இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்
இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்.. தேசிய விருது பெற்ற ‘வீடு’..!
பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ’வீடு’ என்ற திரைப்படத்தில் பிஸி காரணமாக இளையராஜாவால் பின்னணி இசை அமைக்க முடியாமல் போனது. ஆனால் அவர் ஏற்கனவே உருவாக்கி இருந்த இசை கோர்வையை எடுத்து பாலு மகேந்திரா மிகச் சரியான இடத்தில் பின்னணி இசையாக வைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்தார். மொத்தத்தில் இளையராஜா இசை அமைக்காமல் ஆனால் அவருடைய இசையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தான் ’வீடு’
இந்த படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகை ஆகிய இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த படம் வெளியானது. அர்ச்சனா, பானுசந்தர், சொக்கலிங்க பாகவதர், பசி சத்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்
மிடில் கிளாஸ் மக்களுக்கு வீடு கட்டுவது என்பது ஒரு கனவு, ஆனால் அவர்கள் அந்த வீடு கட்டும்போது ஏற்படும் சிரமங்கள் ஒரு பெரிய நாவலாகவே எழுதலாம். அந்த வகையில் தான் அர்ச்சனா வீடு கட்ட தொடங்குவார். வீடு கட்ட தொடங்கும் போது ஏற்படும் பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடிகள், அவமானங்கள், துரோகங்கள், ஆகியவற்றை சந்திக்கும் கதை தான் வீடு.
இந்த படத்தில் அர்ச்சனாவின் தாத்தாவாக சொக்கலிங்க பாகவதர் நடித்திருந்தார். இவர் 1930 களில் ரம்பையின் காதல் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வீடு படத்தின் மூலம் தாத்தா கேரக்டரில் நடித்தார். கிட்டத்தட்ட இந்த படத்தின் ஹீரோ இவர்தான் என்று சொல்லலாம். ஒரு 80 வயது நபரை வைத்து ஒரு படத்தை எடுக்க முடியும் என்றால் அது கண்டிப்பாக பாலு மகேந்திராவால் மட்டும் தான் முடியும்.
இப்படிப்பட்ட காதலன் நமக்கு இருக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவுக்கு பானுசந்தர் இந்த படத்தில் நடித்திருந்தார். பானுசந்தர் தெலுங்கில் மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக இருந்த காலகட்டத்தில் தான் இந்த படம் உருவாக்கப்பட்டது. இவரா ஆக்சன் ஹீரோ என்று இந்த படத்தை பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
இந்த படத்தில் சுதா என்ற கேரக்டரில் அர்ச்சனா நடித்தார் என்று கூறுவதை விட அந்த கேரக்டராகவே கூடுவிட்டு கூடு பாய்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். மிக இயல்பான நடிப்பு, ஒரு காட்சியில் கூட மிகைப்படுத்தப்படாத நடிப்பு. அழுகை, சந்தோஷம், புன்னகை, காதல், ஏமாற்றம், துக்கம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். இதனால் தான் அவருக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவை அணுகியபோது அவரால் நேரமின்மை காரணமாக இசையமைக்க முடியவில்லை. அதன் பிறகு தான் அவர் தன்னுடைய ’ஹவ் டு நேம் இட்’ என்ற ஆல்பத்தை கொடுத்து இதில் உள்ள இசையை நீங்கள் பின்னணி இசை ஆக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அனுமதி கொடுத்தார்.
மிகச்சிறப்பாக எந்தெந்த இடத்தில் என்னென்ன இசை வரவேண்டும் என்பதை பிரித்து பின்னணி இசை ஆக்கினார் பாலுமகேந்திரா. இந்த படத்தை பார்க்கும்போது இளையராஜாவே இந்த படத்தை பார்த்து நேரடியாக பின்னணி இசையமைத்திருந்தால் கூட அந்த அளவுக்கு சிறப்பாக பின்னணி இசை அமைந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தான் பாலா திரையுலகிற்கு அறிமுகமானார். ஆம் இந்த படத்தில் அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
மொத்தத்தில் இந்த படம் வசூல் அளவில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் மிக சிறப்பான விமர்சனங்களை பெற்றது என்பதும் தமிழ் சினிமாவில் இன்றளவில் மிகச்சிறந்த 10 படங்கள் தேர்வு செய்தால் அதில் ’வீடு’ கண்டிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy:tamilminutes.com