கொன்று விடு விசாலாட்சி – 8 | ஆர்னிகா நாசர்

 கொன்று விடு விசாலாட்சி – 8 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 8

ரத்தச்சிவப்பு நிற கோட்மாடல் சட்டையும் வெள்ளைநிற  பேன்ட்டும் உடுத்தியிருந்தாள் தேஜிஸ்வினி. கறுப்பு ஹீல்ஸ் கால்களில்.

கருநீல பேன்ட்டும் ஆரஞ்சுநிற உட்சட்டையும் ஓபன்காலர் சாம்பல் நிற கோட்டும் அணிந்திருந்தான் டியாரா.

இருவரின் எதிரே ஜீவிதா, கீர்த்தி, பிரசாந்த்.

“உங்க மூவரையும் நாங்க விசாரிக்கனும்…’

“கேளுங்க… எல்லாம் எங்க தலையெழுத்து!”

மூவரில் கீர்த்திதான் அதிகம் உடைந்து போயிருந்தாள்.

“முதலில் கேள்விகள் ஜீவிதாவுக்கு..” டியாரா.

எதிர் கொள்ளத் தயாரானாள் ஜீவிதா.

“உங்களுக்கு வயசென்ன ஆகுது ஜீவிதா.?”

தயங்கி “முப்பது!”

“உங்களுக்கு சிறு பிராயத்து நினைவுகள் பசுமையா மனசுல இருக்கா? டோட்டலா மறைஞ்சு போச்சா? அல்லது வேக்கா ஞாபகம் இருக்கா?”

“மூணுவயசிலயிருந்து முப்பத வயசு வரைக்கும் எனது நினைவுகள் காம்பாக்ட்டா இருக்கு. மொத்தத்ல எனக்கு மெமரி பவர் அதிகம் டியாரா!”

“உங்களுக்கு உங்கம்மா தாய்ப்பால் கொடுத்தாங்களா?”

“ரெண்டு வயசுவரைக்கும். கீர்த்தி பிறந்ததும் கோட்டா அவளுக்கு போய்ருச்சு!”

“நினைவு தெரிஞ்ச நாள்லயிருநது உங்கப்பா கொலையான வரைக்கும்… நல்லா யோசிச்சு கொல்லுங்க… உங்க பெற்றோர் உறவுமுறை எப்டி இருந்துச்சு? சண்டைபோடுவாங்களா? அடிதடி நடக்குமா?”

“அவங்க ஒரு நாளும் சண்டை போட்டதில்லை. அம்மாதான் அப்பாவ அதட்டலா பேசுவா அடிக்கடி ரெண்டு பேரும் கிசுகிசுப்பா பேசிப்பா. ஆனா என்ன பேசிக்கிறாங்கன்னு கண்டுபிடிக்க முடியாது!”

“இருவரும் பேசிக்கிட்ட பிறகு உங்கம்மா அழுது பாத்ருக்கீங்களா?”

“இல்ல..’

“எப்பவாவது உங்கம்மா உடம்புல மர்மமா காயங்கள் பாத்ருக்கீங்களா?”

“காயம் பாத்ததில்ல. ஆனா எங்கம்மாவுக்கு அடிக்கடி அலர்ஜி வரும். கை வீங்கிக்கும். கால் வீங்கிக்கும். மூஞ்சி வீங்கிக்கும். மருந்து சாப்ட்வுடனே சரியாய்டும். அப்றம் மீண்டும் அடுத்த வாரம் அலர்ஜிதான்…”

“தட்ஸ் தி பாய்ன்ட். அந்த வீக்கங்கள் அலர்ஜி இல்லை. உங்கப்பா காயம்படாம சாதுரியமா அடிச்ச அடிகன்னு உங்க தாயார் சாதிக்கிறாங்க!”

எதிர்மறையாய் தலையாட்டினாள் ஜீவிதா.

“எங்கம்மா இருந்தது கூட்டுக்குடும்பம் யாருக்கும் தெரியாம அதுவும் தொழில்நுட்பமா எங்கப்பா அடிச்சார்னு எங்கம்மா சொல்றது திட்டமிட்ட பொய். ஒரு சதவீதம் கூட சாத்தியம் இல்லை…”

“உங்கம்மா தனியா தனக்குத்தானே பேசிப்பாங்களா?”

“இல்ல…”

“எதையும் மிகைபடுத்தி பேசுவாங்களா?”

