காலச்சக்கரம் சுழல்கிறது-23 || அம்பாள் அருள்பெற்ற எழுத்தாளர் ஓம் சக்தி ஜெகதீசன்
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.
ஓம் சக்தி ஜெகதீசன் எனும் இவர் சிங்காரவேலு தங்கபாப்பா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். நாகப்பட்டினம் சொந்த ஊர். 94 வயதானாலும் மனதளவில் இன்றும் இவர் இளமையாகவே இருக்கிறார்.
60 ஆண்டுகளாகக் கலை உலகில் வலம்வரும் இவர் ஒரு சிறந்த திரைப்படக் கதை, வசனகர்த்தாவாகத் தன் திறமையைப் பதிவு செய்து கொண்ட மிகப்பெரிய ஆளுமை.
இவரது மனைவி கோவிந்தம்மாள் இவருக்கு உறுதுணையாக இருந்ததாலேயே இவரால் சிந்திக்க முடிந்தது. சிறப்பான பல கதைகளைத் திரையுலகிற்குத் தர முடிந்தது. கதாசிரியர் ஆர்.கே.ஷண்முகத்தின் உறவுக்காரர் ஆன இவர், சண்முகத்தோடு இணைந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு உரையாடல் எழுதிய பெருமைக்குரியவர்.
ஜானகி சபதம், ஸ்கூல் மாஸ்டர், கடவுள் மாமா, தேவி தரிசனம், ஆயிரத்தில் ஒருத்தி, சுப்ரபாதம், தாய் மூகாம்பிகை போன்ற பல படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இவர் மனதில் ஒருவித புதிய சக்தி தோன்றியதால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், பதில் சொல்வாள் பத்ரகாளி போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதி அதற்கு இயக்குநராகவும் பணியாற்றி ஆன்மிகப் படைப்புகளுக்கு என்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாலேயே ஜெகதீசன் ஓம் சக்தி ஜெகதீசன் ஆக மாறினார். இருந்தாலும் வெண்மை உடையிலேயே வலம் வந்து வீறுநடை போட்டவர்.
இவர் எழுத்துலகில் ஒரு வற்றாத ஜீவநதி. பல வருடங்களுக்கு முன் பி.எஸ்.வீரப்பா அவர்களின் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் சார்பாகத் தயாரித்த ‘திசை மாறிய பறவைகள்’ எனும் படத்திற்கு திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தமிழக அரசின் விருதும் பெற்றவர்.
மக்கள் திலகம் நடித்த ‘இதயக்கனி’க்கும் இவர் தான் வசனகர்த்தா என்பதே இவரது அங்கீகாரம்.
50 ஆண்டுகளாக மயிலையே கையிலை என நம்பி வாழ்ந்த இம்மாமனிதருக்குத் தற்போது வயது 94.
மகன் ராமச்சந்திரன் பராமரிப்பில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது எழுத்துகளை ஆதிபராசக்தியே ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.
தன் மகனை அறிவுடைய சான்றோன் என மற்றவர்கள் கூறக் கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த பொழுதைவிடப் பெரிதும் மனமகிழ்வாளாம்.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவற்கும் தன்மகனைச் சான்றோன் என கேட்ட தாய்’ எனும் குறளில் இதை என்றோ பதிவு செய்துவிட்டார் வள்ளுவப் பெருந்தகை.
ஜெகதீசன் அவர்களும், நானும் மயிலாப்பூரில்தான் இருந்தோம்.
ஆனால் அவரது திரையுலகப் படைப்புகளில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத எனக்கு வாய்ப்பு அளித்த ஆதிபராசக்திக்கு அனேக கோடி நமஸ்காரம்.
முழுக்க முழுக்க கப்பலுக்கு உள்ளேயே தயாரான, நடிகர் திலகம் நடித்த சிரஞ்சீவி எனும் படத்தை கதை, வசனம், எழுதி தயாரித்துள்ளர். இவரது படைப்புகளுக்கு எல்லாம் ASSOCIATE DIRECTOR ஆக இருந்தவர் இயக்குனர் N.S.ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
மகான் ராமானுஜர் சரிதத்தையும் எழுதி, இயக்கி பொதிகைத் தொலைக்காட்சிக்குப் பெருமை சேர்த்தவர். நான் என்றென்றும் நேசிப்பது எழுத்தாளரும், இயக்குநருமான ஓம் சக்தி ஜெகதீசனைத்தான்.