எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 15 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 15 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 15

ம்சவேணி அனுமதிக்கப்பட்டாள் மருத்துவமனையில். அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டு அறிக்கை வந்ததில் அவளுடைய இதயத்தில் அடைப்புகள் இருப்பது தெரிந்தது. அடைக்கும் தாழ் இல்லாத அன்பு மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அம்மாவின் இதயத்தில் அடைப்பும் இருப்பது ஆழமான அதிர்ச்சியை தந்தது குமணனுக்கு.

எதுவும் தெரியாதக் குழந்தை ஏக்கத்துடன் எல்லாவற்றையும் அம்மா என்று நினைத்து பார்த்துபார்த்து ஏமாறுவதைப்போல் ஆஸ்பத்திரி ஆயாகூட அவனுக்கு அந்த மருத்துவமனை டீனாகத் தெரிந்தாள். மருத்துவர் வந்து பார்ப்பதற்குள் அறைக்குள் வரும் அத்தனைப் பேரையும் டாக்டர்களாகவே எண்ணி பதற்றத்துடன் பார்த்தான்.

எதுவும் இல்லை உன் தாய்க்கு வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போ என்று சொல்ல மாட்டார்களா என ஏங்கினான்.

எதுவும் இல்லாவிட்டாலே ஏதேதோ காரணம் காட்டி ஏகத்துக்கும் பில் போடும் மருத்துவமனை எல்லாவியாதிகளையும் உறவினர்களைப்போல் வைத்துக்கொண்டு வந்த இதய அடைப்பை சும்மாவிடுவார்களா? அவர்களுடைய அலமாரியை அடைத்துக்கொள்ள அரிய வாய்ப்புகளை விடுவார்களா என்ன?

அதுவும் ஆஸ்தி உள்ள பார்ட்டி என்றால் பாட்டியைக் கூட பல்லாண்டு வாழவைக்கும் முயற்சியில் இறங்கிவிடக் கூடியவர்கள் அறுபதே வயதான அம்சவேணியை வைத்து அடுத்தடுத்த மருத்துவமனை முன்னேற்றங்களைப் பார்த்துவிட மாட்டார்களா?

“ஒண்ணும் பயப்படவேண்டாம். ஆபரேஷன் பண்ணி அடைப்பை சரி செய்யனும். பைபாஸ் சர்ஜரியில பல்லாயிரம்பேரை பிழைக்க வச்சவர் டாக்டர் சூரியபிரகாஷ்  மருத்துவ மந்திரவாதி. கத்திரிக்கோலைக் கையில் எடுத்தாலேபோதும் அடைப்புகளெல்லாம் அலறிக்கிட்டு கரைஞ்சு ஓடிடும்” அடுத்தவர் பயத்தை அற்புதமாக போக்கும் வேலையை செய்தார் ஜுனியர் டாக்டர்.

உண்மைதான். காலா காலருகே வாடா உன்னை எட்டி உதைக்கிறேன், என பாரதியார் தன் உயிரை எடுக்க  வரும் காலனைப் பார்த்து சொன்னார். ஆனால் சூரியபிரகாஷ்  தன் பேஷன்ட்டுக்களின் காலருகே வரும் காலனை எட்டி உதைத்ததோடல்லாமல் சித்திரகுப்தனின் தலையில் குட்டி அவர்களின் ஆயுட்காலத்தை திருத்தி எழுதவைத்தவர்.

அவர் அம்மாவிற்கு ஆபரேஷன் செய்யப் போகிறார். அவரைப் பொறுத்தவரை ஆபரேஷன் செய்வது அல்வா வெட்டுவதைப்போல். அவனைப் பொறுத்தவரை அவனையே வெட்டுவதைப்போல். பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூடப்பையனாய் பயமாக கண்கலங்கினான்.

பக்கபலமாக நின்றவள் கோதைதான். ‘என்ன நீங்க சின்னக்குழந்தைமாதிரி. இந்த காலத்துல இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை’

இவள் என்னமோ ஆயிரம் ஆபரேஷன்களை ஆபரேஷன் தியேட்டரிலிருந்து பார்த்ததைப்போல் பேசுகிறாளே என்று தோன்றினாலும் அவளுடைய அருகாமையும் ஆறுதல் பேச்சும் நிறைய தெம்பைத் தருவதாய் இருந்தது.

