தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது..! | நா.சதீஸ்குமார்

 தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது..! | நா.சதீஸ்குமார்

தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது.. இந்த கூட்டத்தில், கவர்னர் திருப்பி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே, அவருக்கும் தமிழக அரசுக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி கொண்டிருக்கிறது..

திமுக ஆட்சியில், ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும்போது, பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முக்கிய மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இப்படி அனுப்பி வைக்கும் மசோதாக்களில் சுமார் 20 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் வந்தார். அதில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டு விட்டார். எனவே, கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் குறித்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போடக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு, அவசரம் அவசரமாக ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார்.. இந்த 10 மசோதாக்களில் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை என்று கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, இதுகுறித்து, தமிழக அரசு உடனடியாக ஆலோசனையிலும் இறங்கியது..

மறுபடியும் ஒரு சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி, இந்த மசோதாக்களை எல்லாம், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அதன்படியே, இன்றைய தினம் 18ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு சொல்லும்போது, “ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் நாளை சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்படும்” என்று அறிவித்தார்.

ஆனால், இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், பாஜக பங்கேற்காது என்ற தகவல் வெளியானாலும், நாங்கள் நிச்சயம் சட்டசபையில் பங்கேற்போம் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக தெரிகிறது. அந்தவகையில், இன்றைய தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், பரபரப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிறது. இன்றையதினம், ஒவ்வொரு மசோதாவையும் சபாநாயகர் அப்பாவு, மெஜாரிட்டி அடிப்படையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற கோருவார்.. அதன்படியே, 10 மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என்றும், 10 மசோதாக்களும் சட்டசபை கூட்டம் முடிந்ததுமே, சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...