பூத்திருக்கும் விழியெடுத்து – 7 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 7 | முகில் தினகரன்

 

அத்தியாயம் – 7

1997

ன்று தன்னிடம் கோபமாய் பேசி விட்டுச் சென்ற வைசாலி, இரண்டொரு நாளில் கோபம் தணிந்து அவளாகவே வந்து பேசுவாள் என்று காத்திருந்த அசோக் ஏமாற்றமானான்.  வைசாலி அவனைத் தேடி வரவுமில்லை. அவன் கண்களில் படவும் இல்லை.

“என்னாச்சு?… கண்ணில் கூடப் பட மாட்டேங்கறாளே?… காலேஜுக்கு வர்றாளா… இல்லையா?” தன் சந்தேகத்தை வைசாலியின் தோழி அபிநயாவிடம் கேட்டான் அசோக்.

 “ஏன் உனக்குத் தெரியாதா அசோக்?… உன் கிட்ட சொல்லலையா?” தலையை ஆட்டிக் கொண்டே அவள் கேட்டதில் அவள் காது தொங்கட்டான்கள் பேயாட்டம் ஆடின.

 “ப்ச்… விஷயத்தைச் சொல்லு” கடுப்பாகிக் கேட்டான் அசோக்.

 “இங்க வெச்சு பிராக்டீஸ் பண்ணினா ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்குதுன்னு அவ…. ”ஹோட்டல் ஜெம்ஸ் பாரடைஸ்” ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஃபேமிலி சூட் ஒண்ணு புக் பண்ணிக்கிட்டு… அங்கே டான்ஸ் பிராக்டீஸ் பண்ணிட்டிருக்கா”

 “ஓ… மை காட்” என்று முன் நெற்றியில் கையை வைத்துக் கொண்டவன், “அவ ஏன் இந்த ஆனிவல் டே டான்ஸ் காம்படிஸனுக்காக இத்தனை மெனக்கெடுறா?… இது என்ன பெரிய இன்டர்நேஷனல் டான்ஸ் காம்படிஸனா?” தன் கோபத்தை அந்த அபிநயாவிடம் காட்டினான்.

அதைக் கேட்டு லேசாய் முறுவலித்த அபிநயா, “என்ன அசோக்… பண்றதையெல்லாம் தெளிவா பண்ணிட்டு… என்னமோ ஒண்ணுமே தெரியாத பச்சைக் குழந்தை மாதிரி நடிக்கறே?” கேட்டாள்.

 “ஏய்… என்ன பேசறே நீ?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டான்.

 “உன்னைய காம்படிஸன்ல கலந்துக்க கூடாது!”ன்னு அவ சொல்லிட்டாள்ன்னு… உங்க கிளாஸ்ல வேற ஒருத்தனைத் தயார் பண்ணி அவளுக்கு எதிரா டிரெய்ன் பண்ணிட்டிருக்கியே… இது நியாயமா?… இத்தனைக்கு வைசாலி உன் காதலி வேற… காதலிக்கே இப்படி துரோகம் செய்யறியே?”

 “ப்ச்… அவதான் என்னைத் தப்பா நினைச்சிட்டிருக்காள்!ன்னா இங்க எல்லோருமே அதே மாதிரி நினைக்கறீங்களே… சத்தியமா நான் அந்த ஸ்டூடண்ட்டுக்கு டான்ஸ் பிராக்டீஸ் குடுக்கலை அபிநயா!… வைசாலிக்காக விட்டுக் குடுத்து நான் போட்டியில் கலந்துக்காததினால் எங்க வகுப்பில் ஒருத்தர் கலந்துக்கணுமே?ன்னு அவன் கலந்துக்கறான்… அவ்வளவுதான்”

 “ஆனா… அவன் மூவ்மெண்ட்ஸெல்லாம் உன்னோட மூவ்மெண்ட்ஸாவே இருக்கே?” அபிநயா தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்க,

 “எனக்கென்ன தெரியும்?… ஒரு வேளை என் டான்ஸ் வீடியோவைப் பார்த்து அதே மாதிரி பிராக்டீஸ் பண்றானோ என்னமோ தெரியலையே” இரு கைகளையும் விரித்துச் சொன்னான் அசோக்.

