நீயெனதின்னுயிர் – 1

 நீயெனதின்னுயிர் – 1

அத்தியாயம் – 1

“கடவுளே! எல்லாம் நல்லபடியா நடக்க, நீ தான் வழி சொல்லணும்!” பயபக்தியுடன் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்த வைஷு, கையிலிருந்த திருவுளச் சீட்டைக் கீழே போட்டாள்.

“ஜனனி! நல்ல சீட்டா எடுடி.  நம்ம பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரணும்னா, அது நீ எடுக்கும் சீட்டில் தான் இருக்கு” எனத் தோழியின் காதில் முணுமுணுக்க, அவளோ திரும்பி அவளை முறைத்தாள்.

“நானே, எந்த நேரம் இந்த வார்டன் வருமோன்னு பீதியில் இருக்கேன். நாம இப்படிக் கும்பல் கூடிப் பேசிட்டு இருப்பதைப் பார்த்தால், அவ்வளவு தான்! தொலைஞ்சோம் எல்லோரும்!” என்றாள் பயத்துடன்.

“ஏய்! பேசாமல் சீட்டை எடு. நல்ல சீட்டு வரல, நீ தொலைஞ்ச!” என மிரட்டினாள் மாலினி.

“என்னங்கடி! அடியாள் ரேஞ்சுக்கு, என்னை இந்த மிரட்டு மிரட்டறீங்க? வேணும்னா, நீங்களே எடுங்க” என்றவள், எடுத்த சீட்டைக் கீழே வீசினாள்.

“அப்படியே ஓங்கிக் குட்டினா, எப்படி இருக்கும் தெரியுமா? நம்ம க்ரூப்லயே நீதான் சின்னப் பொண்ணுன்னு, உன்னை எடுக்கச் சொன்னா, ரொம்ப தான் பிகு பண்ற!” எனத் தோழிகள் நால்வரும் மாறிமாறிச் சண்டையிட்டனர்.

“போதும்டியம்மா, உங்க சண்டையை நிறுத்தறீங்களா?” என்று கத்திய வைஷு, “ஜனனி! நீ கீழே போட்டச் சீட்டை எடுத்துக் கொடு!” என்றாள். 

“உனக்காக, இவங்களைச் சும்மா விடுறேன் வைஷு!” என்றபடி தன் கையிலிருந்த சீட்டை எடுத்துக் கொடுத்தாள் ஜனனி.

சுருட்டியிருந்த காகிதத்தை அவள் மெல்லப் பிரிக்க, பின்னால் நின்றிருந்த நால்வரும் “டொட்டொடோய்ங்…” எனப் பின்னணி இசை எழுப்பினர்.

“எதுக்கு இந்தப் பில்டப்?” என அவர்களை முறைத்தாள் வைஷு.

“ஒரு சுவாரசியத்துக்காகத் தான் வைஷு!” என்ற லில்லியை, பார்வையாலேயே அடக்கினாள். 

சீட்டைப் பிரித்த வைஷாலியின் விழிகள் விரிந்த நிலையில் இருக்க, அனைவரும் ஆவலுடன், “வைஷு! என்னடி வந்திருக்கு?” என்று கேட்டனர்.

“ஹேய்! சாமியே ஓகே சொல்லிட்டார்” என்றபடி அவள் குதிக்க, தோழிகளும் அந்த ஆரவாரத்தில் இணைந்து ஆர்ப்பரித்து, ஒருவருடன் ஒருவர் ஹை-பை கொடுத்துக்கொண்டனர்.

“என்ன சத்தம் இங்கே? இது ஹாஸ்டலா, இல்லை மீன் மார்க்கெட்டா?” வார்டனின் சப்தம் கேட்டதும், அடித்துப் பிடித்து எழுந்து நின்றனர் ஐவரும். “படிக்கற பசங்க தானே நீங்கல்லாம்? வைஷாலி! நீயும் இதுங்க கூடச் சேர்ந்து, உருப்படாம போகப் போறியா? இந்த ராத்திரி நேரத்தில் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கிறீங்க. எல்லோரும் அவங்கவங்க ரூமுக்குப் போங்க.” 

மிரட்டும் விழிகளை மேலும் உருட்டிக் காட்டி விட்டுச் சென்ற ஹாஸ்டல் வார்டனைப் பார்த்த ஐவரும், வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, தங்கள் அறைக்குச் சென்றனர்.

“நாங்க மீன் மார்க்கெட்டா? உங்க எல்லாரையும் ஒரு வழி  பண்ணத் தானே பிளான் போட்டுட்டு இருக்கோம்?” என்ற ஜனனியின் முதுகில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டிவிட்டு, சிரித்தாள் வைஷாலி. 

கல்லூரி முழுவதும் வண்ண வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, சிறப்பு விருந்தினரின் வருகைக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். கல்லூரியின் பொதுச் செயளாலரான வைஷாலி, ஒரு எதிர்பார்ப்புடனும், படபடப்புடனும் காத்திருந்தாள். 

