அப்பா

 அப்பா
அப்பா

– ‘பரிவை’ சே.குமார்.
அப்பாவோட கடைசியாகப் பேசி நாலைந்து வருடம் இருக்கும். அவர் வீட்டுக்குள் என்றால் நான் வெளியில் என்பதாய்த்தான் நாட்கள் நகர்ந்தது. எதாயிருந்தாலும் அம்மாவிடம் சொல்ல, அவள்தான் அப்பாவிடம் எடுத்துச் செல்வாள். எங்களுக்குள் ஏனோ நெருப்புச் சூரியன் சூழ்ந்து கொண்டுவிட்டான்.
வீட்டு வேப்பமரத்தடியில் தன் வயதொத்த பெருசுகளுடன்  சப்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பவர் என் தலை தெரிந்ததும் “கோவில் விசயம் என்னாச்சுப்பா…? இந்த வருசம் தேரோட்டம் நடக்குமா..?” என்று பேச்சை மாற்றுவார்.
இப்படித்தான் ஒரு மாதம் முன்னால வீட்டுக்கு வந்த தூரத்து சொந்தக்காரப் பெருசுக்கிட்ட “அவனும் வேலைக்கு முயற்சிதான் பண்ணுறான்… படிச்ச படிப்புக்கு வேலை கெடக்கணுமில்ல… பெரிய மாப்ள கூட கோயமுத்தூருக்கு வரச் சொல்றாரு… இவனுக்கு மெட்ராசுப் பக்கம் போகத்தான் ஆசையிருக்கு… எங்கொழுந்தியா மவன்… அதான் இந்த ஆத்தங்குளத்துப்பய மெட்ராசுல நல்ல வேலையில இருக்கான்… அவங்கிட்ட கூட கேட்டிருக்கானாம்… அடுத்த வாரத்தில போயிருவான்”னு சொல்லிக்கிட்டு இருந்தவரு நான் உள்ள நுழைஞ்சதும் “வேற என்ன மாப்ள விசேஷம்..?” அப்படின்னு பேச்சை மாத்திட்டாரு.
வந்தவர் கிளம்பும் போது அப்பாவும் கடைவீதி வரைக்கும் பொயிட்டு வாறேன்னு எந்திரிச்சிப் போனதும் அம்மாக்கிட்ட போயி, “இங்கேரு… வர்றவன் போறவனுக்கிட்ட எல்லாம் நான் வேலை தேடிக்கிட்டு இருக்கேன்னு இவரைச் சொல்லச் சொன்னாகளா… பேசுறதுக்கு வேற எதுவுமே கிடையாதா… தேவையில்லாம பேசக்கூடாதுன்னு சொல்லி வையி…”ன்னு கத்தினேன்.
“இப்ப அவரு என்ன சொல்லிட்டாருன்னு இப்புடிக் கத்துறே… படிச்ச படிப்புக்கு வேலை கிடக்கணுமேன்னுதானே சொன்னாரு… எப்பப் பாத்தாலும் அவரக் குத்தஞ் சொல்லலைனா உனக்கு தூக்கம் வராது. ஊரு உலகத்துல இருக்க அப்பன் மவனுகளப் பாரு… என்னவோ இவரு நல்லாத்தான் எதுக்கெடுத்தாலும் முறைச்சிக்கிட்டு நிக்கிறாரு…” அப்படின்னு அம்மாவும் பதிலுக்கு கத்தினாள்.
“ஆமா… அவரு சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிக்கிட்டே இருக்காதே… ஒரு நாளைக்கி உன்னையும் மட்டம் தட்டிப் பேசுவார்… அன்னைக்கும் இப்படித்தான் தலையாட்டிக்கிட்டு இருக்கணும்…”
“போடா… அவரு எப்ப என்னைப் பத்தி நல்லாப் பேசியிருக்கார்… அவரோட குணமே நமக்கெதிரே தூக்கிப் பேச மாட்டார்… நம்ம இல்லைன்னா அந்த இடத்தில நம்மளை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்… தெரிஞ்சிக்க…”
“ஆமா… பேசிப்புட்டாலும்…. கிலுகிலுன்னுதான் இருக்கும்…” என்றபடி நகர்ந்தேன்.
