நீ என் மழைக்காலம் – 5 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 5
பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. காற்று சுற்றிச்சுற்றி அடித்தது. அடித்தக் காற்றில் தென்னை மரங்கள் சுழன்று, சுழன்று ஆடின. மரங்கள் காற்றில் ஆடுகின்றனவா அல்லது மழைப் பிடித்ததால் மயங்கி ஆடுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்தது கார்த்திக்கு. மழை மட்டும் ஏன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கிறது என்ற காரணம் விளங்கவே இல்லை அவனுக்கு.
மழைப் பிடிக்க எப்படி காரணம் தேவையில்லையோ அப்படியே நிவேதிதாவைப் பிடிக்கவும் அவனுக்கு காரணம் தேவைப்படவில்லை.
அவள் அழகு தான் பிடித்தது என்றால் இவளைவிடவும் அழகிகளை அவன் கடந்து வந்திருக்கிறான். அவர்களை எல்லாம் பார்த்து ஐ லவ் யூ சொல்லத் தோன்றவில்லை. அவள் குணம் தான் அவளை கவர்ந்தது எனில் அப்படி ஒன்றும் நீண்ட நாட்கள் அவன் அவளுடன் பழகிப்பார்த்து காதலைச் சொல்லவில்லை.
பார்த்தவுடனே பிடித்துப்போய் விட்டது. அவ்வளவு தான். பிடித்த மனதுக்கு அவள் வேண்டும், எப்போதும் துணையாக இருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவள் உடன் வரவேண்டும். அவள் கரம் பற்றி நடக்க வேண்டும். அவளை விட்டு விடக்கூடாது, கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
அதனால் ஐ லவ் யூ என்றான்.
இன்னும் பல ஆயிரம் முறை சொல்லவும் அவன் தயாராக இருந்தான்.
ஆனால் அவள்? விடை தெரியாத வினாவாகத் தெரிந்தாள்.
இனி மேலும் மனதிற்குள் போட்டு பூட்டி வைத்து அவஸ்தை படமுடியாது என்றுதான் அவளிடம் காதலை போட்டு உடைத்து விட்டான்.
ஆனால் அவளோ, எந்த எதிர்வினையும் காட்டாது மெளனமாய் கடந்து சென்றுவிட்டாள்.
மெளனத்தை சம்மதம் என்று எடுத்துக் கொள்வதா? சங்கடம் என்று எடுத்துக் கொள்வதா? அவன் தவித்தான்.
போனில் கேட்கவும் கொஞ்சம் உதறலாகவே இருந்தது. இப்போதாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. அவள் இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?
‘என்னைப் பிடிக்கவில்லை என்பதின் அர்த்தம் தானே, அந்த இல்லை?’
‘எனக்கு நீ தகுதியானவன் கிடையாது என்பது தானே அந்த இல்லைக்கு பொருள்?’
‘என் குணத்துடன் உன்குணம் ஒத்து வராது என்பதாகத்தானே அந்த நிராகரிப்பு இருக்க முடியும்?’
‘என் அழகிற்கு நிறத்திற்கு நீ ஈடே கிடையாது என்பது தானே வேண்டாம் என்பது’
‘என்னை நீ காலம் முழுக்க வைத்து பாதுகாக்க முடியாது, என்னை காப்பாற்றும் சக்தி உனக்கு இல்லை, என் வாழ்க்கைக்கு ஏற்றவன் நீ கிடையாது என்பது போன்ற பல இல்லைகளை உள்ளடக்கியதாகத்தான் இருக்கிறது காதலில் ஒருவர் சொல்லும் மறுப்பும், இல்லை என்ற வார்த்தையும்.’
‘இதில் நான் எந்த இல்லை? எல்லாமும் சேர்ந்த இல்லையா?’
‘என்னை பிடிக்குமா என்று கேட்டேனே ஒருநாள்? பிடிக்கும் என்றாளே? அந்தப் பிடிக்கும் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
‘பிடிக்காது என்று ஏன் சொல்லவில்லை?’
