கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை பந்த் – வாட்டாள் நாகராஜ் வார்னிங்!
காவிரி விவகாரம் தொடர்பாக 29 ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெறும் போராட்டம் தீவிரமானதாக இருக்கும் என்று கன்னட அமைப்புகளின் தலைவர் வட்டாள் நாகராஜ், அம்மாநில அரசுக்கே சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
காவிரியில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு உரிய முறையில் கொடுக்க மறுக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. காவிரி மேலாண்மை வாரியம் அளித்த உத்தரவுப்படி தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும் என்கிற காவிரி மேலாண்மை ஆனைய உத்தரவில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி கர்நாடக தமிழகத்திற்கு நீரை திறந்துவிட்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவசாயிகளும் கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். மண்டியாவில் விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு மத்தியில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் பெங்களூரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டதால் பெங்களூரில் அசம்பாவித சம்பங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்ரீராமபுரம், ஒகலிபுரம், புலிகேசிநகர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முழு அடைப்பால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி முழு அடைப்பு அமைதியாக நடந்து முடிந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பாதிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் ஆதரவு அளிக்கவில்லை. இருப்பினும் பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையை திடீரென முற்றுகையிட முயன்றதால் வாட்டாள் நாகராஜ் உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 29 ஆம் தேதி கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்துக்கு 2 ஆயிரம் கன்னட அமைப்பினர் ஆதரவு வழங்க உள்ளதாக வாட்டாள் நாகராஜ் நேற்று அறிவித்து இருந்தார். மேலும் தனது பேட்டியில் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், 29 ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தீவிரமானதாக இருக்கும். பெங்களூர் பந்த் நடந்த அன்று 50 ஆயிரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். என் வாழ்நாளில் இப்படி ஒன்றை நான் பார்த்தது இல்லை. ஆனால், வெள்ளிக்கிழமை எவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டாலும் சரி… எங்கள் அமைப்பினர் 1 லட்சம் பேர் பந்தில் பங்கேற்பார்கள். தியேட்டர்கள் மூடப்படும். சூட்டிங் ரத்து செய்யப்படும். ஹோட்டல் மூடப்படும். போக்குவரத்து முடங்கும். விமான நிலையம் முற்றுகையிடப்படும். மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளது” என்றார்.