது. நேரம் கழித்து இரவில் சுற்றியதால் தான் எனக்கு இந்த நிலை என்று எனது சாவிற்கான தவறை என் மீதே திணித்தனர்.
வருடங்கள் உருண்டோடியது. என்னை மறந்து போயினர். ஆனால் நான் தினமும் வீதியில் எனது குடலை கையில் தாங்கியபடி சுற்றிக் கொண்டிருக்கிறேன். மக்களுக்கு கேட்காத மரண ஓலங்கள் என் காதுகளை தழுவிச் சென்று கொண்டு தான் இருக்கிறது.
வெகு நாட்களுக்குப் பிறகு அன்றைய இரவு என் ரணங்கள் மீண்டும் மரண வலியை தந்தது. அன்று என்னை இந்த நிலைக்கு தள்ளியவர்களுக்கு தீர்ப்பு வந்திருந்தது. மெதுவாக நடந்து அவர்களின் வீடுகளுக்கு சென்று கவனித்தேன்.
என்னுடலை குத்தி கிழித்தவர்கள் மிகவும் சந்தோஷமாக தங்களது விடுதலையை கொண்டாடினார்கள். என் கண்களில் கண்ணீர்.
ஏன் படைத்தாய் இறைவா? என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்? இப்படி இறந்த பின்பும் நிம்மதியின்றி தெருக்களில் சுற்றவா?
நான் விரும்பிய தில்லியை விட்டு வெளியேற நினைத்தேன். காஷ்மீர் பக்கம் செல்ல ஆரம்பித்தேன். மக்கள் வாழும் திசைகள் அல்லாது அங்கிருந்த காடுகளில் சுற்றி அலைய ஆரம்பித்தேன். எத்தனை வருடங்கள் போனாலும், எனது உடலின் வலியும், மனதின் வலியும் மாறவே இல்லை.
அன்று வழக்கம் போல வெண்ணிலவை பார்த்துக் கொண்டே காட்டில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது எனது காதில் அந்த மெல்லிய முனகல் ஒலி விழுந்தது. மனம் பதைபதைத்து போனது. 
என் பார்வை காட்டை ஒருமுறை சுற்றி வந்தது. எனது உடலில் ஒரு பரபரப்பு வந்தமர்ந்து கொண்டது. எனது வலியை மறந்து சத்தம் வந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தேன். காற்றின் வேகத்தை விட பல மடங்கு வேகத்துடன் ஓடினேன். 
என் பார்வையில் ஒரு கோவில் தென்பட்டது. மனமோ கோவிலில் இருந்தா? நான் எப்படி உள்ளே செல்வது? என்ற கேள்வியை எழுப்பியது.
எது நடந்தாலும் பரவாயில்லை சென்று பார்த்து விடலாம் என்றெண்ணி உள்ளே நுழைந்தேன். எந்த தடையுமின்றி உள்ளே செல்ல முடிந்ததால் அவசரமாக கண்களால் துழாவினேன்.
அங்கு கண்ட காட்சியில் ஏற்கனவே உறைந்து போன எனது ரத்தம் மேலும் உறைந்தது. சின்னஞ்சிறிய குழந்தை ஒன்று. ஆடைகளின்றி நிர்வாணமாக கிடந்தது. அதை சுற்றிலும் நான்கைந்து காமுகர்கள். 
அவர்களின் செயல்களை கண்டு அவர்களை கொன்று விடும் கோபம் எழுந்தது. அவர்களை கொல்லும் எனது முயற்சி எதுவும் பயன்படாமல் போயிற்று. எனது கோபம் முழுவதும் அங்கு கல்லாக அமர்ந்திருந்த தெய்வத்தின் மீது திரும்பியது.
நீயும் ஒரு பெண் தானே! உன் கண்முன்னே நடக்கும் இந்த கொடூரத்தை கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாயா? எதற்கு எங்களை பெண்ணாகப் படைத்தாய்? இப்படி வேரறுத்துப் போடவா? நீ கல் தான் என்று நிருபிக்கிறாயே! 