சில விநாடிகள் தன் தாடையைத் தட்டிக் கொண்டு யோசித்த அந்த அபிநயா, “அசோக்… எவ்வளவு சீக்கிரத்துல வைசாலியை சமாதானப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல சமாதானப்படுத்திடு… இல்லேன்னா…..” என்று அவள் நிறுத்த,

 “இல்லேன்னா…?”

 “அசோக் அவளைப் பத்தி என்னை விட உனக்குத்தான் அதிகம் தெரியும்… தன்னுடைய வெற்றிக்காக எதையும் செய்யத் துணிந்தவள்… சொல்ல முடியாது… அவ காதலையே நீ இழக்க நேரிடும்… ஜாக்கிரதை” சொல்லி விட்டு அபிநயா நகர்ந்து சில நிமிடங்கள் கழித்துத்தான் அசோக் சுயநினைவிற்கே வந்தான்.

 ”ஹோட்டல் ஜெம்ஸ் பாரடைஸ்” என்று வாய் விட்டுச் சொல்லிக் கொண்டே புறப்பட்டான் அசோக்.

அடுத்த இருபதாவது நிமிடம் அவன் “இண்ட்-சுஸுகி” பைக் ஹோட்டல் ஜெம்ஸ் பாரடைஸின் கேட்டிற்குள் நுழைந்து டூ வீலர் பார்க்கிங்கில் நின்றது.

ரிசப்ஷனில் அவன் விசாரித்த போது, “ம்ம்ம்… தேர்ட் ஃப்ளோர்ல 305 சூட்ல இப்ப வைசாலி மேடமும்… கூட இன்னொரு ஸ்டூடண்டும் இருக்காங்க” என்றாள் அங்கிருந்த மலையாளப் பெண்.

 “இன்னொரு ஸ்டூடண்ட்டா?… லேடியா?… ஜெண்ட்ஸா?”

 “ஜெண்ட்ஸ் ஸ்டூடண்ட்…!… வைசாலி மேடம் நாலு நாளா இங்கதான் இருக்காங்க… ஆன அந்த ஸ்டூடண்ட் இப்பத்தான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி உள்ளார போனார்” மலையாளம் சொன்னது.

 அசோக்கின் சிந்தனை தாறுமாறாக விரிந்தது. “என்னாச்சு இந்த வைசாலிக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறா?… அவன் கூட இருக்கற ஆண் யார்?… ஒருவேளை தனக்கு டான்ஸ் பிராக்டீஸ் பண்ண யாரையாவது வரவழைச்சிருப்பாளோ?”

 “மேடம்… அவங்களைச் சந்திக்கணும்” என்றான் அசோக்.

 “ஒன் மினிட் இருங்க… கேட்டுச் சொல்றேன்” என்றபடி அந்தப் பெண் இண்டர்காம் போனை எடுக்க,

 “அவசியமில்லை… நான் அவளோட காதலன்” என்று சொல்லி விட்டு நேரே லிப்டை நோக்கி நடந்தான்.

 “காதலனா?… அப்ப அவன்?” என்கிற கேள்வியை முகத்தில் வைத்துக் கொண்டு போகும் அசோக்கையே வெறித்துப் பார்த்தாள் அந்த ரிசப்ஷன் மலையாளப் பெண்.

305 சூட்டை அடைந்த அசோக், கதவைத் தட்ட கைகளைக் கொண்டு போக உள்ளிருந்து கேட்ட பேச்சுக் குரல் அவனை நிறுத்தியது.

