காற்று மாசுபாடு அதிகரிப்பதால் டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை..!
தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை தவிர்க்க, காற்று தர மேலாண்மை ஆணையம் பிஎஸ் III (BS III) மற்றும் பிஎஸ் IV (BS IV) வகை டீசல் பேருந்துகளை நாளை முதல் டெல்லி மாநகரில் இயக்க தடை விதித்துள்ளது. பிஎஸ் VI (BS VI) வகை சிஎன்ஜி (CNG இயற்கை எரிவாயு), மின்சாரம், மற்றும் டீசல் பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும். இந்த விதிமுறையின் மூலம் 60 சதவித பேருந்துகள் இயக்கப்படாது. இந்த விதிமுறை பயணிகளிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 5000 பயணிகள் பேருந்துகள் தினமும் டெல்லியிலுள்ள ஆனந்த் விஹார், சராய் காலே கான், காஷ்மிரி கேட், மற்றும் இதர பேருந்து நிலையங்களுக்கு வருகின்றன.
அதில் உத்தராகண்ட் போக்குவரத்து கழகம் சார்பில் 300 பேருந்துகளும், உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து 1000 பேருந்துகளும் டெல்லிக்கு வருகின்றன. 60 சதவிதம் பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV வகை பேருந்துகள் டெல்லிக்கு வருகின்றன. அதேபோல் டெல்லியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பிஎஸ் ||| மற்றும் பிஎஸ் IV வகை டிராவல்ஸ் பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உத்தரப் பிரதேச மற்றும் ராஜஸ்தான் என்சிஆர்(NCR) அல்லாத பகுதியிலிருந்து டெல்லியின் என்சிஆர் பகுதிக்கு வரும் பழைய டீசல் பேருந்துகளை காற்று தர மேலாண்மை ஆணையம் அப்புறப்படுத்தியுள்ளது. காற்றின் தர மேலாண்மை ஆணையம் பிஎஸ் VI (BS VI) ரக சிஎன்ஜி (CNG இயற்கை எரிவாயு), மின்சாரம், மற்றும் டீசல் பேருந்துகளை தற்காலிக ஏற்பாடாக டெல்லியில் இயக்க அனுமதித்துள்ளது என்சிஆர் பகுதியிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சிஎன்ஜி மற்றும் மின்சார பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தற்போது பிஎஸ் VI வகை பேருந்துகளை வாங்கியுள்ளது. பண்டிகை காலம் என்பதால் பயணிகள் சிரமத்தை தவிர்க்க பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV வகை பேருந்துகள் இயக்கும் விதிமுறைகளில் ஒரு சில தளர்வுகள் அளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில அரசு காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
உத்தரபிரதேச போக்குவரத்து கழக இயக்குநர் கேசரி நந்த் சவுத்ரி கூறுகையில், “டெல்லிக்கு இனி அதிகமாக பிஎஸ் VI வகை பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக பிஎஸ் VI வகை பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலால் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் டெல்லி என்சிஆர் பகுதியில் வாழும் கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்கள் தீபாவளி மற்றும் சாத் பண்டிகையின் போது அதிகளவில் பயணம் செய்வர்” என கூறினார்.