பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி
The Ostracized Guardian: `பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி
நமது தமிழ் தொன்மத்தை, நாட்டார் தெய்வ வழிபாட்டினை உலகறியச் செய்யும் முயற்சியினை தங்கள் கலைப் படைப்பினால் செய்திருக்கிறது இசையமைப்பாளர் டென்மா மற்றும் கானா முத்து கூட்டணி.
உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான சில விஷயங்கள் உண்டெனில் அதில் இயற்கையும், உழைப்பும் முன்னிற்கும். அப்படி இயற்கையையும் உழைப்பையும் நம்புகின்ற பல்வேறு நாடுகளின் பல்வேறு மக்களையும் ஒரு சில நம்பிக்கைகள் ஒன்றிணைகின்றன.
அந்த நம்பிக்கைகள் பெரு நாட்டிலுள்ள மலைக் காடுகளையும், நம் நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் இணைக்கிறது என்று கூட சொல்லலாம். இங்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மூட்டை தூக்கும் விவசாயி அதற்கான வலிமை வேண்டி “சாத்தா” எனும் காவல் தெய்வத்துக்கு கல் தூக்கி போடும் வழக்கம், பெரு நாட்டிலுள்ள பழங்குடிகள் தங்கள் சுமைகளை தீர்க்க “பச்சமாமா” எனும் காவல் தெய்வத்திடம் மன்றாடி கல்களை தூக்கி எறியும் நம்பிக்கையோடு ஒன்றிணைகிறது. நிலம், மொழி, நாடு, கண்டம் தாண்டி மக்கள் தங்களை காக்கும் விஷயங்களை தொன்றுதொட்டு இன்றும் வணங்கி வருகிறார்கள்.
இந்தக் காவல் தெய்வங்களுக்குக் கதைகளும், வாய்மொழி வரலாறும் நிறையவே உண்டு. அப்படியொரு தமிழ் தொன்மத்தை, நாட்டார் தெய்வ வழிபாட்டினை உலகறியச் செய்யும் முயற்சியினை தங்கள் கலை படைப்பினால் செய்துள்ளது இசையமைப்பாளர் டென்மா மற்றும் கானா முத்து கூட்டணி.
இவர்களது `தி ஆஸ்ட்ராசைஸ்டு கார்டியன்’ (The Ostracized Guardian) என்கிற நாடகம், இசை, நடனம் என்கிற பலதிறன்களை அடக்கிய (டிஜிட்டல் ஷோகேஸ்) படைப்பு தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள “எடின்பர்க் ப்ரிஞ்ச்” என்ற சர்வதேச கலை விழாவில் அரங்கேறியுள்ளது. ஆகஸ்ட் 10 தொடங்கிய இந்த விழா ஆகஸ்ட் 28 வரை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
இது குறித்து `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, `நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் இசையமைப்பாளர் டென்மாவிடம் பேசினேன், “நான் வெளிநாட்டிலுள்ள ஒரு தீவுக்குச் சென்ற போது அங்குள்ள மக்கள் டால்பினை தெய்வமாக பார்ப்பதைப் பார்த்தேன். அவர்களின் கெண்டை மீன்பிடி தொழிலுக்கு டால்பின்கள் பெரிதும் உதவுகின்றன. அதனால் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்து காக்கும் டால்பினை அவர்கள் சாமியாகப் பார்க்கிறார்கள் என்பது புரிந்தது. அதேபோல ஆஸ்திரேலிய நாட்டுக்குப் பயணம் செய்தபோது அங்கு இருக்கும் பழங்குடிகளின் தெய்வம், இங்கு இருக்கும் நம் காவல் தெய்வங்களோடு ஒப்பீட்டளவில் ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன்.
இதனை போல கானா முத்து அவர்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள காவல் தெய்வங்களுக்கு அடிக்கப்படும் பம்பை மேளங்கள் குறித்துக் கூறியிருந்தார். அது மக்களின் தொன்ம உணர்வுகளோடு தொடர்புடையதாகத் தோன்றியது. இங்கு சாமியாடும் மக்களின் மனநிலையில் இருந்து சைகடெலிக் இசைக்கும் தொடர்புப்படுத்தி ஒரு இசைப் படைப்பினை உருவாக்க முடிவு செய்தோம். அதில் இங்கிருக்கும் காவல் தெய்வமான மதுரை வீரனின் கதையை சொல்ல வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.” என்று தங்கள் படைப்பின் ஆரம்பப் புள்ளியை விவரித்தார் டென்மா.