‘நான் போன் பண்ணுவதால் ஏதாவது தொந்தரவா என்று கூட கேட்டேனே?’
அப்படியெல்லாம் இல்லை என்று அவள் ஒருமுறை கூட சொன்னதில்லையே! ஒவ்வொரு முறைபேசும் போதும் முகமலர்ச்சியுடன் சிரித்துப் பேசுவாள். கேள்விகளுக்கு மறுக்காமல் பதில் சொல்கிறாள். போனை துண்டிப்பதோ, அப்புறம் பேசுகிறேன் என்று நிராகரிப்பதோ எந்த செயலையும் அவள் செய்ததே இல்லை.
புரோகிராமில் இருக்கும் போது மட்டும் அப்புறம் பேசுகிறேன் கார்த்தி என்று பதில் அனுப்புவாள். இப்படி எந்தக்கோணத்தில் பார்த்தாலும் அவனை ஒருபுள்ளியில் கூட அவள் நிராகரித்தது இல்லை. அப்படி செய்திருந்தாலாவது அவள் தன்னை வெறுக்கிறாள், புறக்கணிக்கிறாள், அவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று ஒதுங்கிப்போய் இருக்கலாம்.
ஒருநாள் அவன் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று போன் பண்ணினாள் பக்கத்துவீட்டு அக்கா.
மரத்தடியில் நின்று இவளுடன் பேசிக்கொண்டிருந்த கார்த்தி பதற்றமானான்.
‘‘என்னகார்த்தி’’ என்றாள் நிவேதிதா.
அவன் போன் வந்த விஷயத்தை சொன்னான்.
‘‘என்ன உடம்புக்கு அம்மாவுக்கு? என்றாள் அக்கறையாக.
‘‘அம்மாவுக்கு லேசாக ரத்த அழுத்தம் உண்டு. அது அதிகமாயிடிச்சா என்னன்னு தெரியலை. மாத்திரை போடாமல் விட்டிருப்பாங்க…’’ அவன் பதற்றத்துடன் கிளம்பவும், இரு கார்த்தி என்று அவள் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
அவனை பின் புறம் உட்காரவைத்துக் கொண்டு இராயப்பேட்டையில் உள்ள அவன் வீட்டிற்கு பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்தாள். அதற்குள் அம்மா மாத்திரை சாப்பிட்டு சரியாகி இருந்தாள் என்பது வேறு விஷயம்.
‘இப்படி எல்லா வகையிலும் அவள் நல்லவளாகத்தானே இருக்கிறாள்? என்னை எந்தப்புள்ளியிலும் அவள் நிராகரிக்கவே இல்லையே?
அப்படி இருக்க என் அன்பை மட்டும் அவள் எப்படி நிராகரிக்க முடியும்? மறுக்க முடியும்?’
‘ஒருவேளை நட்பாகப் பழகியவளிடம் போய் காதல் என்று சொதப்பி கெடுத்து விட்டேனா?
அவள் நட்பாகத்தான் என்னுடன் பழகினாளா? அவளின் நட்பை நான் தான் காதல் என்று கற்பனை செய்து கொண்டேனா?
‘ஐயோகடவுளே ’என்று மண்டையைப் பிடித்துக் கொண்டான். இந்தக்காலத்தில் எல்லா பெண்களும் ஆண்களிடம் நட்பாக சகஜமாகப் பழகுகிறாள். நான் தான் அதை காதலென்ற தப்பாய் கணக்குப் போட்டு விட்டேனா? அந்தக்கணக்கு அவளை காயப்படுத்தி விட்டதா? அதனால் தான் பேசாமல் இருக்கிறாளா? மெளனத்தை கடைப்பிடிக்கிறாளா? அவன் குழம்பினான்.
