கொன்று விடு விசாலாட்சி – 6 | ஆர்னிகா நாசர்

 கொன்று விடு விசாலாட்சி – 6 | ஆர்னிகா நாசர்

 

அத்தியாயம் – 6

பிளாஷ்பேக்சம்பவம் 3- சம்பவத்தேதி 1 9.3.1972 காலை 11மணி

தொலைபேசி விடாமல் சிணுங்கியது.

கைக்குழந்தை கீர்த்திக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் விசா. பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் ஜீவிதா.  எழாத மனைவியை இரகசியமாக முறைத்தபடி ஃபோனுக்கு எழுந்து போனான் சீனிவாசன்.

“ஹலோ சீனி ஹியர்!”

“சார்! நான் நீடாமங்கலத்திலிருந்து உங்க கிளார்க் பேசுரேன். கல்யாணத்துக்கு கார்ல போன உங்க பேரன்ட்ஸ் மேல லாரி மோதிருச்சு!”

“கடவுளே! எங்கம்மப்பாக்கு ஒண்ணும் ஆகலையே”

“ஸாரி சார்!” எதிர்முனை அழுதது. “கார் உருத்தெரியாம நசுங்கி போச்சு. உங்க பேரன்ட்ஸ் பாடிய கார் பாகங்களை வெட்டிதான் எடுத்தோம்…”

தரையை உதைத்தான் சீனி. ஆனால் சாந்தமானவன் என நடிக்க வேண்டுமல்லவா?

“இப்ப பாடி எங்க இருக்கு?”

“மார்ச்சுவரில எல்லா பார்மாலிட்டீஸ் முடிச்சு இன்னும் ரெண்டு மணிநேரத்ல தாஞ்சூர் கொண்டு வந்திருவோம்….”

“லாரி டிரைவருக்கு என்னாச்சு? (அந்த தெவ்டியாப்பய்யன் சாகலையா?)”

“லாரிய அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டான் சார்!”

“போலீஸ்ல புகார் கொடுத்தீங்களா தம்பீ?” (ஓடின லாரி டிரைவரை புடிச்சு கறி எடுக்கத் தெரியாம அங்க நீ மயிர் பிடுங்கிட்டு இருக்கியா?)

“குடுத்தாச்சு சார்!”

 “சீக்கிரம் பாடியோட வாங்க!” ரிசீவரை வைத்தான் சீனி.

குழந்தையை போட்டுவிட்டு ஓடி வந்தாள் விசாலாட்சி.

“மாமா அத்தைக்கு என்னாச்சுங்க?”

வேலைக்காரர்கள் இருப்பதை கவனித்துவிட்டு விசாலாட்சியை கட்டிக் கொண்டு அழுதான். “சாமிகிட்ட போய்ட்டாங்க விசா!” கூவினான். இரகசிய குரலில் “எத்ன நாளுடி வேண்டிக்கிட்டு இருந்த கிழங்கள் பூடனும்னு. அப்பன் ஆத்தா காரியம் முடியட்டும் மவளே…. உனக்கு செம மாத்து இருக்கு!”

இருண்டாள் விசாலாட்சி.

அடுத்த சிலமணி நேரங்களில்-

காரில் பிரதேங்கள் வந்து சேர்ந்தன.

பிரேதங்களை கட்டிக்கொண்டு அழுதான் சீனி.

“பாடிய எப்ப எடுக்றது சீனி?”

“இன்னைக்கே சாயந்தரமே எடுத்திரலாம்!”

பாடைகள் கட்டப்பட்டன. பிரேதங்கள் குளிப்பாட்டப்பட்டன.

மேளதாளத்துடன்-

ஈரத்துணி கட்டி ஈரம் சொட்டசொட்ட தீச்சட்டியுடன் ஊர்வலத்தின் முன்  நடந்தான் சீனி.

ராக்கட்கள் கொளுத்தி வானுக்கு விடப்பட்டன. சீறி பாய்ந்து உயரத்தில் வெடித்தது.

டண்டணக்கு டக். டண்டணக்கு டக். ஏ அஜக் ஏ பஜக்.