ஆடிப்பாடி விளையாட வேண்டிய ஒரு குழந்தையை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணாக பிறந்ததால் தானே அந்த குழந்தைக்கு இந்த நிலைமை! பார்! உன் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் கொடுமைகளை பார்! என்று முறையிட்டேன். ஆனால் எதற்கும் பலனில்லை.
அவர்களிடம் சென்றும் முறையிட்டேன் “விட்டு விடுங்கலடா! அது பிஞ்சு குழந்தை! பாவிகளே விட்டு விடுங்கள்” என்று கெஞ்சினேன். 
அவர்கள் காதில் எனது கெஞ்சல்களோ, புலம்பல்களோ விழவில்லை. இறுதியாக ஒருவன் அந்தக் குழந்தையின் தலையை ஓங்கி கல்லில் அடித்தான். அவளுக்கு வலியில் முனக கூட திராணியில்லாமல் தொய்ந்து விழுந்தாள். அப்போதும் விடாது ஒருவன் உறவு கொண்டான்.
அவனது கழுத்தை நெறிக்க முயன்றேன் முடியவில்லை. ஐயோ! என்று மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தேன். அப்போது எனது தோள் மீது மெல்லிய கரமொன்று விழுந்தது. திரும்பி பார்த்தேன்.
அவள் எனதருகில் நின்றிருந்தாள். வந்துவிட்டாயா நீயும் என்னைப் போல நிம்மதியின்றி சுற்ற வந்துவிட்டாயா என்று கட்டியணைத்து கதற ஆரம்பித்தேன்.
எனது தொடுகை அவளுக்குள் வலியை ஏற்படுத்த “அக்கா! வலிக்குது! ஏன் அக்கா? நான் என்ன பண்ணினேன்? அந்த மாமா எல்லாம் ஏன் அப்படி பண்ணினாங்க?” என்றாள் குழந்தை குரலில்.
அவளை தூக்கிக் கொண்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறினேன். ஓடினேன்! மிக வேகமாக ஓடினேன்! எதிலிருந்து தப்பிக்க? தெரியாது! என் காதுகளில் அவள் பட்ட வேதனைகளை கூறிக் கொண்டே வந்தாள். என்னால் முடியவில்லை!
ஒரு ஏரியின் ஓரமாக சென்று அமர்ந்தோம். திடீரென்று எங்களை நோக்கி பல குழந்தைகளும், பெண்களும் ஓடி வந்தனர். நாங்கள் திகைத்து நின்றோம்.
நாங்கள் நின்றிருந்த பூமியே ரத்த ஆறாக ஓடியது. எங்கும் கால் வைக்க இடமில்லாமல் எங்களின் குருதி நிலத்தை மறைத்து ஓடியது. இனிமையான இசைக்கு பதிலாக எங்களின் வேதனை நிறைந்த குரல் வெற்றிடத்தை நிரப்ப ஆரம்பித்தது.
நாங்கள் அனைவரும் ஒன்று கூடி இறைவனிடம் கை கூப்பினோம்.
இனி ஒரு போதும் பெண்ணாக பிறக்க வேண்டாம்!
அப்போது அந்தப் பக்கமாக ஒரு பெண் தன் குழந்தையுடன் வந்தாள். அந்த சின்னக் குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது. 
அதன் கண்களில் ஏதோ ஒரு செய்தி இருந்தது. ‘கூடிய விரைவில் நானும் உங்களுடன் இணைவேன்’ என்று கூறுவது போல் தோன்றியது. 
எங்களை எல்லாம் சேர்த்தணைத்த அன்னை பூமியின் கண்களிலும் குருதி வழிந்தது. இப்போதும் நான் இரவுகளில் சுற்றித் திரிந்து கொண்டு தான் இருக்கிறேன். 
உங்கள் கண்களில் நான் தெரிந்தால் எனக்கு பதில் சொல்லுங்கள் “நான் என்ன பாவம் செய்தேன்? பெண்ணாய் பிறந்ததை தவிர. அந்த குழந்தை என்ன ஆடை உடுத்தியது?  இதற்கு பதில் கிடைத்தால்  நான் இங்கிருந்து போய் விடுவேன்…

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...