சும்மா ஒரு சோகம் வந்தாலே தாங்கிப் பிடிப்பவள் அம்மா. அம்மாவிற்கே பிரச்சனையென்றால் யார் தாங்கிப் பிடிப்பார்? சத்தியமாக மனைவிதான். தாய்க்குப்பின் தாரம்தான். கோதை தாங்கிப்பிடித்தாள்.

ம்சவேணிக்கு அறுவைசிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டன.

அனைவரின் கண்களுக்கும் அவள் நினைவை இழந்துதான் தெரிந்தாள். ஆனால்…அவளுக்குள்?

இதயத்தில்தான் அடைப்பு.இயக்கத்தில் அதில்தான் தடை. ஆனால்  மூளை?  சுற்றிலும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள். அவளுக்குத் தெரியவில்லை.

உடலை சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள். அவற்றை இயக்கி கவனிக்கும் மானிட்டர்கள். அவளுக்குத் தெரியவில்லை.

ஆபரேஷனை வழிநடத்தும் பேச்சுக்கள். அவளுக்கு கேட்கவில்லை. ஆனால் மூளை…?

மூளை மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது, அதை சுற்றி நடப்பது, அது பேசிக்கொண்டிருப்பது அவளுக்கு மட்டுமே கேட்டது.

‘கடவுளே… ஏன் என்னைக் கொண்டு வந்து இங்கே இப்படி முடக்கிப் போட்டாய். என் இதயத்தில் அடைப்பா? எப்படி எப்படி இது சாத்தியம்? அழுக்கு படிந்த இதயங்களில் இருக்கவேண்டிய அடைப்புகள் அன்பும் கருணையும் கொண்ட என் இதயத்தில் எப்படி வரலாம்?

கோதைக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? இத்தனை வசதிபடைத்த வாழ்க்கையை ஒரு ஏழைப் பெண்ணிற்கு கொடுத்ததற்காக நானே என் பெரிய மனதை பாராட்டிக் கொண்டேனே. ஆனால் அவளைப் பொறுத்தவரை மனநலம் சரியல்லாமல் இருந்த ஒருவனை ஏமாற்றிக் கட்டிவைத்துவிட்டேன் என்ற எரிச்சலா?

பணத்திமிரால் ஏழை வீட்டுப்பெண்ணை ஏமாற்றியதாக எண்ணி என்னைப் பழி வாங்க நினைக்கிறாளா? அதனால்தான் பழைய காதலை தொடர நினைத்து என் மகனை மறுபடியும் மனநோயாளியாக்க முடிவுசெய்துவிட்டாளா?

எல்லாவற்றையும் தெரிந்துக்கொண்ட பின்னும் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே. செய்ய முடியாமல் கடவுள் ஏன் என்னை இப்படி தண்டித்துவிட்டான்?

கடவுள் கூட அநியாயத்திற்கு துணைப்போகிறானா? நான் இப்படி ஆஸ்பத்திரியில் வந்து படுக்காமலிருந்திருந்தால்…எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுக் கட்டியிருப்பேனே. முடியைப் பற்றி முகத்தில் அறைந்து தெருவில் தள்ளியிருப்பேனே.

ஆனால்;என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே. இப்படி உடம்பை ஒன்பது பத்துபேர் சுற்றி நின்று ஊசியும் மருந்தும் ஏற்றி கிழித்து கூறுபோட கொடுத்துவிட்டு என் ஆத்மா புலம்புகிறதே.எல்லாத் துடிப்புகளையும் மானிட்டர் முலம் கவனித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் என் ஆத்மா அவளை அப்படியே இழுத்துப் போட்டு அடித்து துவம்சம் செய்ய துடிப்பதை அறிவார்களா?