“எங்களுக்குத் தெரியாது பேசுவாள்னு அம்மாவழி பாட்டி சொல்லிக் கேள்விப்பட்ருக்கம்”

“நீங்கல்லாம் அப்பா செல்லம். அதனாலதான் பெத்த அம்மாவுக்கு எதிரா ஸ்டேட்மென்ட் தரீங்க!”

“நோ நோ…”

“கீர்த்தி… நீங்க சொல்லுங்க… உங்கம்மா ஒரு மனநோயாளியா?”

“இருக்கலாம்!”

“உங்கப்பா 32வருஷமா அடிச்சார்னு உங்கம்மா சொல்ரது பொய்யா?”

“நிச்சயமா பொய் தான்…’’

“கோர்ட்ல உங்கம்மாவுக்கு எதிராத்தான் சாட்சி சொல்லப் போறீங்களா?”

“கட்டாயம்!”

“உங்கம்மாவுக்கு தூக்குத்தண்டனை கிடைக்கும்!”

“அந்த பைத்யக்காரக்கிழவி சாகட்டும்…”

டியாரா பிரசாந்த்திடம் திரும்பினான்.

“ஒண்ணுமே புரியல உலகத்ல

என்னமோ நடக்குது.

மர்மமாய் இருக்குது.

கண்ணில கண்டதும் கனவாய் ஆனது

காதிலே கேட்டதும் கதைபோலானது…”

“உங்கம்மா பத்தி உங்க அபிப்ராயம்?”

நிறைய யோசித்து நிமிர்ந்தான்.

“நோ காமென்ட்ஸ்!” புகைந்தான்.

தலையாட்டியபடி டியாரா அறிவித்தான். “நான் உங்க பங்களாவை சோதனை போடப் போறேன் ப்ளீஸ்… கோ ஆப்ரேட் வித் அஸ்!”

“எதுக்கு சோதனை?”

“உங்கம்மாவுக்கு எதிராவோ ஆதரவாகவோ அலிபிஸ் கிடைக்கலாம்!”

“கோ  ஹெட் டியாரா!” என்றாள் ஜீவிதா.

ஆனால் ஒரு மணிநேர தேடலில் ஒன்றும் சிக்கவில்லை.

டெம்போ ட்ராக்ஸில் விசாலாட்சி அமர்ந்திருந்தாள். ஜீப் மருத்துவமனைக்கு பறந்தது.

ஜீப்பின் பின் மாருதி ஸென்னில் டியாரா. தேஜி.

டியாராவையும் தேவாவையும் அரசு தலைமை பெண் மருத்துவர் வரவேற்றார். “வாட் கேன் ஐ டு ஃபார் யூ தேவா சார்?”

விசாலாட்சி பற்றிய முன்கதை சுருக்கத்தை மருத்துவரிடம் கிசுகிசுப்பாக ஒப்பித்தார்.

“இந்த லேடி தன்னோட 32வருஷம் குடும்பம் நடத்ன புருஷனை –அறுபதாம் கல்யாணத்துக்கு முந்தின ராத்திரி சுட்டுக்கொன்னிருச்சு. குற்ற நோக்கம்- கணவன் கல்யாணமான மொத ராத்திரிலலிருந்தே அடிச்சு சித்திரவதை பண்ணிட்டிருந்தான்றதுதான். நீங்க பாக்க வேண்டியது- நிஜம் போலயே இந்தப்பெண்ணின் மீது கணவனின் நீண்ட நாள் உடல் ரீதியான தாக்குதல் இருந்ததா என்பதே. அஸால்ட்டின் விளைவாக இந்த லேடியின் உடலில் காயங்கள் வீக்கங்கள், ரத்தக்கட்டுகள், ஆறின தழும்புகள் இருந்தால்  ஆராய்ந்து உறுதி செய்யுங்கள். இந்த கேஸில் நீங்கள் தரப்போகும் சான்றிதழ்தான் கோர்ட்டின் தீர்ப்பையே தீர்மானிக்கப் போகிறது!”

மருந்துவர் தலையாட்டினார். விசாலாட்சியை பார்த்து புன்னகைத்தார். பதிலுக்கு விசாலாட்சி புன்னகைக்கவில்லை.

“ஒகே டியாரா, தேவா… நீங்க இருவரும் வெளில வெயிட் பண்ணுங்க. தேஜி என்னுடன் அகம்பனி பண்ணட்டும்.”

அவர்கள் போனவுடன் மருத்துவர் ஏப்ரன் கட்டிக்கொண்டார் கைகளில் உபயோகித்து எறியும் கையுறைகள்.

