ஹவாய் தீவில் பரவும் காட்டுத் தீ..
அமெரிக்காவின் முக்கிய தீவுகளில் ஒன்று ஹவாய். முக்கிய சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஹவாய் தீவு கூட்டத்தின் 2வது மிகப்பெரிய தீவான மவுய் பகுதியில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய இந்த காட்டுத் தீ கடுமையான வெயிலின் தாக்கத்தால் தனது கோர முகத்தை காட்டியது. காட்டுத் தீயை கடுப்படுத்தும் பணியில் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஒவ்வொரு நொடியும் காட்டுத் தீ பரவலின் வேகம் கணிக்க முடியாத வகையில் உள்ளது. இதனால் தீ மரங்கள் அடந்த வனப்பகுதியை தாண்டி குடியிருப்பு பகுதிக்குள்ளும் பரவியது.
கடந்த வாரம் லஹைனா நகருக்குள் பரவிய காட்டுத் தீ அந்த நகர் முழுவதையும் தீக்கு இரையாக்கியுள்ளது. ஹவாய் தீவின் சில பகுதிகள் தீப்பிழப்புகளாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில இருந்த 1000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் காட்டுத் தீயில் சேதமடைந்துள்ளன. இவற்றில் சுமார் 100 கட்டடங்கள் குடியிருப்புகள் என கூறப்படுகிறது. இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 106 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்னவானது என்ற தகவல் இல்லை.
லஹைனா பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. லஹைனா நகரமே சாம்பாலாகி எலும்புக்கூடாய் நிற்கிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான கார்களும் வாகனங்களும் தீயில் கருகி உருக்குலைந்து போயுள்ளன.
இன்னும் நிறைய இடங்களில் தேடுதல் பணியை தொடங்க வேண்டியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஹவாய் கவர்னர் ஜோஷ் கிரீன் தெரிவித்துள்ளார். தற்போது இறந்தவர்களை அடையாளம் காண்பது சிக்கலாய் இருப்பதாக கூறியுள்ள கவர்னர் ஜோஷ் கிரீன், மருத்துவ ஆய்வுகளுக்கு பிறகு ஒரு வாரத்தில் இறந்தவர்களை அடையாளம் காண முடியும் என கூறியுள்ளார்.
பல உடல்கள் மிகவும் மோசமாக கருகி அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்து கிடப்பதாக ஹவாய் தீவின் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக நேற்று முதல் டிஎன்ஏ சோதனை தொடங்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்கள் தற்காலிக சவக் கிடங்குகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள ஹவாய் தீவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹவாய் தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் ஜோ பைடன் பார்வையிட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.