66வது தேசியதுப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிலா ராஜா முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்..! | நா.சதீஸ்குமார்
66வது தேசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய தலைநகர் டெல்லியில் 66வது தேசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா, தங்கம் வென்று அசத்தினார். இந்த தொடரில், தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து இரண்டாவது முறையாக நிலா ராஜா தங்கம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்தது.
கடந்த நவம்பர் 20-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலா ராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிலா ராஜா, தங்கம் வென்றதில் பெருமை என்றும், ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது, டெல்லியில் நடைபெற்ற 66ஆவது தேசிய துப்பாக்கிச்சூடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பெண்கள் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்றதற்கு, முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.