சரி, அவளுடையது நட்பாகவே இருக்கட்டும்? என்னுடைய காதலை நான் சொல்லிவிட்டேன். அதை ஏற்பதும், நிராகரிப்பதும் அவள் உரிமை. ஆனால் அதைக்கூட அவள் சொல்லாமல் போவது என்ன நியாயம்?
எதிரும் புதிருமாய் கேள்விகள் மண்டையில் வந்து குடைய, அன்றைய பொழுதை, அவஸ்தைகளுடன் கடத்தினான்.
மழையிரவு எப்போது விடியும் என்று காத்திருந்து கல்லூரிக்குச் சென்றான்.
வெற்றியா? தோல்வியா? தோல்வி எனில் மறுபடியும் அவள் முகத்தில் எப்படி விழிப்பது? வெற்றி எனில் அவளிடம் என்ன பேசுவது?
முதன் முதலாய் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட அந்தப் புன்னை மரத்தடியில் போய் நின்றான். வழக்கமாய் இருவரில் யார் முதலில் வந்தாலும், ஒருவர் மற்றவர்களுக்காக காத்திருப்பார்கள். இவன் காத்திருக்கையில் மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு முகநூலோ, வாட்சப்போ பார்த்துக் கொண்டிருப்பான். ஆனால் ,
சிந்தனை முழுக்க கல்லூரிக்குள் நுழையும் அவளின் இருசக்கரவாகனத்தின் மீதே இருக்கும்.
அவள் காத்திருந்தால், காதில் இயர்போனை செருக்கிக் கொண்டு நின்றிருப்பாள். அவளின் சக அறிவிப்பாளர்கள்நி கழ்ச்சியை எப்படி நடத்துகிறார்கள் என்று வானொலி கேட்டுக் கொண்டிருப்பாள். எல்லாம் அவன் வரும் வரை தான்.
அதன் பிறகு ஒயரை சுருட்டி பையில் வைத்துக் கொள்வாள்.
இன்றும் அப்படித்தான் அந்த மரத்தடியில் அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
இரவு பெய்த மழையின் ஈரத்தால் பூமி குளிர்ந்திருந்தது. வளாகத்தில் தேங்கிய நீரில் இருசக்கரவண்டிகள் சர்ரென்று ஊர்ந்து செல்ல, நீர் சக்கரங்களில் சுழன்று பக்கத்தில் இருந்த புற்களின் மீது தெறித்தன.
நிவேதிதா மழைக்காற்றை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் வந்து இறங்கினாள். எதற்காக ஆட்டோவில் வருகிறாள்? வண்டி பழுதாகி விட்டதா? அல்லது மழை வரும் என்று எச்சரிக்கை உணர்வுடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டாளா?
அவனால் காரணத்தை அறிய முடியவில்லை. அருகில் வரட்டும், கேட்கலாம் என்று நினைத்திருந்த வேளையில், அவள் விறுவிறுவென்று வேகமாக அவள் வகுப்றை இருக்கும் பக்கம் சென்றுவிட்டாள்.
இவன் கால்கள் ஓர்அடி எடுத்து வைத்து , பின் வாங்கியது. அவசரப்படாதே கார்த்தி என்றது.
‘ஏன் இப்படி செய்றாள்? இப்போது என்ன செய்து? பிடிக்கவில்லை என்பதை செய்கையில் காட்டி விட்டுப் போகிறாளா?
எதுவாக இருந்தாலும் அவள் வாய்த்திறந்து சொன்னால் ஒழிய அவன் நம்ப மறுத்தான்.
புறக்கணிப்பு என்பது வாழ்க்கையில் மிகப்பெரிய வலி. நாம் அன்பு வைத்திருக்கும் நபர் நம்மை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிந்தால், அந்த நொடி முதல் வாழ்க்கை என்பது மிகப்பெரிய நரகமாகி விடுகிறது.
அன்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குத் தான் இந்த உலக அச்சு இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்பு மட்டும் இல்லை என்றால், இந்த அச்சு எப்போதோ முறிந்து போய் இருக்கும். தன் மூச்சை நிறுத்திக் கொண்டிருக்கும்.