ஊர்வலத்தின் முன் சிலர் ஆடினர்.

ஊர்வலப்பாதையில் மலர்கள் உதிர்த்து விடப்பட்டன.

தகரக்கொட்டகை.

சிதையில் பிரேதங்கள்.

ஆண் உறவினர்கள் குழுமியிருந்தனர்.

சீனி தனது மனதிலிருந்த ரௌத்திரத்தை வெளிக்காட்டாமல் வெறும் சோகமாக  நடித்தான்.

சிதையை சுற்றி வந்து பெற்றோருக்கு கொள்ளி இட்டான் சீனி.

சிதை வெடிப்பாய் எரிந்தது.

சிகை கலைஞன் வைத்து சீனி மொட்டையடித்து மீசை அகற்றினான்.

இரவு-

தனியறை.

பயந்து மூலையில் ஒடுங்கியிருந்தாள் விசாலாட்சி.

உள்ளே பிரவேசித்தான் சீனி.

“மாமியா மாமனார முழுங்கி தண்ணி குடிச்சிட்டியாடி?” கிசுகிசுப்பாய் வினவி அடித்தான்.

சத்தமில்லாமல் அழுதாள் விசாலாட்சி.

“கார் மேல லாரிய ஏத்ன டிரைவர் பய கைக்கு கிடைக்கலையேடி சண்டாளி. நீதான்டி இப்ப டிரைவர். (உண்மையில் டிரைவரிடம் பேசுவது போல் பேசினான்) ஏண்டா குடிச்சிட்டு ஓட்னியா? உங்க கோயி உங்கப்பன் மேல லாரி ஏத்தாம என் பேரன்ட்ஸ் மேல ஏண்டா ஏத்ன? இந்த கைதானடா ஒழுங்கா ஸ்டிரிங் பிடிக்காம இருந்துச்சு? இந்த காலுதானடா பிரேக்கை சரியா அமுக்காம இருந்துச்சு?”

ஐஸ்கட்டிகளை ஈரத்துணியில் கட்டி டிரைவரை அடிப்பதாக பாவித்து விசாலாட்சியை விளாசி எடுத்துவிட்டான் சீனி.

மயங்கி சரிந்தவளிடம் சீனி, “அடியேய்… இதுதான்டி டூ இன் ஒன் அடி. உன் ஈனராசிக்கும் அடி. தப்ச்சு போன டிரைவர் பய்யனுக்கும் மானசீக அடி. இப்பத்தான்டி என் மனசு லேசாச்சு. நிம்மதியா தூங்குவேன்..”

“உடம்பெல்லாம் கன்னிப்போச்சுங்க!” அழுதாள்.

“மருந்து டப்பால வீக்கம் குறையவும் வலி மறையவும் தூக்கம் வரவும் மாத்திரைகள் வச்சிருக்கேன். எடுத்து விழுங்கு. காலைல கிளியர் ஆய்டுவ. மாமியார் மாமனார் பிரிவு தாங்காம அழுது அழுது வீங்கிட்டன்னு குசலம் விசாரிக்றவங்களுக்கு கதை சொல்லு. கல்யாணமாகி அஞ்சுவருஷமாகுது. உனக்கும் பழகிப்போயிருக்கும் பொய் சொல்லி பொய் சொல்லி. இன்னும் புதுசு புதுசா மெத்தட் கண்டுபிடிச்சுக்கிட்ருக்கேன் தடயம் தெரியாம அடிக்க. இதுக்கெல்லாம் அவார்டு குடுக்கமாட்டாங்களாடி? விசாரிச்சு பாக்கனும்!”

மொட்டைத்தலையை தடவிக்கொண்டான். சிறிது நேரத்தில் தூங்கிப் போனான்.

சீரான குறட்டை.

கணவனையே முறைத்தாள்.

“அப்டியே இவனை கழுத்தை நெறிச்சுக்கொன்னுட்டா என்ன?”

“ம்ஹிம். இவனை நெறித்துக் கொல்லும் அளவுக்கு என் கைகளில் பலம் இல்லை!”