நண்பர்களுடன் சுற்றிவிட்டு இரவு திரும்பும் போது அப்பா தூங்கிக் கொண்டிருந்தார். சப்தம் எழுப்பாமல் மெல்ல வீட்டுக்குள் சென்றேன். “டேய் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்… இம்புட்டு நேரம் என்னடா பண்ணுனே… எப்பப்பாரு ராத்திரி பண்ணென்டு மணிக்கு திருட்டுப்பய மாதிரி வர்றே…” தூக்கக் கலக்கத்தில் பேசினாள் அம்மா.
“ஏம்மா கத்துறே… என்ன தலைவரு உங்கிட்ட கத்துனாராக்கும் அதை எங்கிட்ட திருப்புறியாக்கும்… அட அவரு என்னைக்குக் கத்தாம இருக்காரு… பிரண்ட்ஸோட வெளியில சாப்பிட்டேன்… எனக்கு வேண்டாம்…”
“அவங்களிட எதையாவது பொறக்கித் தின்னுட்டு வா… உனக்குன்னு தினமும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் பாரு… என்னைச் சொல்லணும்… அந்த சோத்தை எடுத்து தண்ணி ஊத்தி வச்சிட்டு, குழம்பை எல்லாம் நல்லா மூடி வச்சிட்டுப் படு…”
மறுநாள் எட்டு மணிக்கு தங்கை தட்டி எழுப்ப, “ஆபீசுக்காடீ போகப் போறேன்… தூங்க விடுடீ…” கடுப்போடு சொல்லிவிட்டு போர்வையை எடுத்து இழுத்து மூடினேன்.
“சுந்தர மாமா வந்திருக்காரு… அப்பாவோட பேசிக்கிட்டு இருக்காரு… அம்மா உன்னைய எழுப்பச் சொன்னாக…”
“போச்சு… அந்தாளு வந்தாலே எதாச்சும் போட்டு விட்டுட்டுப் போறதுதானே பொழப்பு… என்னவெடி வச்சிருக்காரோ… அவரைப் பாத்து நா என்ன பண்ணப் போறேன்… அந்தாளு போனதும் சொல்லுடீ…” எனத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.
“எருமை… எம்புட்டு நேரம் தூங்குவே… அம்மா எழுப்பச் சொன்னாங்க… எந்திரிச்சுத் தொலை… இல்லேன்னா அம்மா தண்ணோயோட வருவாங்க எருமையைக் குளிப்பாட்டா…”
“ம்… நேரமுடி… நீயெல்லாம் என்னைப் பேசணுங்கிறது விதி… எனக்கும் ஒரு காலம் வரும்டீ… அப்ப இருக்கு உனக்கு குந்தானி…”
“அந்தக் காலம் வரும்போது பாப்போம்… இப்ப எந்திரிடா தடிமாடு…”
எழுந்து முகம் கழுவ பாத்ரூம் சென்றவன் மாமாவும் அப்பாவும் பேசிக் கொண்டிந்ததில் என் பெயர் அடிபட, அவர்களுக்குத் தெரியாமல் சன்னம் மறைவில் நின்றபடி அவர்களின் பேச்சைக் கேட்டேன்.
“இல்ல மச்சான்… அவனுக்கு இங்க எதாச்சும் வேலை கிடைக்கும்…” என்றார் அப்பா.
