பயம்

 பயம்

பயம்

இரவின் நிசப்தத்தைக் ‘வவ்…வவ்’ என்ற நாயின் குரல் கலைத்தபோது எனது தூக்கமும் கலைந்தது. போர்வைக்குள் இருந்தபடியே மொபைலை எடுத்து மணி பார்த்தேன். ரெண்டு பத்து எனக் காண்பித்தது. படுக்கும் போது ஒரு மணியிருக்கும்… தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்தவன் எப்படித் தூங்கிப் போனேன் என்று தெரியாது… நாயின் சப்தத்தால் தூக்கம் கலைந்தது எரிச்சலாக இருந்தது. இனி மறுபடியும் தூக்கம் வரப்போவதில்லை என்று நினைத்தபடி எழுந்தேன். வெளியில் நாயின் குரல் வேகமெடுத்தது.

மெல்லக் கதவை நீக்கிப் பார்த்தேன். எங்கள் பில்டிங்கை ஒட்டிச் செல்லும் தார்ச்சாலையில் நாய் ஓடி ஓடிக் குரைத்துக் கொண்டிருந்தது. ரோட்டில் எதுவும் தெரியவில்லை. நான் தைரியசாலி இல்லை… எனக்குள் பயமெடுத்தது… அந்தக் குளிர் இரவிலும் முகமெல்லாம் வியர்க்க, கை கால்கள் உதறலெடுத்தது. 

ஒருவேளை பேயாக இருக்குமோ நினைக்கும் போதே ‘திக்’கென்று இருந்தது. இல்லாத எச்சிலை விழுங்கினேன்… மனசுக்குள் ‘சஷ்டியை நோக்க சரவண பவனார்…’என கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் தைரியம் வந்தது போல் ஒரு உணர்வு தோன்ற, கவசத்தை நிறுத்திவிட்டு ‘ஏய் டோணி’ என அதட்டியதும் டோணியின் குரல் இன்னும் வேகமெடுத்தது.

நகரத்தில் இருந்து சற்று தள்ளியிருந்த இடத்தில் தனியார் பள்ளி ஒன்று புதிதாக முளைக்க இருக்கிறது. அதற்கான கட்டிடப்பணி எங்கள் கம்பெனிக்கு கிடைத்து மூன்று மாதங்களாகிவிட்டது. ‘ப’ வடிவில் மூன்று தளங்கொண்ட கட்டிடம்… மிகப்பெரிய புராஜெக்ட்… 

இன்னைக்கு கல்விதானே கோடிகளைக் கொடுக்கிற வியாபாரம்… எங்கு பார்த்தாலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இஞ்சினியர் கல்லூரிகளுமாகத்தான் முளைக்கின்றன. விவசாய நிலங்கள் எல்லாம் பயிர்களைத் துறந்து எப்போதோ தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் சுமக்க ஆரம்பித்துவிட்டன என்பது எல்லாருக்கும் தெரியும். பயத்திலும் சமூக அக்கறையோடான சிந்தனை… சிரிப்பு வந்தது… பயம் அதை அடக்கியது.

இந்தப் பணி எங்களது தலைமை இஞ்சினியர் அருள் தலைமையில் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. காலையில் ஆட்களை கம்பெனி வண்டி கொண்டு வந்து விட்டுவிட்டு மாலை ஆறு மணிக்கு மீண்டும் வந்து கூட்டிச் செல்லும். அவர்கள் எல்லாம் நகரத்தில் கம்பெனிக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் நீண்ட செட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்… அங்கு சமையல் செய்ய செட்டிநாட்டுக்காரங்க ரெண்டு பேர் இருக்காங்க… வேலை செய்பவர்களில் பெங்காலிகள்தான் அதிகம்… மாடு மாதிரி வேலை பார்ப்பார்கள்… ஒரு நாளைக்கு ரெண்டு ஹான்ஸ் பாக்கெட் இருந்தாப் போதும்.. உதட்டுல ஒதுக்கிக்கிட்டு உக்காராமல் வேலை பார்ப்பானுங்க… 