ஒரு செவிலியர் பெண் ட்ரே ஏந்தி வந்தாள்.

“உன் பேரென்னம்மா?”

“விசாலாட்சி!”

“அந்த பெட்டின் மீது உக்கார்!” அமர்ந்தாள். முதலில் மருத்துவர் விசாலாட்சியின் தலையை ஆராய ஆரம்பித்தார்.

கேசத்தின் வேர்கால்களில் புண் இருக்கிறதா?

விரல் வைத்து தலை முழுதும் தடவினாள்.

ஏதேனும் நாட்பட்ட தழும்புகள் உள்ளனவா?

எங்காவது புடைப்பு காணப்படுகிறதா?

இல்லையே…

“அம்மா! உன் ஆடைகளை முழுக்க அகற்று!”

ஐம்பது வயதிலும் சங்கோஜித்தாள் விசாலாட்சி.

“வெக்கப்பட என்னம்மா இருக்கு? நாங்க மூவரும் பெண்கள். குறிப்பாக உனக்கு சார்பானவர்கள். தயவுசெய்து ஒத்துழை!”

ஆடைகளை அகற்றினாள் விசாலாட்சி.

உலர்ந்த உடலுடன் ஒரு தேவதை!

“படுத்துக்கங்கம்மா… இருகைகளையும் உயர்த்திக் கொள்!”

கழுத்தை-முகவாயின் கீழ்பகுதியை- அக்குளை- புஜத்தை- மார்பை- வயிற்றை- பிறவிபாதையை- தொடையை-முழங்காலை- கெண்டைக்காலை சதையை- கணுக்காலை- உள்ளங்காலை- கைகால் நகங்களை – ஆசன வாயை-  புட்டத்தை- பின்னங்கழுத்தை- முதுகெலும்பு வரிசையை நுணுக்கமாக லென்ஸ் வைத்து ஆராய்ந்தார் மருத்துவர்.

எலும்பு இணைப்புகளை தட்டிப்பார்த்தார்.

கண்களை கீழ் அகட்டி ஆராய்ந்தார்.

மூக்கின் குருத்தெலும்பை அப்படியும் இப்படியும் ஆட்டி நாசித் துவாரத்துக்குள் டார்ச் அடித்தார்.

உள்வாயையும் நாக்கையும் நுண்ணித்தார்.

கண்டுபிடித்ததை குறிப்பேட்டில் குறித்துக்கொண்டார்.

ஏறக்குறைய இரண்டுமணிநேரம் பரிசோதனை நடந்தது.

அதன்பின் விசாலாட்சியின் உடலின் பலபகுதியை எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

“ரைட்டோ. ஒத்துழைப்புக்கு நன்றி. நீ எழுந்து ஆடைகளை உடுத்திக் கொள்!”

விசாலாட்சி அப்புறப்படுத்தப்பட டியாராவும் தேஜியும் உள்ளே பிரவேசித்தனர்.

எதிர்எதிரே அமர்ந்தனர்.

“என்ன டாக்டர்… எனி பாஸிடிவ் ரிப்போர்ட்?”

“நா கண்டறிஞ்சத சொல்ரேன். அது பாஸிடிவ்வா நெகட்டிவ்வான்னு நீங்களே அனுமானிச்சுங்கங்க. விசாலாட்சியின் உடலில் நாட்பட்ட சில கட்டி போனற் வீக்கங்கள். அவை விசாலாட்சிக்கு அடிக்கடி ஏற்படும் அலர்ஜியின் விளைவாக இருக்கலாம் அல்லது நாளமில்லா சுரப்பிகள் கோளாறாகவும் இருக்கலாம். அவரின் உடலில் முப்பதுக்கு மேறப்டட தழும்புகள் உள்ளன. அவை அவரின் கணவரின் தாக்குதலால்தான் ஏற்பட்டன என அறுதியிட்டுக் கூற முடியாது. உடலில் எங்கேயும் எலும்பு முறிவு ஏற்பட்டு குணமானதற்கான அறிகுறிகளும் எக்ஸ்ரேயில் கிடையாது. தொடர்ந்து 32வருஷம் ஒரு மருத்துவ அறிவில்லாத கணவன் தனது மனைவியை தடயம் தெரியாது அடித்துத் துன்புறுத்தியிருக்க வாய்ப்பில்லை. விசாலாட்சி பொய் கூறுகிறார். இன்னும் உங்களுக்கு அந்தப் பெண்ணின் மீது சிறிதேனும் அனுதாபம் இருந்தால் வேறு ஒரு டாக்டரிடம் அவரை அழைத்துச் சென்று செகன்ட் ஒப்பீனியன் பெறுங்கள்.!”

