கேரளாவில் அச்சுறுத்தும் “நிபா” வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம்..!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் மேலெழுந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி உயிரிழந்தனர். இவர்கள் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர்.
அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சிலரும் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே மாநிலம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இப்போதும் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் தீவி்ரமாக பரவி வருகிறது. இது நிபா வைரஸ் பாதிப்பாக இருக்குமோ என்கிற அச்சமும் மேலெழுந்திருக்கிறது. மறுபுறம் இது தொடர்பான வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. இதற்கேற்றார் போல் மாநில அரசும், நிபா வைரஸின் இரண்டாவது அலை வர வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் இந்த பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த முயற்சியில் ஒரு பகுதியாக இன்று முதல் கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்த மையத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நிபா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக வேலை பார்த்தவர்கள் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.