நான் இராமநாதபுரத்தில் இருந்து கோவைக்கு பிழைப்புத் தேடி வந்தவன். இந்தக் கம்பெனியில் சேர்ந்து ஆறுமாதம்தான் ஆகிறது. இதற்கு முன்னர் சிட்டிக்குள் ஒரு காம்ப்ளக்ஸ் கட்டும் பணி, இப்போது பள்ளிக் கட்டிடம்… எனக்கென்று தனியாக அறையில்லை என்பதால் பணி நடக்கும் இடத்தில் வாட்ச்மேன் ராஜாங்கம் அண்ணனுடன் தங்கி வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எங்க இன்சினியரின் ஆணை. நானும் பிஇ படித்தவன்தான்… ஆனாலும் சூப்பரவைஸர் பணிதான் இப்போது… வேலை பிரச்சினையில்லை… அலைச்சல் இல்லை… சாப்பாடு ராஜாங்கம் அண்ணன் சமைச்சிருவாரு… சாமானெல்லாம் கம்பெனி வாங்கிக் கொடுத்துரும்… இங்கு தங்குவதுதான் பிரச்சினையே… 

என்னைப் பொறுத்தவரை ரொம்ப பயந்த சுபாவம்… எதற்கெடுத்தாலும் பயப்படுவேன். பள்ளியில் படிக்கும் போது பாலமுருகன் ஆறாவதிலேயே டியூசன் போய்விட்டு ராத்திரி எட்டு மணிக்குத் தனியாக வருவான். நானோ பத்தாவது படிக்கும் போது டியூசன் போய்விட்டு ஏழு மணிக்கு வீடு வந்து சேர்வதற்குள் வேர்த்து விறுவிறுத்துப் போய்விடுவேன். 

‘கார்த்தி நீ ஆம்பளப்புள்ளடா… பயந்தாங் கொள்ளியா இருகப்படாது… என்ன பயம்… இருட்டுல சைக்கிள்லதானே வர்றே… அது இரும்புடா… காத்துக்கருப்பு அண்டாது’ என அம்மா தைரியம் சொன்னாலும் எனக்குள் இருக்கிற பயம் அப்படியேதான் இருந்தது.

எங்க ஊருக்கு திரும்புற சாமியாடி சாயப்பட்டறைக்கிட்ட நரிக்குறவர்கள் காலணி இருந்தது. எம்.ஜி.ஆர். முதல்வரா இருக்கும் போது அந்த புறம்போக்கு இடத்துல அவங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தாராம். குறவர்கள் யாரைக் கேட்டாலும் ‘என்ன சாமி… இப்புடிக் கேட்டுப்புட்டே… அவரு எங்க தெய்வஞ்சாமி…’அப்படின்னு சொல்வாங்க… 

அப்ப படிப்பறிவு இல்லாத சனங்க அவங்க… காக்கா, குருவி, நாய், நரியின்னு எதையும் விட்டு வைப்பதில்லை… மயிலைப் பிடித்து கழுத்தை நெறித்து சுடு தண்ணியில் வேக வைத்து அதனுடன் ஏதேதோ சேர்த்து மயில் எண்ணெய் தயாரித்து விற்பார்கள். அந்தப் பாத்திரத்துக்குள் முழு மயில் கிடக்கும் போது பாவமாகத் தெரியும். 

வருடத்துக்கு ஒரு முறை ஏழு பானையை ஒண்ணு மேல ஒண்ணா வச்சி, அதுல பொங்கல் வச்சி, அவங்க பெண் தெய்வத்துக்குப் படையல் போட்டு எருமைக்கிடா வெட்டுவாங்க… அந்த கெடா வெட்டுறதுக்கு மொதநாள் ராத்திரி சிறப்பா விழா எடுப்பாங்க… திரை கட்டி எம்.ஜி.ஆர். படம் ஓட்டுவாங்க… நாலாவது படிக்கும் வரை ‘கொற வீட்டுல போயி படம் பாக்கணுமா?’ அப்படின்னு அம்மா திட்டும். அதுக்கு அப்புறம் எல்லாரும் போறாங்கன்னு அம்மாவும் கூட்டிப் போகும். 

அங்க முதல்ல திரையில் படம் சரியாத் தெரியிதான்னு பாக்குறதுக்காக ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்… புதுக்கவிதைகள் பிறந்ததம்மா’ அப்படின்னு எம்.ஜி.ஆர் பாட்டுத்தான் போடுவாங்க. ஆனா ராத்திரியெல்லாம் சாமி ஆடுறேன்னு அந்த எருமைகளை படுத்துற பாடு இருக்கே… ரொம்பப் பாவமா இருக்கும்… கட்டைகளை வைத்து அடிப்பதும்… கத்தியை வைத்து உடலில் குத்தி ரத்தம் குடிப்பதும்… மறக்கவே முடியாது. 