டியாரா பெருமூச்சுவிட்டான்.

தேஜியோ விசாலாட்சிக்கு ஆதரவாக தெய்வாதீனமாக ஒரு கதவு திறக்காதா என அபிலாஷித்தாள்.

ஹேமந்த்குமார் ஒர் இளம்வக்கீல். மனோதத்துவ நிபுணர் ரூபனின் நண்பன்.

இருவரும் தேஜியுடன் இணைந்து விசாலாட்சி நோக்கி நடந்தனர்.

நிமிர்ந்தாள்.

ஹேமந்த் வணங்கினான். “வணக்கம்மா என் பெயர் ஹேமந்த் குமார். அட்வகேட் சந்தானம் அவர்களின் ஜுனியர் நான். உங்கள் வழக்கில் உங்களுக்கு சார்பாக வாதாடப் போகிறேன்.. என்ன கேள்விக்குறியா பாக்றீங்க? உங்களுக்காக என்னை அமத்னது தேஜிதான். இந்த கேஸில் நான் ஜெயித்தாலாவது தேஜி என்னை காதலிக்கிறாளா பார்ப்பம்!”

“டியாரா காதில் விழுந்தது பப்படமாவாய்!”

ரூபன் பேச ஆரம்பித்தான். “நீங்க நல்லவங்களோ, கெட்டவங்களோ? உங்க கணவர் உங்களை அடிச்சது மெய்யோ, புனைக்கதையோ? பெத்தப்புள்ளைகளும் உங்கள ஒதுக்கிட்டன்னால உங்களுக்கு எதிரா திரும்பிட்டனால எனக்கொரு அனுதாபம் உங்க மீது. தண்டனையிலிருந்து தப்பிக்க எளிதாக ஒரு வழி இருக்கிறது!”

விசாலாட்சி முறைத்தாள்.

“இன்னைலயிருந்து கேஸ் முடியுறவரைக்கும் பைத்யம் மாதிரி நடிங்க. போலீஸ் காவல்லயும் சரி நீதிமன்ற காவல்லயும் சரி செம நடிப்பு நடிங்க. பைத்யத்துக்கான நடத்தைகள் சொல்லிக் குடுக்கிறேன் அரங்கேற்றுங்கள். மனநலமற்ற கொலையாளிக்கு தண்டனை கிடையாது. ‘ஏன் புருஷனைக்கொன்ன’ன்னு கேட்டா வெளிகிரகத்லயிருந்து ஒரு மனுசன் வந்து கொல்லச் சொன்னான்னு  கப்ஸா விடுங்க. தலைபூராவும் சுண்டெலிகள் மொய்க்குதுன்னு சொல்லுங்க. மகன் மகள்களை அடையாளம் தெரியாதமாதிரி காட்டிக்கங்க!”

ஹேம்ந்த் கனிவாய் தலையாட்டினான்,

“ரூபனின் உபாயமே மீட்சிக்கும் வழி!”

“ப்ளீஸ்ம்மா!” என்றாள் தேஜி.

முரட்டுத்தனமாய் மறுதலித்தாள் விசாலாட்சி. “என் மீது உங்களுக்கு இருக்கும் அனுதாபத்துக்கு நன்றி. ஆனால் உங்க அனுதாபம் எனக்குத் தேவை இல்லை. எல்லாரும் கண்ணை மூடிக்கிட்டு ஓர் உண்மையை நம்ப மறுத்தா நான் என்ன பண்ண? எல்லாம் தெய்வசித்தம். தண்டனையிலிருந்து தப்பிக்க பொய் சொல்லமாட்டேன். கோர்ட் நம்பினா என்ன நம்பாட்டி என்ன ஆணித்தரமாக அறை கூவுவேன்- என் கணவன் என்னை 32வருஷம் அடிச்சு சித்திரவதை பண்ணினது உண்மை உண்மை உண்மை. மேலமேல என்னை துன்புறுத்தாம எந்திரிச்சு போய்டுங்க. எனக்கு தனிமை வேணும்!”

மூவரும் ஏமாற்ற தளர்வாய் வெளியேறினர்.

இருட்டுக்குள் சத்தியம் மூர்க்கமாய் சிரித்தது.

(-தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...