எடின்பர்க் ஃபெஸ்டிவல் ஃப்ரிஞ்ச்” என்றசர்வதேச டிஜிட்டல் ஷோகேஸ் நிகழ்வு கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்டது. அதில் “வாய்ஸ் ஃப்ரம் தி சவுத்” என்கிற பெயரில் பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து படைப்புகளை தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அதன் நோக்கம் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் கலைகளை உலகறியச் செய்வதாகும். அப்படி 18 மாத தேடலுக்குப் பிறகு இந்த ஆண்டுக்கான 15 படைப்புகள் டிஜிட்டல் ஷோகேஸிற்கு உறுதி செய்தது எடின்பர்க் ஃபெஸ்டிவல் ஃப்ரிஞ்ச். அதில் The Ostracized Guardian படைப்பும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும், சர்வதேச அளவில் நம் நாட்டின் இசையை “சுயாதீன”(indie music) அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது 16 வருட கனவு. ஆரம்பத்தில் இந்த நிகழ்வுக்காக விண்ணப்பிக்கும் போது எந்த நம்பிக்கையும் இல்லாமல் தான் விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களை தேர்வு செய்த “தி பிக்குல் பேக்டரி” அமைப்பிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்கிறார் இசையமைப்பாளர் டென்மா.
கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் கானா முத்து மற்றும் டென்மா இருவரும் தங்கள் நண்பர்களோடு இணைந்து பாதிப்படைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவியுள்ளனர். அப்போது பம்பை மற்றும் உடுக்கை ஆகிய இசை கருவிகளை வாசிக்கும் நபர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்துள்ளனர். எனவே தங்களது புதிய முயற்சியில் அவர்களை இணைக்கும் முடிவினை எடுத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் யானை சங்கு மற்றும் தவல சங்கு ஆகிய அரிய இசை வாத்தியங்களையும் இதனுள் சேர்க்க குகன் வாத்தியார் இவர்களுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார்.
“நன்மை செய்த மனிதர்கள் என்றும் வாழ்வார்கள்; வாழவேண்டும். இங்கே காவல் தெய்வமாக இருக்கும் ஒண்டி வீரன், மதுரை வீரன், அங்காளம்மன் எல்லாம் ஒருகாலத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள். ஏன் மரவேலை செய்து மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசுவையும் அப்படிப்பட்ட ஒரு நபராகவே நான் பார்க்கிறேன். ஆனால் காலப்போக்கில் இவர்களது வரலாற்றை அவரவர் விருப்பத்துக்கு திரித்து எழுதுகிற நிலை இருக்கிறது. எது உண்மை? எது பொய்? என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு பொய்கள் பரவியுள்ளது. அதை தடுக்கும் வேலை கலைக்கே உரித்தானது என்று நினைக்கிறேன். அதனை நம் நாட்டார் கதைகளில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”
என்னுடைய முந்தைய படங்களான நட்சத்திரம் நகர்கிறது, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படத்தின் பாடல்களிலும் நாட்டார் தெய்வங்களின் கதையினை பின்புலத்தில் சேர்த்திருப்பேன். அப்படி தான் இப்படைப்பில் மதுரை வீரனைச் சேர்த்துள்ளேன். மதுரை வீரன் சாதிய ஆணவ படுகொலை செய்யப்பட்டவர். பின்னாளில் தெய்வமாக மாற்றப்பட்டவர். அவர் ஆதிக்கத்துக்கு எதிரான குறியீடாக இன்றும் சமூகத்தில் நிலைபெற்று இருக்கும் சமத்துவ குறியீடு.
அவர் கடவுள் என்றாலும் அவரை என்னால் தொட முடிகிறது. நான் சாப்பிடும் உணவினைப் படைக்க முடிகிறது, என் வாழ்வியலோடு கலந்திருக்கிறார். முக்கியமாக என் போன்ற மக்களின் பிரச்னையை அவரும் அனுபவித்து இருக்கிறார். இந்தக் கதைகள் அனைத்தும் வாய்மொழி வரலாறாக, கலைகள் வழியாகவே தொடர்ந்து வருகிறது. அப்படியான தொன்மச் சங்கிலியை எங்களது படைப்பின் மூலமாகவும் மீண்டும் தொடர விரும்புகிறோம்.” என்கிறார் டென்மா.
45 நிமிடங்கள் எடுக்கப்பட்டுள்ள இந்த படைப்பினை போல பல தொன்மங்களைத் தொகுத்து ஒரு ஆல்பமாக வெளியிட விருப்பம் தெரிவிக்கும் டென்மா, நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு உரிய அங்கீகாரத்தையும் பொருளாதாரா உதவியையும் செய்ய வேண்டும் என்று வேண்டுகோளினையும் விடுத்துள்ளார். இப்போது எடின்பர்க் சென்றுள்ள இந்த படைப்பினை உரிய நிதி கிடைத்தால் தமிழகமெங்கும் திரையிட விருப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அன்று அநீதிக்கு எதிராக உயிர்நீத்த மதுரை வீரன். நமது வழிபாட்டு முறைகளால் வாழ்வது போல, இன்று எடின்பெர்க் வீதிகளில் பம்பை, உடுக்கை இசையதிர தன் வரலாற்றினை கூறி ஆடிக்கொண்டு இருக்கிறார்!
thanks cinema.vikatan.com/