ரெண்டு மூணு வருசம் படம் பாக்கப் போனவன் அப்புறம் போக விரும்புறதில்லை… மறுநாள் பள்ளிக்கூடம் போகும் போது ரெண்டு எருமைக்கிடா கழுத்தறுத்துக் கிடக்கும்.. தலையைத் தூக்கி சாமிக்கு முன்னால வச்சிருப்பாங்க. 

இப்ப அவங்க மாறிட்டாங்க… படிக்க ஆரம்பிச்சிட்டாங்க… சுத்தமா இருக்காங்க… ஆனா இன்னும் திருவிழா நடக்கத்தான் செய்யுது. இன்னைக்கும் அவங்களுக்குத் தெய்வம் எம்.ஜி.ஆர்… அவங்க சின்னம் இரட்டை இலைதான்.

ஒருநாள் டியூசன் முடிச்சிட்டு வர்றப்போ நல்ல இருட்டு… வெலக்கு ரோட்டுல வேகமாக வந்து திரும்புறேன்… நரிக்குறவ வீட்டுப் பிள்ளை நடுரோட்டுல நின்னிருக்கும் போல சைக்கிள்ல பட்டு கீழ விழுந்து கத்த ஆரம்பிச்சிருச்சு… எனக்கு பயம் நூறு டிகிரிக்கு மேல ஏறிடுச்சு… வேகவேகமாச் சைக்கிளை மிதிச்சு காத்தாப் பறக்குறேன்… அதுக்குள்ள காச் மூச்சுன்னு கத்திக்கிட்டு கூடுன குறவர்கள்… முயல் பிடிக்க தலையில் கட்டிச் செல்லும் விளக்கை எங்கள் ரோட்டில் அடித்தார்கள். அது என் மீது பரவ, ஆஹா மாட்டுனோம் என்ற பயத்தில் வேர்த்து விறுவிறுக்க சைக்கிளை மிதித்தேன்… 

அவர்கள் விடாம விரட்டி வர ஆரம்பித்தார்கள். நான் கந்தர் சஷ்டி கவசம் சொல்லியபடி சைக்கிளில் சிட்டாய் பறந்தேன்.. 

வியர்வையில் நனைந்து வீடு போய் சேர்ந்தபோது ‘ஏன்டா… இப்படி பயந்து சாகுறே…’ என்று திட்டிவிட்டு முந்தானையால் முகம் துடைத்துவிட்டாள் அம்மா. அவர்கள் ஊருக்குள் வந்து தேடிச் சென்றார்கள்… எங்கே பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அடுத்த வாரம் முழுவதும் நான் டியூசன் செல்லவில்லை.

நாய் தொடர்ந்து குலைத்துக் கொண்டேயிருந்தது… சற்றே நிறுத்துவதும் மீண்டும் வேகமெடுத்துக் குலைப்பதுமாக இருக்க, தண்ணீர் மோந்து குடித்துவிட்டு கதவை இறுக்கமாகச் சாத்திவிட்டு சேரில் அமர்ந்தேன். ரெண்டு நாளைக்கு வேலையில்லை… மணலும் கல்லும் மட்டுமே வந்து இறங்கும். அதுக்காக அத்துவானக் காட்டுக்குள்ள அம்போன்னு விட்டுட்டானுங்களேன்னு அழுகையே வந்துச்சு.

இன்று காலை ராஜாங்க அண்ணனின் உறவுக்காரர் மறைந்த செய்தி வர, நான் பொயிட்டு நாளைக்கி ஓடியாந்திடுறேன் தம்பி என்று சொல்லிச் சென்று விட்டார். ஒரு ஆளா… இந்த காட்டுக்குள்ள… எப்படி ராத்திரிய ஓட்டப்போறேன்னு தெரியலையே என்ற பயம் தொற்றிக் கொண்டாலும் வேறு வழியில்லை என்பதால் சரியெனச் சொல்லி வைத்தேன். இந்தா தூங்க முடியாம அவதிப்படுறேன்.