“இன்று இல்லை நாளை- நாளை இல்லை – மறுநாள்- இவன் திருந்தி விட மாட்டானா?”

“ஒரு வேளை மூன்றாவதாக நான் ஆண் குழந்தை பெற்றுவிட்டால் கனிவாகி விட மாட்டானா?”

“நம்பிக்கை தானே வாழ்க்கை….”

மூலையில் சரிந்து அமர்ந்தாள். பின் எழுந்து மாத்திரைகளை போட்டுத் தூங்கினாள்.

மறுநாள் காலையில்-

எதிர்பட்டோர் எல்லாம்… “அய்யோடி விசா…. என்னடி ஆச்சு உனக்கு? உடம்பு பூராவும் கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கியிருக்கு?”

தொடப் போனவர்களிடமிருந்து விலகினாள்.

“நைட் ஏதோ பூச்சிக்கடி. அலர்ஜி ஆய் போச்சு. என் வீட்டுக்காரர் பதறிப் போய்ட்டார். அவில் மாத்திரை போட்ருக்கேன். சரியாய்டும்!”

சீனி வந்தான்.

பதட்டமாய் முகம் காட்டினான். ‘சாயந்தரத்துக்குள்ள சரியாகலைன்னா ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட போவம் விசா. பட்டகால்லயே படுது பாரு. என்னை மாதிரி நல்லவங்களுக்குத்தான் கடவுள் அதிக சோதனையை இறக்குவான் போல….”

மூக்கிலும் கண்களிலும் நீர்கொட்ட அழுதான் சீனி.

அடிபட்ட விசாலாட்சியை விட்டுவிட்டு அனைவரும் சீனியை தேற்ற ஆரம்பித்தனர்.

யாருக்கும் தெரியாமல் கண் சிமிட்டினான் சீனி.

பிளாஷ்பேக்சம்பவம் 4- சம்பவத்தேதி 17.2.1975 மதியம் மூன்று மணி.

முந்தின வருடம் மூன்றாவது குழந்தையாக பிரசாந்த் பிறந்த போது அகமகிழ்ந்து போனாள் விசாலாட்சி.

ஆண்குழந்தை ஆண்குழந்தை என்று கேட்டான் கணவன் பிறந்தும் விட்டது.

நிச்சயம் கணவனின் முரட்டுத்தனம் பறந்து விடும். இனி தான் மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கை என கூத்தாடினாள்.

குழந்தையைக் கொஞ்சிய சீனி அதீத சந்தோஷத்தில் விசாலாட்சியை அடிக்க ஆரம்பித்தான்.

அரண்டுதான் போனாள் விசாலாட்சி.

இனி வாழ்க்கையில் எது வந்தாலும் எது போனாலும் சீனியின் அடியிலிருந்து சாபவிமோசனம் கிடையாது. என புரிந்து கொண்டாள்.

-வாசலில் கார் தரை தேய்த்து நின்றது. பேய்தனமாய் உள்ளே ஓடி வந்தான் சீனி.

“என்னங்க பதட்டமா வரீங்க?”

‘பொத்திக்கிட்டு இரு!’னு சமிக்ஞை காட்டினான்.

டெலிபோனுக்கு எதிரில் அமர்ந்தான். டயல் செய்தான்.

“இன்ஸ்பெக்டரா, வணக்கம். நான் சீனி. சீனிவாசன்!”

“வணக்கம் சார். உங்க பார்ட்டனரை ட்ரேஸ் அவுட் பண்ணிட்டம். உங்களோட அஞ்சு லட்ச ரூபாயோட பம்பாய் போயிருக்கார். குதிரை ரேஸ்ல உங்க பணத்தை வச்சு சூதாடிருக்கார். எல்லாபணமும் தோத்தவுடன் உங்களுக்கு ஒரு மன்னிப்புக்கடிதம் எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டார். அவரோட பாடி மாதுங்கா மருத்துவமனைல கிடக்குது!”

