முதல் புவி சுற்றுவட்டபாதையை உயர்த்திய இஸ்ரோ!  – ஆதித்யா எல்-1

 முதல் புவி சுற்றுவட்டபாதையை உயர்த்திய இஸ்ரோ!  – ஆதித்யா எல்-1

சூரிய ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக இன்று உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது. சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்யும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 125வது நாள் பயணம் செய்து சூரியன் ஆய்வை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது 125வது நாளில் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 புள்ளியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் திட்டமிட்டப்படி ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. அதன்பிறகு அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் பிஎஸ்எல்வி – சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில், ‛‛ஆதித்யா எல்-1 விண்கலம் பிரச்சனைகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் புவி சுற்றுவட்டபாதையை பெங்களூரில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உயர்த்தி உள்ளோம். தற்போது விண்கலத்தின் புவி சுற்றுவட்டபாதை என்பது 245 X 22459 கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. விண்கலத்தின் அடுத்த புவி சுற்றவட்டப்பாதை செப்டம்பர் 5ல் உயர்த்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டபாதையில் 245 X 22459 கிலோமீட்டர் என்ற அளவில் வலம் வருகிறது. அதாவது பூமியில் இருந்து விண்கலம் குறைந்தபட்சம் 245 கிலோமீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 22,459 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...