இந்தியாவுக்கு “நெருங்கும் பேராபத்து..”
நீர் மேலாண்மை என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருக்கும் நிலையில், அடுத்து வரும் காலம் இந்தியா உட்பட 25 நாடுகளில் மிக மோசமான பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது தண்ணீர் பற்றாக்குறை என்பது சர்வதேச பிரச்சினையாகவும் உலக நாடுகள் அனைத்தும் கவலை கொள்ளும் ஒன்றாகவும் இருக்கிறது… இது தற்போது உலகெங்கிலும் உள்ள பல பகுதிகளைப் பாதிக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில் மயமாக்கல், காலநிலை மாற்றம், மோசமான நீர் மேலாண்மை நடைமுறை ஆகியவை தண்ணீர் பற்றாக்குறையை மிகப் பெரிய பிரச்சினையாக மாற்றுகிறது.
தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை பல்வேறு விதங்களில் பாதிக்கும்.. இது குறித்து World Resources Institute’s Aqueduct Water Risk Atlas என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி பார்க்கும் போது மொத்தம் 25 நாடுகளில் மிகப் பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். அங்கு ஒரு நீர் அவசரநிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. உலக அளவில் சுமார் 4 பில்லியன் மக்கள், அதாவது உலகில் சரிபாதி பேர் ஆண்டுதோறும் குறைந்தது ஒரு மாதமாவது நீர் பற்றக்குறை காரணமாகப் பிரச்சினையைச் சந்திக்கிறார்கள்.. இந்த எண்ணிக்கை 2050க்குள் 60% ஆக அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 2050இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $70 டிரில்லியன், அதாவது சர்வதேச ஜிடிபியில் 31% தண்ணீர் அழுத்தம் காரணமாகப் பாதிக்கப்படும். இது 2010இல் $15 டிரில்லியனாக, அதாவது மொத்த உற்பத்தியில் 24%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 4 நாடுகளால் மோசமான அபாயத்தில் இருக்கிறது.. இந்தியா, மெக்சிகோ, எகிப்து மற்றும் துருக்கி நாடுகளின் ஜிடிபியில் 50% வரும் 2050 ஆம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் 25 நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்பு மோசமாக இருக்கும். குறிப்பாக பஹ்ரைன், சைப்ரஸ், குவைத், லெபனான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பாதிப்பு மோசமாக இருக்கும்.. இந்த பகுதிகள் வறட்சி ஏற்பட்டு போதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பாதிப்பு அபாயம் இருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில் பாதிப்பு மோசமாக இருக்கும். இங்கு 83% மக்கள் அதிக அழுத்தத்தில் இருப்பார்கள்… தெற்காசியாவில் சுமார் 74% மக்கள் இதே பிரச்சினை காரணமாக அழுத்தத்தை எதிர்கொள்வார்கள்.
இது குறித்து நீர் மேலாண்மை வல்லுநர் சமந்தா குஸ்மா கூறுகையில், “தண்ணீர் என்பது கிரகத்தில் எங்களின் மிக முக்கியமான வளம்.. இருப்பினும், இதை நாம் முறையாக நிர்வகிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நான் இந்த துறையில் தீவிர ஆய்வில் இருக்கிறேன்.. இருப்பினும், இதன் பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் மிக மோசமானதாக மாறிக் கொண்டே இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
இப்போது நாம் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க உடனடியாக தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்… சாத்தியமான மற்றும் பொருளாதார ரீதியான தீர்வுகளை உடனடியாக நாம் எடுக்க வேண்டும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.. வரும் காலத்தில் நீர்ப் பாதுகாப்பு என்பது சர்வதேச சமூகம் சந்திக்கும் பெரிய பிரச்சினையாக இருக்கும்.. அடுத்து வரும் அரசுகளுக்கு இது நீர் மேலாண்மை மற்றும் நிர்வாகம் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.