கார்த்திகை தீபநல்வாழ்த்துக்கள்

கார்த்திகை தீப விழாவை குமராலாய தீபம், விஷ்ணுவாலய தீபம், சர்வாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும்
மூன்று பெயரில் கொண்டாடுவர்.

குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

சர்வாலய தீபம்:
அனைத்து இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கார்த்திகை மாதத்து முழுமதி திதியில் கொண்டாடப்படும். .

சர்வாலய கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் . இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறும்.

சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

பரணி தீபம்

சர்வாலய கார்த்திகை தீப பத்தாம் நாள், 3-12-2025 அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைப்பார்கள் .

மகாதீபம்.

பருவதராஜனின் மகளாக பார்வதி தேவி அவதரித்த வம்சாவழியை சேர்ந்த, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற
உரிமையுள்ள சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் திருவண்ணாமலை நகரில் உள்ளனர். அவர்களில் தீபம் ஏற்றக்கூடிய 5 பேர், 48 நாட்கள் விரதமிருப்பர். இவர்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து, மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் இவர்களிடம் வழங்குவார்கள். மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு இவர்க்ள் கொண்டுசெல்வார்கள். மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இட்டு, அதன் மீது, கற்பூர கட்டிகளை குவிப்பார்கள்.

3-12-2025 மாலையில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவர உற்வசர் தீபமண்டபத்திற்கு எழுந்தருளுவார். அவர் முன்பு அப்போது, கோயில் கொடிமரம் அருகே இருக்கும் அகண்ட தீபத்தை பருவத ராஜகுலத்தினர் ஏற்றுவார்கள். இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், சிவாச்சாரியாக்களிடம் பெற்று மண்சட்டியில் ஏந்திச்சென்ற பரணி தீபச்சுடர் மூலம் அண்ணாமலை மலையின் மீது மகாதீபம் பருவத ராஜகுலத்தினரே ஏற்றுவார்கள்.

இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது சிறப்பு; இவை 27 நட்சத்திரங்களை குறிக்கும்.

இந்த சர்வாலய தீபம் ஏற்றும் திருவண்ணாமலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது செம்பு, இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார். பின்பு 1991-ல் செம்பு,
இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர்கள் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் காடா துணியை முறுக்கி தயாரிக்கப்பட்ட திரியையும் உபயோகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!