“வேலை கிடைக்கும் மச்சான்… ஆனா நம்ம முருகன் கம்பெனியில ஆள் தேவையாம்… நல்ல கம்பெனி… நல்ல சம்பாத்தியம்… இப்ப முருகன் ரெண்டு மாடி வீடு கட்டி, அக்கா, தங்கச்சி எல்லாம் கல்யாணம் பண்ணி வச்சிட்டான்… அவனுக்கும் வர்ற தையில கல்யாணம்… அவந்தான் மாப்ளையோட பயோடேட்டா வாங்கிட்டு வரச்சொன்னான். உடனே கிடைச்சிடும்ன்னு சொன்னான்.” மாமா என்னைப் பார்சல் பண்ண ஐடியாச் சொன்னார். அப்பா கண்டிப்பா என்னை பார்சல் பண்ண ஒத்துக்குவாரேன்னு என்ன சொல்றாருன்னு கேட்க காதைத் தீட்டிக் கொண்டேன்.
“நீ சொல்றது சரிதான் மச்சான்… வெளி நாட்டுல லட்சம் லட்சமாச் சம்பாதிக்கலாம்… நான் வச்சிருக்கது ஒரே புள்ளை… இங்கன பக்கத்துல வேலை பாத்தான்னா… உடம்பு கிடம்பு சுகமில்லைன்னா நாங்க ஓடிப்போயி பாத்துக்குவோம்… எங்களுக்கு ஒண்ணுன்னா அவன் ஓடியாந்திருவான்… அக்கா தங்கச்சிக்கு ஒண்ணுன்னாலும் ஓடிவருவான்… வெளிநாட்டுல பிள்ளையை விட்டுட்டு அவனுக்கு லேசா முடியலைன்னாலும் நாம கஷ்டப்பட்டு… நாங்கூட கஷ்டத்தை வெளியில காட்ட மாட்டேன்… ஆனா உங்க தங்கச்சி கைக்குள்ளயே அவன வச்சி வளத்துட்டா… அவ சாப்பிடாம அழுதுக்கிட்டு கிடப்பா… அதைப் பாக்குற சக்தி எனக்கில்ல மச்சான்… ஏன்னா புள்ளக, பொண்டாட்டி எல்லாரையும் வாத்தியார் வேல பாக்குறதால பக்கத்துலயே வச்சிருந்துட்டேன்…  பொட்டப்புள்ளைங்களைக் கட்டிக் கொடுத்துட்டு பிரிவுல படுற பாடே சொல்லி மாளாது… இதுல இவனையும் கண்காணாத ஊருக்கு அணுப்புறதுன்னா… முடியாது மச்சான்… பிரிவுங்கிறது எங்களை ரொம்ப பாதிக்கும் மச்சான்… பணம் என்ன மச்சான் பணம்… நாஞ்சம்பாரிச்சி வச்சிருக்கேன்… ரிட்டையர்மெண்ட் பணம் வேற வரும்… அவனுக்கு வேலை கிடச்சா இங்கயே என்னைவிடக் கூடச் சம்பாரிச்சிருவான்…” அப்பாவின் மனது புரிந்த போது கீரியும் பாம்புமாய் நின்றது வலித்தது.
“ம்… இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னால ஒரு நாலஞ்சி வருசம் இருந்துட்டு வரட்டுமே… அப்புறம் இங்க இருக்கலாம்…” மெல்ல இழுத்தார் மாமா.
“இந்தாளு பிளைட்டு ஏத்தாம விட மாட்டாரு போல….” கடுப்பில் பல்லைக் கடித்தேன்.