பிறக்கும் போது தனியாகத்தான் பிறக்கிறோம். பிறந்தப்பிறகு அந்த உயிர் தனித்து இயங்குவதில்லை. அது எப்போதும் யாரையாவது ஒருவரை பற்றிக்கொண்டு தான் இருக்கிறது, இயங்குகிறது. குழந்தையாக இருக்கையில் தாயின் மடி. பிறகு தந்தையின் கரங்கள். அதன் பிறகு வாழ்க்கைத் துணை. அதற்கடுத்து பெற்றப்பிள்ளைகள். இப்படி யாரோ ஒருவருக்காத்தான் இந்த உயிர்மூச்சு இயங்கிக் கொண்டிருக்கிறது. இயங்கவும் ஆசைப்படுகிறது.
ஆனால் நாம் ஆசைப்படும் நபர் நம்மை வெறுக்கும் போது, வாழ்க்கை என்பது வேதனைகள் நிறைந்ததாக மாறி விடுகிறது. எனக்கு அவள் வேதனைகள் தரப் போகிறாளா? அல்லது வெற்றியைக் கொடுக்கப் போகிறாளா?
அவன் வகுப்புக்குக்கூட போகப் பிடிக்காமல், மன வேதனையுடன் அதே புன்னை மரத்தடியில் காத்திருந்தான்.
அன்பு தான் இந்த உலகத்தில் மிகச் சிறந்த ஆயுதம் என்கிறார்கள்.
அந்த அன்பு ஏன் இங்கு அவஸ்தைப்பட வைக்கிறது? மரண வேதனையைக் கொடுக்கிறது? பிரச்சனைக்கு உள்ளாகிறது. ப்ரியத்துக்குரியவர்கள் பேசாவிட்டால் சகலமும் பிடிக்காமல், உலகை ஏன் வெறுக்க வைக்கிறது? அவனுக்குப் புரியவில்லை.
வாழ்க்கை மொத்தத்துக்குமான ஒருவார்த்தையை அவள் முன் வைத்துவிட்டு நிற்கிறேன். ஆனால் அவள் மௌனம் காக்கிறாள்?
சரி, சரியில்லை என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். ஆனால் இவள் மௌன ஆயுதத்தை ஏந்தியபடி நிற்கிறாள். அந்த ஆயுதத்தால் என்னைக் கொல்கிறாள். என்ன செய்வது நான் ?
ஆண் என்பவன் எப்போதும் கம்பீரமாய் இருக்க வேண்டுமா? ஒரு பெண்ணிடம் இறங்கிச் சென்று காதலை சொல்லக்கூடாதா? கீழிறங்கக் கூடாதா? யாசிக்க கூடாதா? பெண் வந்து சொன்னால் தான் வலுவானதாக இருக்குமா? ஆண் சொன்னால் அது வலு வற்றதாகிவிடுமா?
அவன் குழம்பினான்.
குழப்பத்தின் ஊடே அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.
`பதில் சொல் நிவேதா .
எதுவாக இருந்தாலும் உன் பதில் தேவை.
இப்படி பேசாமல் இருந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லாதே.’
நீண்ட நேரமாகியும் அவளிடமிருந்து பதில் வரவில்லை. அதனால் அவள் வகுப்பறையை நோக்கிச் சென்றான். ஆனால் வகுப்பறை காலியாக இருந்தது. அவள் உட்பட யாருமே இல்லை. அன்று அவளுக்கு ஒரு பாட வேளைக்கு மட்டும் இருந்து. அடுத்த பாட வேளைக்கான ஆசிரியர்கள் வராததால் வகுப்புகள் தொடர்ந்து நடக்கவில்லை. அதனால் மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள் என்பதை அங்கிருந்தவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டான்.
உலகையே வெறுத்தான்.
-(சாரல் அடிக்கும்)