என்னைக் காப்பாற்ற போராடும் மருத்துவர்களே…ஆபத்தில் இருப்பது நானில்லை. என் மகன்தான் என்பதை அறிவீர்களா? அவனைக் காப்பாற்றுங்கள். அவனைக் காப்பாற்றுங்கள். என் இதய அடைப்பை நீங்கள் சரி செய்ய ஆபரேஷன் செய்யாவிட்டாலும் கூட நான் சாகமாட்டேன். எழுந்துவருவேன். தன் மகனை காக்க நினைக்கும் எந்தத் தாயும் சாக மாட்டாள். ஒவ்வொரு தாய்க்கும் சாவு என்றால் அவள் பிரசவத்திலேயே போய் சேர்ந்திருப்பாள். தன் பால் குடித்துத்தான் ஒரு ஜீவன் உலகில் உயிர் வாழ காத்திருக்கிறது என்ற உந்துதல் மட்டுமே ஒவ்வொரு பெண்ணையும் பிரசவத்திலிருந்து பிழைத்து எழ வைக்கிறது. தன் குழந்தையை காக்க போராடும் தாய்க்கு மரணம் இல்லை. மரணம் அவளை நெருங்க முடியாது. என்னை விட்டுவிடுங்கள். என் மகனைக் காப்பாற்றுங்கள்.

அவளுடைய ஆன்மா ஆபரேஷன் தியேட்டரில் அலறிக்கொண்டிருப்பது பாவம் அறிவியல் ஆட்சி செய்துக்கொண்டிருந்த அந்த மருத்துவர்களின் காதுகளில் விழவில்லை.

அம்சவேணிக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. தான் கண்விழித்து வரும்போது எல்லாம் தலைகீழாக மாறியிருக்கும் என்று நினைத்தாள்.

குமணனை கோதை லதாவை சந்திக்க வைத்து பைத்தியமாக்கி வைத்திருப்பாள் என நினைத்திருந்தாள். தான் இப்படி படுத்துவிட்டது கோதையின் திட்டங்களுக்கு நல்ல வசதியாகப் போய்விட்டதாக நினைத்திருந்தாள்.

ஆனால்….. ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு வந்தபோது எல்லாம் சாதாரணமாக எப்பொழுதும் போலவே இருந்தது. மருத்துவமனையிலும் சரி வீட்டிற்கு வந்த பிறகும் சரி கோதை அம்சவேணியை விட்டு அங்கே இங்கே என எங்கேயும் நகரவில்லை. அம்சவேணியின் எல்லாத் தேவைகளையும் அவளே கவனித்துக் கொண்டாள். பெற்ற குழந்தையை தாய் கவனித்துக்கொள்ளும் பாசத்துடன் கவனித்துக்கொள்ளும் அவளைப் பற்றி தவறாக நினைக்க யாருக்குமே மனமே வராது. அந்தளவிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள் கோதை.

அம்சவேணிக்காக மருத்துவர் கொடுத்திருந்த உணவு அட்டவணைக்கு ஏற்ப அவளே பார்த்துப் பார்த்து சமைத்ததோடல்லாமல் அருகே இருந்தும் ஊட்டிவிட்டாள்.

வேலைக்காரியை கிட்டேக் கூட நெருங்கவிடுவதில்லை. வேலைக்காரியே அம்சவேணியிடம் கோதையைப் பற்றி புகழ்ந்து தள்ளினாள். “அம்மா…நீங்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கீங்க அதான் இப்படி ஒரு மருமக கிடைச்சிருக்கு உங்களுக்கு. எப்படி கவனிச்சுக்குது பாருங்க.”

அம்சவேணியைப் பார்க்க வந்த முத்துலெட்சுமியும் இதையேத்தான் சொன்னாள். “அம்சா…உன் மருமகளைப் பார்த்தா பொறாமையா இருக்கு. எப்படி உன்னைக் கவனிச்சுக்கறா. எனக்கும்தான் ஒரு மருமக இருக்காளே. ஒரு காபி கூட போட்டுத் தரமாட்டா?”

