விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி
விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து, அரசியலில் பெரும் செல்வாக்குடன் களமிறங்கியவர் விஜயகாந்த். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசியலில் விஜயகாந்த் தீவிரமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில் தேமுதிகவின் செல்வாக்கும் சரியத் தொடங்கியது.
ஒவ்வொரு தேர்தலிலும் கட்சியின் வாக்கு சதவீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் வேதனையில் இருக்கின்றனர். விஜயகாந்த் எப்போது வீறு கொண்டு எழுவார். கட்சி மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் விஜயகாந்தை மறக்காமல் அதிமுக நினைவு கூர்ந்து வருகிறது. இதற்கு உதாரணமாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சமீபத்தில் பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டித் தொகுதியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சிவி சண்முகம், நவம்பர் முதல் வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் நான் சொல்லிக் கொள்வது இதுதான்நம்மை உயர்ந்த பதவிகளில் அமரவைத்து அழகு பார்க்கும் தொண்டனுக்கு நாம் என்ன கொடுத்துள்ளோம். அவர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது. இதோ கூட்டணியோடு நாம் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால், நாம் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதற்கு காரணம், 2011ல் தேமுதிக போட்ட அடித்தளம் தான். அந்த நன்றியை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த 8 ஆண்டுகாலம் ஆட்சியில் தொடர தேமுதிக தொண்டர்களின் உழைப்பும் முக்கிய காரணம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி. இன்று அவர் நல்ல உடல்நிலையுடன் இருந்தால், தமிழக அரசியல் வேறு மாதிரியாகி இருக்கும். எழுதி வைத்து பேசும் மு.க.ஸ்டாலின் எல்லாம், இன்று அடையாளம் தெரியாமல் போயிருப்பார்.
வரும் தேர்தலை வாழ்வா? சாவா? என்று நினைத்து நாம் செயல்பட வேண்டும். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இதுதான் அடித்தளம். அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.