தஞ்சாவூர் சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு..! 

 தஞ்சாவூர் சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு..! 

தஞ்சாவூர் அருகே சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால நந்தி,  விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் சித்திரக்குடி.  இப்பகுதியைச் சேர்ந்த முனைவர் சு. சத்தியா என்பவர் தனது நிலத்தில் நந்தி  ஒன்று பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து, தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும்,  வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோ. ஜெயலெட்சுமி ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:

“சித்திரக்குடியில் லிங்கத்தடிமேடு என அழைக்கப்படும் வயல்வெளியில் பாதி உடல் பூமிக்குள் மறைந்த நிலையில் ஒரு நந்தி இருப்பதைக் காண முடிந்தது.  இந்த நந்தி கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டை,  அதாவது சோழர் காலத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகிறது. நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது.  நந்தியின் திமில் இப்பகுதியில் இருக்கும் காளைக்கு உள்ளது போலவே இருக்கிறது.

அப்பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் செல்லக் கூடிய ஆனந்த காவேரி வாய்க்காலின் உட்புறத்து தென்புறக் கரையை ஒட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில்,  இடுப்புக்குக் கீழாக வாய்க்கால் கரையில் பாதி புதைந்த நிலையில் சுமார் மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டது.

இவை இரண்டும் சோழர்கள் காலத்து சிற்பங்களாகும்.  இப்பகுதியில் ஒரு பெரும் சிவன் கோயில் இருந்து முற்றிலுமாக அழிந்திருக்கக்கூடும்.  பிற்காலத்தில் இந்த இடத்துக்கு அருகில் கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.  இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் முன்பகுதியில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர் கால நந்தி உள்ளது.

இந்த நந்தியின் அடி பீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி உள்ளது.  அதில் ஸ்ரீஏரனக்கன் மங்கல வைருதன் செய்வித்தது என்ற எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்லவர் கால எழுத்துப் பொறிப்புடன் இருந்து முதல்முதலாகக் கண்டறியப்பட்டுள்ளது சிறப்பாகும்.  இவற்றுள் புதிதாக நந்தியுடன் காணப்படும் பல்லவர் கல்வெட்டுச் செய்தியும், சோழர் காலத்திய பாதி புதையுண்டுள்ள நந்தியும், விஷ்ணுவும் புதிதாகக் கண்டறிய முடிந்தது.

இக்கோயில் வளாகத்தில் அச்சுதப்ப நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றும், பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு கல்வெட்டுச் செய்திகளும் மத்திய கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவந்துள்ளது. இவ்வூர் சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியது. சோழர்களுக்கு முன் ஆட்சி செய்த பல்லவர்கள் காலத்திலும் முக்கியப் பகுதியாக இருந்திருப்பதை அறிய முடிகிறது.”

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...