அடுத்த சில நிமிடங்களில் பளபளவென மினு மினுப்புடன் வந்து நின்ற ஆடம்பர வெளிநாட்டுக் காரிலிருந்து, ஒரு ராஜகுமாரனைப் போல இறங்கினான்… செந்தளிர் க்ரூப் ஆப் கம்பெனீஸின் சேர்மனும், எஸ்.ஆர்.வி. கலைக்கல்லூரி டிரஸ்ட்டின் தலைவனுமான விக்ரம். கல்லூரியின் சார்பாகக் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டவன், தன் செக்ரட்டரியிடம் ஏதோ பேசிக்கொண்டே, அலுவலக அறைக்குச் சென்றான்.

அவர்களைப் பின்தொடர்ந்த வைஷாலி, கல்லூரி முதல்வர் உடனிருக்கவும், அவனை எப்படி அணுகிப் பேசுவதெனப் புரியாமல் வராண்டாவிலேயே நின்றாள். சிறிது நேரத்தில் மொபைலில் பேசிக்கொண்டே வெளியே வந்த விக்ரமின் செக்ரட்டரியைப் பார்த்தவள், அவனது பின்னாலேயே சென்றாள். 

போன் பேசிமுடித்துத்  திரும்பியவன், தன் பின்னால் நின்றிருந்தவளைப் பார்த்துப் புருவத்தைச் சுளிக்க, “எக்ஸ்கியூஸ்மீ! என்ன வேணும் உங்களுக்கு?” என்றான்.

“விக்ரம் சாரைப் பார்த்து, ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும். ப்ளீஸ்!” என இறைஞ்சுதலுடன் கேட்டாள்.

“ஐந்து நிமிஷமா! சான்சே இல்லை. சார், ரொம்பப் பிஸி!” என்று மொபைலைப் பார்த்துக்கொண்டே பதிலளித்தான் அவன்.

அவனை ஏற இறங்க பார்த்தவள், “மூணு மணிநேர ப்ரோக்ராமைப் பார்க்க வந்தவர், எங்களுக்காக ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்க மாட்டாரா? நீங்க கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன் சார்” என்றாள்.

பவ்யமாக சொல்வது போல இருந்தாலும், அவளது கிண்டலான பதிலைக் கேட்டதும் முகத்தில் அடித்தாற் போல, “அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை… ப்ளீஸ்!” என்றவன், மறுபடியும் கைப்பேசியில் பேசியபடியே அங்கிருந்து சென்றான்.

அவனை எரிச்சலுடன்  பார்த்தபடி நின்றிருந்த வளை, “என்னடி வைஷு?” என்றபடி சூழ்ந்து கொண்டனர் தோழிகள்.

“ம்! சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காதாம். அந்தக் கதைதான் இங்கே நடக்குது. என்ன ஆனாலும் சரி; இன்னைக்கு, விக்ரம் சாரைப் பார்த்துப் பேசியே ஆகணும்” என்றவள், ஒரு பேப்பரில் தங்களின் கோரிக்கைகளையும், பிரச்சனைகளையும் எழுதினாள். 

“நிகழ்ச்சி முடிந்ததும், இதை எப்படியாவது விக்ரமின் கையில் சேர்த்துவிட வேண்டும்” என்ற முடிவுடன், மேடையை நோக்கி நடந்தாள். ஆனால், விழா முடியும் முன்பே, அவசரமாக இடையிலேயே கிளம்பிவிட்டான் அவன். 

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த வைஷாலிக்கு, அவன் திடீரெனப் பாதியில் கிளம்பிவிடவும், “தங்கள் பிரச்சனைகளை அவனிடம் எப்படிச் சொல்வது?” என்று புரியாமல் தவித்தாள். 

விழா முடிந்த பிறகும், அதே நினைவுடன் இருந்தாள். “போனில் அத்தனைச் சீக்கிரம் அவனிடம் பேசிவிட முடியாது. இந்தச் செக்ரட்டரி மாதிரி, எத்தனை நந்திகள் குறுக்கே நிக்குமோ?” என்று யோசித்தவளுக்கு, “அவனை நேரில் சென்று சந்தித்தால் என்ன?” என்ற யோசனை தோன்ற, அதை தோழிகளுடன் பகிர்ந்து கொண்டாள்.

“என்னடி சொல்ற?  ஆஃபிஸ்ல போய்ப் பேசணுமா? இதெல்லாம் பிரின்சிக்குத் தெரிந்தால், அவ்வளவு தான்!” என்றாள் மாலினி பயத்துடன்.

“இது தான் சரி. நான் டிசைட் பண்ணிட்டேன். நாளைக்கே போகப் போறேன். தைரியம் இருக்கவங்க மட்டும், என்னோட வரலாம்.” 

“நான் வருகிறேன் வைஷு!” என உடனே பதிலளித்தாள் ஜனனி.

 

(தெடரும்)
பிரின்சிக்குத் தெரிந்ததா அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...