 “டேய்… சுந்தர்… உண்மையைச் சொல்லு… எனக்கு எதிரா ஆடி… என்னைத் தோற்கடிக்க அந்த அசோக் ஏற்பாடு பண்ணிய ஆளுதானே நீ?” வைசாலியின் குரல் கர்ண கடூரமாய் இருந்தது.

“நோ… அப்படியெல்லாம் எதுவுமில்லை!… ஆரம்பத்துல எங்க வகுப்பு சார்பா ஆட அசோக்தான் முன் வந்தான்… நாங்க எல்லோருமே அதைத்தான் விரும்பினோம்.. ஆனா… அவன் கடைசி நிமிஷத்துல வாபஸ் வாங்கிட்டான்!… எங்களுக்குத் தெரியும்… அவன் தன் காதலியான உனக்காகத்தான் விட்டுக் கொடுத்திட்டான்!னு… வேற வழியில்லாம நான் என் பேரைக் குடுத்திட்டேன்”

தனக்கு எதிராக ஆடப் போகும் தன் வகுப்பு மாணவனை இங்கே வரவழைத்து அவனை கன்வின்ஸ் செய்யும் முயற்சியில் வைசாலி ஈடுபட்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட அசோக், தொடர்ந்து உள்ளேயிருந்து வரும் சம்பாஷனையைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

 “ஓ.கே… அது எப்படியோ இருந்திட்டுப் போகட்டும்… அதை விடு!…ம்ம்ம்.. இந்த வருஷ ஆனிவல் டான்ஸ் போட்டில நான் ஜெயிக்கணும்… அவ்வளவுதான்” வைசாலி பேசினாள்.

 “அதான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல சூட் போட்டு பிராக்டீஸ் பண்ணிட்டிருக்கியே?… அப்புறமென்ன?”

 “ச்சூ… அதைப் பத்தி நீ பேசாதே!… நீ இந்த டான்ஸ் போட்டியிலிருந்து விலகிடு”

 “ஏன்?…நான் ஏன் விலகணும்”

 “நான் ஜெயிக்கணும்.,.. அதுக்காக நீ விலகணும்”

“நீ ஜெயிக்கணும்ன்னா… நல்லா பிராக்டீஸ் பண்ணிட்டு வந்து போட்டில நல்லா ஆடு… ஜெயிச்சிட்டுப் போ” தன் வகுப்பு மாணவன் சற்றும் பயமில்லாமல் பேசுவதை பெருமையோடு கேட்டான் அசோக்.

 “டேய்ய்ய்…. எனக்கு நீ அட்வைஸ் பண்ணாதே!… நீ இந்த போட்டில கலந்துக்காம இருக்கறது… உனக்கு நான் எவ்வளவு தரணும்?” பேரம் பேச ஆரம்பித்தாள் வைசாலி.

 அதைக் கேட்டு “ஹா….ஹா…ஹா…”வெனச் சிரித்த அந்த மாணவன், “அதுக்கெல்லாம் வேற  ஆளைப் பாருங்க” என்று சொல்லி விட்டு கதவருகே வர,

அதைப் புரிந்து கொண்ட அசோக் அங்கிருந்து உடனே அகன்று, படிக்கட்டுப் பக்கம் சென்று தன்னை மறைத்துக் கொண்டான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல தலையை வெளியே நீட்டிப் பார்த்த போது, அந்த மாணவன் லிப்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

உடனே மறைவிலிருந்து வெளிப்பட்ட அசோக், வைசாலி தங்கியிருந்த சூட்டின் முன் நின்று கதவைத் தட்டினான்.

 “எப்படியும் நீ திரும்பி வருவே!ன்னு தெரியும் ராஜா” கதவைத் தட்டுவது திரும்பிச் சென்ற அந்த மாணவன்தான் என்று எண்ணிக் கொண்டே கதவைத் திறந்த வைசாலி எதிரே அசோக் நிற்க அதிர்ந்து போனாள்.

-( மலரும்… )

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...