இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் 93% திரும்பியதாக அறிவிப்பு! | தனுஜா ஜெயராமன்
இந்திய ரிசர்வ் வங்கி 2023 ஆம் ஆண்டின் மே 19 ஆம் தேதி புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது, இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த சில மணிநேரத்திற்கு மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பெரும்பாலான மக்கள் கையில் அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டு இல்லாத காரணத்தாலும், போதுமான கால அவகாசம் இருந்த காரணத்தாலும் மக்கள் மத்தியிலான பதற்றம் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 93% 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி கிளீன் கரன்சி நோட்டு பாலிசி கீழ் மே 19-ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்து செப்டம்பர் 30 வரையில் கால அவகாசம் கொடுத்துருந்தது.
ஆகஸ்ட் 31, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 ரூபாய் நோட்டுகள் ரூ.0.24 லட்சம் கோடி மட்டுமே. 2000 ரூபாய்களை ஆர்பிஐ பழைய 1000 மற்றும் 500 ரூபாய் போல் அல்லாமல் திட்டமிட்டு திரும்ப பெற்றதால் மக்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் பணத்தை மாற்றியுள்ளனர். வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி என தெரிவித்துள்ளது.
மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2000 ரூபாய் நோட்டுகளில் 93% திரும்பி வந்துவிட்டன என்பதை இந்திய ரிசர்வ் வங்கி இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 மதிப்பிலான மொத்த ரூபாய் நோட்டுகளில் 87% டெபாசிட்களாகவும், மீதமுள்ள 13% பிற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டதாக வங்கிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கிகளில் கூடுதல் நிதி புழக்கம் உருவாகியுள்ளது.
மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடியாக இருந்தது. மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது ரூ.3.56 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. தற்போது வெறும் ரூ.24,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டு மட்டுமே புழக்கத்தில் உள்ளது. செப்டம்பர் 30, 2023 வரை மீதமுள்ள காலத்தை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்றிக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.