நட்பின் வலி
_________
பிரியமான தோழி
அடிமனதில் இருந்து
அடுக்கடுக்காய் மலர்கிறது
நம் நேற்றைகளின்
கண்ணீர் பூக்கள் .
நம் இருவரின் பால்யம்
கரைந்த வீதிகளின்
வெளிர் விரிப்பும்
நம் சாயங்காலப் பொழுதுகளைக்
கரைத்த
கிராமத்து வீடுகளின்
தாயக் கட்டைத் திண்ணைகளும்
அக்கம் பக்க வானரங்களோடு
க.ண் பொத்தி விளையாண்ட
கதவு இடுக்குகளும்
சிரிக்கச் சிரிக்கக்
கதை பேசி மகிழ்ந்த
ஆற்றங்கரை கல்த் திட்டுகளும்
திருட்டுத்தனமாய்
நாம் எலந்தம்பழம்
உலுக்கிய
பட்டாளத்தார் வீட்டுக் கொல்லையும்
அந்த நாமக்கார
கணக்கு வாத்தியார் வீட்டுல
நாம களவாண்ட
குட்டிக் குட்டி கனகாம்பரச் செடிகளும்
பென்சில் டப்பாவில்
கலர் கலரா சேமித்த
கண்ணாடி வளையல்களும்
எட்டுக்குடி சித்ராப் பவுர்ணமி
திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்து போன
உன் ஒற்றைக் கொலுசும்
உசுருக்குள்ள இன்னும்
பொக்கிசமாப் பொதஞ்சி கெடக்கு.
கடைசி கடைசியாய்
அந்தப் பாழாய்ப் போன
ஞாயித்துக் கிழமை
தோழிகள் புடைசூழ
ஊருணியில் குளிக்க
ஒண்ணாதான் போனோம்..
குளிச்சி முடிச்சி
நாங்க கரையேறிட்டோம் |
இன்னும் கூட கரையேறாத
உனக்காகத்தான்
மனசு வலிக்க வலிக்க
இப்போதும் காத்திருக்கேன்.