காட்டுவாசி போல குகை மனிதன்
காட்டுவாசி போல குகை மனிதன்
உலக வரலாற்றில் வித்தியாசமான கைதிகள் ஏராளம் இருக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் ஆச்சரிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு கடத்தல் வழக்கு ஒன்றில் சாங் சியாங் என்ற நபர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டா இவர் மீதான வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் அவர் சிறையில் இருந்து எப்படியோ தப்பித்துச் சென்றுவிட்டார்.
அதன்பின்னர் சாங் சியாங்கை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று என ஆண்டுகள் உருண்டோடின. ஆனால் தப்பியோடியவரை மட்டும் பிடிக்க முடியவில்லை.
தற்போது 17 ஆண்டுகள் ஆன நிலையில், மலைகளுக்கு நடுவே உள்ள குகை ஒன்றில் வசித்து வந்த சாங் சியாங் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு ட்ரோன் கேமராக்கள் பெரிதும் உதவியுள்ளன.
அதாவது, மலைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள போலீசார் ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டுள்ளனர். அப்போது ஓரிடத்தில் மனிதர்கள் வசித்து வருவதற்கான தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு ஒரு நபர் காட்டுவாசி போல வசித்து வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரைப் பிடித்து விசாரிக்கையில், போலீசாருக்கு ஆச்சரிய தகவல் கிடைத்துள்ளது.
அவர் தான் கடத்தல் வழக்கில் 17 ஆண்டுகளுக்கு முன்பு கைதாகி, பின்னர் தப்பிச் சென்ற கைதி சாங் சியாங் என்று கண்டறியப்பட்டது. மலைகளுக்கு நடுவே உள்ள குகை ஒன்றை வீடாக பயன்படுத்தி உள்ளார்.
காட்டில் உள்ள பொருட்களை உணவாகவும், ஆற்று நீரை குடிநீராகவும் பயன்படுத்தி வந்துள்ளார். மரங்களை வெட்டி, நெருப்பு மூட்டி உணவை சமைத்து வந்திருக்கிறார். ஒரு காட்டுவாசி போல 17 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து சாங் சியாங்கை கைது செய்து, போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.