எல்லா புகழுக்கும் நீ லாயக்குத்தானா என்பதைப்போல்தான் கோதையைப் பார்க்க முடிந்தது. எல்லாம் நாடகமோ? நான்  குணமடையும் வரை பொறுமையாக இருக்கிறாளோ? இந்த இக்கட்டான நேரத்தில் குமணனையும் லதாவையும் அவளால் சந்திக்க வைக்க முடியவில்லையோ?

இரவில் கூட கோதை குமணனின் அறையில் படுத்துக்கொள்ளவில்லை. அம்சவேணியுடன் அவளுடைய அறையிலேயே படுத்துக்கொண்டாள். வேலைக்காரி சுந்தரி கூட சொல்லிப் பார்த்தாள். ‘ராத்திரியில அம்மாவை நான் கவனிச்சுக்கறேன். நீங்கபோய் ஐய்யாவோட படுத்துக்கங்க” என்றாள். ஆனால் கோதை மறுத்துவிட்டாள்.

“இல்லை…உன்னால அத்தையை கவனிச்சுக்க முடியாது. நான் பார்த்துக்கறேன் “என்று மறுத்துவிடுவாள்.

அம்சவேணி இரவெல்லாம் உறங்காமல் கொட்ட கொட்ட விழித்திருப்பாள். ஆனால் கோதையோ அடித்துப் போட்டதைப்போல் உறங்கிக் கொண்டிருப்பாள். அதிகாலையிலிருந்து செய்த வேலையின் அலுப்பு அவளை அப்படி உறங்க வைத்திருக்கும். ஆனால் நடுஇரவில் எழுந்து தலையணையை முகத்தில் அழுத்தி தன்னைக் கொன்றுவிடுவாளோ என்றெல்லாம் அம்சவேணி கற்பனை செய்வாள்.

அத்தை..இந்த ஆப்பிள் ஜுஸைக் குடிச்சுட்டுப் படுத்துக்கங்க.” மாமியாரை கைத்தாங்கலாக எழுப்பி உட்கார வைத்துக் குடிக்க வைத்தாள் கோதை.

‘விஷம் ஏதாவது கலந்திருப்பாளோ?’ ஒவ்வொரு முறையும் இப்படித்தான் உள்ளுணர்வு சொல்கிறது. ஆனால் எந்த ஆதாரத்தை வைத்து மறுப்பது. தவிர தானே எதுவும் செய்துக்கொள்ளக் கூடிய நிலையிலா அவள் இருக்கிறாள்? சொல்லப்போனால் அவளுடைய உயிரே கோதைக் கையில்தான் இருக்கிறது. விதிப்படி நடக்கட்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள்.

ஆப்பிள் பழரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கும்போது அறைக் கதவைத் திறந்துக்கொண்டு குமணன் வந்தான்.

“அம்மா..எப்படியிருக்க?”கேட்டவாறே அருகேயிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அம்சவேணி விரக்தியாக சிரித்தாள்;. மருமகளின் கைபாவையாக இருப்பதாக சொல்ல நினைத்தாள்.  என்ன நடக்குமோ என ஒவ்வொரு நிமிடமும் திக்திக்கென இருப்பதாக சொல்ல நினைத்தாள்.

“அம்மா உன்னைப் பார்க்க நம்ம வீட்டுக்கு இன்னைக்கு ஒரு கெஸ்ட் வரப்போறாங்க. யாருன்னு சொல்லு”

“யாரு கோதையோட அம்மாவா? அவங்கதான் போனவாரம் வந்துட்டுப் போய்ட்டாங்களே”

“அவங்க இல்லை.”

“பின்ன யாரு உன் ஃபிரண்டா?”

ஃபிரண்ட். அப்படியும் வச்சுக்கலாம்;. முன்னாள் காதலியை இப்ப ஃபிரண்ட்டுன்னுதானே சொல்லனும்.”

இதைக்கேட்டு அதிர்ந்தாள் அம்சவேணி. ‘முன்னாள் காதலியா? என்ன சொல்கிறான் இவன்?’

“என்னப்பா..சொல்றே?”

“ஆமாம்மா. என்னோட முன்னாள் காதலி லதா உன்னைப் பார்க்க வர்றா”

-(தொடரும்…)

முந்தையபகுதி – 14 | அடுத்தபகுதி – 16

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...