“அடப்பாவமே… பணம் தோத்தவன் எதுக்கு செத்தான்? என்கிட்ட நேரா வநதிருந்தா மன்னிச்சு விட்ருவேன்ல… ம்… பணத்தை என் பார்ட்னரின் வாரிசுதாரர்கிட்ட கிளய்ம் பண்ண முடியாதா?”

“ஸாரி சார்… இம்பாஸிபிள்!”

“எனக்காக நீங்க எடுத்துக்கிட்ட முயற்சிகளுக்கு ரொம்ப நன்றி இன்ஸ்பெக்டர்!”

“இட்ஸ் ஓகே!”

ரிசீவரை வைத்தான் சீனி.

கலவரமாய் பார்த்தாள் விசாலாட்சி.

“அஞ்சு லட்சம் பணம் போச்சு விசா….”

எந்த சமாதானம் சொன்னாலும் திட்டுவான்.

இறுக்கமாக மௌனித்தாள்.

யோசித்தான் சீனி.

“எனது அறைக்கு குழந்தைகள் தூங்கியவுடன் வா!”

பயத்துடன் போனாள்.

சீனியின் பார்ட்னர் புகைப்படமும் மேக்கப் சாதனப்பெட்டியும் இருந்தன. சீனி எழுந்து ஜன்னல்களை சாத்தினான்.

பெட்டியைத் திறந்தான்.

விசாலாட்சியின் கேசத்தை கொண்டையிட்டு அதன்மேல் விக் பொருத்தினான். செயற்கை புருவமும் செயற்கை மூக்கும் ஓட்டினான். ஐப்ரோ பென்சிலால்  மீசை வரைந்தான். புடவையைக் களைந்து விட்டு சிலாக்கும் பேன்ட்டும் அணிவித்தான்.

மேக்கப் தொடர்ந்தது.

இப்போது விசாலாட்சியை தள்ளி நிறுத்தி உறுத்தான். “இம் இப்ப ஓர் அளவுக்கு என் பார்ட்னர் மாதிரி இருக்கடி!”

“என்னங்க செய்யப் போறீங்க?”

“கொஞ்சப் பொரேன்டி!” உறுமினான். அவனது பார்ட்னரின் பெயர் சின்னையன்.

“டேய் சின்னையன்… உன்னை எத்ன நம்புனேன்…. நேர்மையானவன் மாதிரி என்கிட்டயே நடிச்சிட்டியேடா… ஏண்டா நடிச்ச?”

காயம் ஏற்படாவிதத்தில் அடிக்க ஆரம்பித்தான்.

வாயை இறுகப் பொத்திக் கொண்டு கதறினாள்.

“என் பணத்தை வச்சு சூதாடச் சொல்லுதோ?”

மீண்டும் அடி.

“போன அஞ்சுலட்சத்துக்கு என்ன பண்ணலாம்? உன் பொண்டாட்டிய அஞ்சு வருஷத்துக்கு வப்பாட்டியா வச்சுக்கவா? அவளுக்கு வயசாயிருச்சு.. அவ மகளை?”

மீண்டும் அடி.

“கைய விட்டுப்போன அஞ்சுலட்சத்தை என்ன வழில மீட்பேன்?”

சராமாரியான அடியில் மயங்கிப்போனாள் விசாலாட்சி.

மயக்கம் தெளிவித்தான்.

உடல் வீக்கங்களுக்கு ஆயின்மென்ட் இட்டான்.

முக மேக்கப்பை அகற்றி ஆலிவ் ஆயில் பூசினான்.

விக்கை கழற்றி வீசினான்.

“இன்னும் என் ஆத்திரம் தீரலடி. இன்னும் ஒருவாரம் என் பார்ட்னருக்கான அடிஉதை தொடரும். உடம்பை மராமத்து பண்ணி  ஆயத்தமாக இரு!”

சீனி விலகினான்.

சுவற்றில் சீனியின் பொம்மை வரைந்தாள்.

வாய்நிறைய எச்சில் கேசரித்து துப்பினாள்.

“தூத்தேறி! நீ எல்லாம் ஓர்  ஆம்பிளையாடா?”

(-தொடரும்…)

முந்தையபகுதி5 | அடுத்தபகுதி-7

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...