அக்னிசிறகுகள்
இரத்தத் திட்டுக்களாய் ! கருவில் திரண்டுவிட்டேன்
அசைவையும் மூச்சையும் சுவாசித்து
கருவறை இருளில் உருவாய்
மாறிய நேரமே !
என் குறி குறித்த சோதனையிலேயே
கூசித்தான் போனேன் ?!
பிறப்பிலேயே குருதி பூசியதாலோ
என்னவோ தொடர்ச்சியாய் மாதாந்திர
மூன்று நாட்களை நிரந்தமாக்கியது உடல் !
என் விடியல்கள் வேதனைகளின்
வெளிச்சங்கள் ஆகின !
வரலாறுகளில் புகைப்படமாய் மாற்றிப்
பூக்களைத் தூவினார்கள்
நடைமுறைத் தோட்டத்தில்
முட்களைத் தூவினார்கள்.
நான் சிலுவைகளை சுமந்தேன்.
குடும்பம் வேலை உறவுகள் என
போராட்டமே வாழ்க்கையாய் !
புன்னகை புறக்கணிப்பட்டது
பொன்நகை அலங்கரிக்கப்பட்ட இரவுகள்
ஆனந்தமாயின….!
எரிமலைக்குழம்புகளில் கால்களை
முக்கி குளிர்கிறதா என கேள்விகள் வீசப்பட்டது.
உறக்கமும் எட்டிப்போய் முன் தூங்கி பின் எழு
அப்போதுான் நீ பத்தினி…. என
உறக்கத்திற்கு கூட விதி நிர்ணயம் செய்யப்பட்டது.
தட்டுங்கள் திறக்கப்படும் தட்டினேன் திறக்கவில்லை
கேளுங்கள் தரப்படும் கேட்டேன் தரவில்லை.
சோம்பித் திரியும் உறவுகள் கூட சோதனைக் குழாயில்
அடைத்து வேடிக்கை செய்தது. எனை
இரவுகள் இம்சித்தது, விருப்பங்களும் உரிமைகளும்
கேட்டுப் பெற வேண்டியாதாயிருந்தது.
அன்னையிடம் கேட்டேன். அடிப்பைத்தியமே
ஆண்கள் இப்படித்தான் என்றாள்
தந்தையிடம் கேட்டேன் புருஷன் மனசு கோணாம
நட என்று பொருளாதார கணக்குப் பார்த்தார்.
சகோதரன் பொருள் கேட்டு விடுவேனோ என்று
புன்னகையைக் கூட சிந்த மறந்தான்.
உறவுகள் கை விரிக்க வரவேற்றது புக்ககம்
வடித்து கொட்டிட மட்டுமே
சிரிப்பிலும் அழுகையிலும் கோபத்திலும்
அளவுகோல் விதித்த சமூகமே
எங்கள் மேல் விழும் வன்முறைக்கு மட்டும்
ஏன் அளவுகோல் விதிக்கவில்லை
ஆணின் கைப்பாவையை ஆக்கினாயே அந்த
இரவுகளில் கூட எங்கள் விருப்பத்தை கேட்டு
அறிந்திருக்காயே ஆணிணமே
கேள்விக்குறிகளாய் வளைந்தே பழக்கப்பட்டு
விட்டோம் நாங்கள் …. மொழிகள் தொலைத்த
புறாக்களாய்….!
இறக்கைகளை தொலைத்த பூச்சிகளாய் !
அக்கினிச் சிறகுகளை முதுகில்
ஏற்றிக்கொண்டு தினம் தினம்
சதை தின்னும் கழுகளுக்கு மத்தியில்
கொண்டாட்டங்கள் சுவைக்கவில்லை
கசக்கிறது.