இப்படித்தான் ராஜவேலு ஐயா செத்தன்னைக்கு பாலமுருகன் சுடுகாட்டுக்குப் போலாம் வாடான்னு சொன்னப்போ வரலைன்னு மறுக்க, மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து ‘பயந்தோளி பக்கோடா ஏம் பீயை நக்குடா…’ன்னு கேலி பண்ணினாங்க… உடனே எனக்கென்னடா பயம் வாங்கடான்னு வீராப்பா கிளம்பிட்டேன். சின்னப்பயலுக எல்லாம் எதுக்குடா வாறீங்கன்னு எங்க சித்தப்பா கத்துனாரு… ஆனாலும் நாங்க போயி புளியமரத்து ஓரமா ஒதுங்கி நின்னோம்… 

வெறக அடுக்கி அதுமேல அவரைத் தூக்கி வச்சி…  மறுபடி வெறகடுக்கி…. அப்புறம் சீனியக் கொட்டி… வைக்கலை பரப்பி… அது மேல எருராட்டிய வச்சி அடுக்கி… தலைக்கிட்ட… காலுக்கிட்ட … இன்னும் சில இடத்துல ஓட்ட மாதிரி வச்சி… மத்த இடமெல்லாம் மண்ண வச்சி பூசிட்டாங்க.. 

‘டேய் வெறகு மேல வச்சித்தானே எரிப்பாங்க… சினிமாவுல கூட அப்புடித்தானே காட்டுவாக.. இவங்க என்னடா பூசுறாக…’ மெல்லப் பாலமுருகன்கிட்ட கேட்டேன். 

‘அப்புடி வச்சா… எரிஞ்சதும் எழும்புக்கூடு எந்திரிக்குமாம்… அடிச்சி தீயில அமுக்குவாங்களாம்… இதுனா உள்ளயே எரிஞ்சிருமாம்… செங்கக்காவாய் வைக்கிறமாதிரின்னு தாத்தா சொல்வாரு’ என்றான் அவன். 

அவன் சொன்ன மாதிரி கொள்ளி வச்சதும் ஓட்டை வழியா புகை மட்டுந்தான் வந்துச்சு… அன்னைக்கு ராத்திரியெல்லாம் ராஜவேலு ஐயா எந்திரிக்கிற மாதிரியே நினைப்பு… படக்… படக்குன்னு தூக்கிப் போட்டு… எந்திரிச்சி… அழுது… அம்மாவை தூங்க விடாம புலம்பி… துணூறை அள்ளி பூசிப்பூசி… விடியக்காலையில ‘உன்னய யாரு எரும அங்க போச்சொன்னது… ராத்திரி பூராம் சிவராத்திரி ஆக்கிட்டே… பயந்தாங்கொள்ளி… இனி பயலுக கூட அங்க போறே… இங்க போறேன்னு போ… கால ஒடிச்சிப் போட்டுடுறே’ன்னு அம்மா திட்டினாள்.

ராஜவேலு ஐயா கதை இப்ப எதுக்கு தோணுது என்று நினைத்தபோது வேர்க்க ஆரம்பித்தது. நாக்கெல்லாம் வறண்டு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. சினிமாவில் வர்ற மாதிரி பேய் வந்து கதவைத் தட்டுமோ…  பயத்தில் ஒண்ணுக்கு வர… வெளியில்தானே போகணும் என்ற யோசனையில் அடக்க ஆரம்பித்தேன். 

நாயின் குரல் சற்று குறைந்திருந்தது. எனக்குள் தூக்கம் சுத்தமாக தொலைந்திருந்தது. மெல்ல கதவை நீக்கினேன்…. டோணி வாசலில் படுத்திருந்தது… இன்னும் கொஞ்சம் தாமதித்தால் கைலியில் போய்விடுவேன் என்ற நிலைவர, பயத்தோடு மெல்ல வெளியில் வந்தேன்… செருப்பை மாட்டிக் கொண்டு நடக்க, டோணி பின்னால் வந்தது. அது வரும் தைரியத்தில் கேட்டுக்கு வெளியே போய் ஒண்ணுக்குப் போய்விட்டுத் திரும்ப, தூரத்தில் வெள்ளையாய் ஒரு உருவம் அசைந்து அசைந்து நடப்பதைப் பார்த்து பயத்தில் ஓடிவந்து கதவைத் தாளிட்டுக் கொள்ள, டோணி மீண்டும் ‘வவ்…வவ்’ என குலைக்க ஆரம்பித்தது. 

நான் கந்தர் சஷ்டி கவசத்தை மீண்டும் அரம்பித்தேன்… 

பொழுது விடிய ஆரம்பிக்க, குருவிகள் கத்த ஆரம்பித்தன… 

கட்டிடத்தில் ஓரமாக கோவில் மாடு ஒன்று குரல் கொடுத்தது… 

அது வெள்ளையாய் இருந்தது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...