தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது மன்னிக்க முடியாத குற்றம்! பசவராஜ் பொம்மை ஆவேசம்
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இதனால் உடனடியாக கர்நாடகா அரசு தமிழகத்துக்கு திறந்து விடும் காவிரி நீரை நிறுத்த வேண்டும் என கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை சாடியுள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்த்து கொள்ளும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா அரசு சார்பில் காவிரியில் மாதந்தோறும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது.
கர்நாடகாவில் மழை இல்லை என்ற காரணத்தை பிரதானமாக கூறி தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அரசு உள்ளது. இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் மீண்டும் காவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக இருமாநிலங்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதற்கு கர்நாடாக மாநில முன்னாள் பாஜக முதல்வரான பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீர் திறந்து விட்ட காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ள அவர், தமிழகத்துக்க திறக்கப்ட்ட தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீறியுள்ளார்.
இதுதொடர்பாக பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பதிவில் 4 ட்வீட்கள் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு குறுவை சாகுபடிக்கு 2 மடங்கு தண்ணீரை அதிகம் பயன்படுத்தி உள்ளது. மேலும் குறுவை சாகுபடி பரப்பை 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஆனால் கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த உடன் தண்ணீர் திறந்து விட்டு இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். மாநில விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் திறந்து விடாமல் காலதாமதம் செய்து அணையில் சேமித்து வைத்ததோடு, நமது விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தற்போது தமிழகத்துக்கு திறந்து விட்டுள்ளீர்கள்.
காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியாது என முதல்வர் சித்தராமையா கூறிய மறுநாளே துணை முதல்வரன டிகே சிவக்குமார் தலைமையிலான நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் காவிரி நீர் மேலாண்மையில் ஒருமித்த கருத்து இல்லை என்பதும், நம் மாநில தண்ணீரை பாதுகாக்கும் அறிகுறி தென்படவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இதனால் உடனடியாக கர்நாடகா அரசு தமிழகத்துக்கு திறந்து விடும் காவிரி நீரை தடுத்து நிறுத்தி மாநிலத்தின் நிலவும் உண்மையை நிலையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடகா விவசாயிகளின் நலனில் அக்கறையுடன் மாநில அரசு செயல்பட வேண்டும்”