“நாலு வருசம் அங்க போயி இருக்கணுமின்னு அவனுக்கு என்ன மச்சான் தலையெழுத்து… நாலு வருசத்துக்கு அப்புறம் இங்க வந்து தேடுற வேலையை இப்பவே இங்க தேடிக்கிட்டான்னா நாலஞ்சி வருசத்துல செட்டிலாயிருவானுல்ல… எனக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப விருப்பமில்லை மச்சான்…. அவனைத் திட்டுவேன்… வேலை கிடைக்கலைன்னு கத்துவேன்… அவனோட பேசாத மாதிரி நடந்துப்பேன்… அதெல்லாம் பெத்தவனுக்கு முறையிலதானே ஒழிய… அவனைத் திட்டணுமின்னும் இல்லை… அவனோட பேசக்கூடாதுன்னும் இல்லை… எம்புள்ள அவனோட வாழ்க்கையில ஜெயிக்கணும்… ஜெயிப்பான் மச்சான்… நான் சாகுற வரைக்கும் அவன் எங்கிட்ட இருக்கணும்… வெளிநாட்டுல அவன் இருக்கும் போது நான் செத்து அவன் வர்ற வரைக்கும் போட்டு வச்சிருந்து… அதெல்லாம் வேண்டாம் மச்சான்… எம்புள்ள எனக்கிட்டயே இருக்கட்டும்… என்னோட உயிர் போறது அவனோட மடியா இருந்தாப் போதும் மச்சான்… அந்தக் கொடுப்பினை எனக்குப் போதும் மச்சான்…”
“என்ன மச்சான்… சாவு கீவுன்னு… நீங்க நூறு வருசம் வாழுவீங்க… நீங்கதான் எங்க குடும்பத்துக்கெல்லாம் வேர்… மாப்பிள்ளை இங்கயே இருக்கட்டும்… நம்ம சுந்தரி புருஷன்கிட்ட மாப்ள பயோடேட்டா குடுத்து வைப்போம்… அவரு கம்பெனியில எப்படியும் சேத்து விட்டுடுவாரு…”
“என்னடா… ஒட்டுக் கேக்குறியா… போ போயி மூஞ்சியைக் கழுவிட்டு மாமாவை வாங்கன்னு சொல்லிட்டு வா….” பக்கத்தில் வந்து காதைத் திருகியபடி கேட்டாள் அம்மா.
“அம்மா… “
“என்னடா…?”
“அப்பா மனசுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியாம அவரை எதுத்துக்கிட்டே நின்னிருக்கேம்மா… சாரிம்மா…”
“அவரு பாசத்தை எப்பவுமே நமக்கிட்ட காட்ட மாட்டாருடா… ஆனா அவருக்குள்ள நாமதான் இருக்கோம்… இப்ப வாச்சும் புரிஞ்சதா… போ… போயி மூஞ்சியைக் கழுவிட்டு மாமாவை வாங்கன்னு சொல்லு… இல்லேன்னா எங்கண்ணன் மாப்ள மருமகள்ல்லாம் பேசுறோம்ன்னுதான் நிக்கிறாகன்னு பொலம்பிட்டுப் போகும்…” என்றாள்.
அம்மா சொல்வது சரிதான்… சின்ன வயதில் என் மீது அவ்வளவு பாசமாக இருந்தவர், இந்த வயதில் நான் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்பதனால் என்னைத் திட்டினாலும் பாசம் அவரிடம் இருக்கத்தானே செய்கிறது. நாந்தான் வயசு கொடுக்கிற தினவுல  அவரைத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டு முறைச்சிக்கிட்டுத் திரியிறேன். அப்பாவோட மனசுக்குள்ள நாங்கள்லாம் இருக்கிறதை அவர் வெளிக்காட்டாமல் வாத்தியாராவே வீட்டுக்குள்ளும் இருந்திருக்கார் என்று நினைத்தபடி முகம் கழுவி, வெளியில் போய் “வாங்க மாமா” என்றேன்.
“என்ன மாப்ள… உங்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புற விஷயமாத்தான் மச்சானுக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்… ரெடி பண்ணிருவோமா..?” என்றார்.
அப்பா நான் என்ன சொல்றேன்னு பார்க்க என்னை ஏறிட்டார்… “அப்பா சரின்னு சொன்னா ஏற்பாடு பண்ணுங்க மாமா” என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன் உதட்டில் புன்னகையுடன்.
 
– ‘பரிவை’ சே.குமார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...