இல்லறவியல் – அன்புடைமை
இல்லறவியல்
அன்புடைமை
எல்லாரிடத்தும் அன்பு உடையவராய் இருத்தல்
அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்மணிகளும், தம் தந்தையாகிய பாரியிடத்தில் வைத்திருந்த அன்பே, பாரி இறந்ததும் கபிலரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையை அளித்தது.
அக்கபிலர் அழைத்துப்போய் திருக்கோவிலூரில் விட்டு வடக்கிருந்து உயிரைவிடச் சென்றதும், அவ்விருப்பமே பசியுடன்வந்த ஒளவையின் பசியை நீக்கி அவரோடு பழகும் நட்பை உருவாக்கியது.
இந்நட்பே இவர்களுக்கு அளவிடமுடியாத சிறப்பை உண்டாக்கியது. இதனால் அன்பு, விருப்பத்தையும், விருப்பம் பிறரிடம் பழகும் நட்பையும் உண்டாக்கும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
அன்பீனும் ஆர்வம் உடைமை; அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அன்பு = (சுற்றத்தாரிடத்தில் காட்டிய) அன்பு
ஆர்வமுடைமை = பிறரிடத்தும் விருப்பம் உடைமை ஆகும் தன்மை
ஈனும் = கொடுக்கும்
அது = விருப்பமுடைமை
நண்பு என்னும் = (யாவரும்) சிநேகம் என்று சொல்லப்படும்
நாடார்ச்சிறப்பு = அளவிடமுடியாத மென்மையை
ஈனும் = கொடுக்கும்
கருத்து: அன்பு, விருப்பத்தையும் விருப்பம் நட்பையும் உண்டாக்கும்