வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..! | நா.சதீஸ்குமார்
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அது போல் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இந்த நிலையில் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
அந்த வகையில் மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அதன் எதிரொலியாக வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை நேற்று எட்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வினாடிக்கு 4000 கனஅடி நீர் வைகை ஆற்றில் பாய்கிறது. இதனால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரில் ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அது போல் வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்லூர் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.