காத்து வாக்குல ரெண்டு காதல் – 4 | மணிபாரதி

 காத்து வாக்குல ரெண்டு காதல் – 4 | மணிபாரதி

 

அத்தியாயம் – 4

நந்தினியும், பத்மாவும் டோக்கன் கொடுத்து கம்பெனி கேண்டியனில் காபி வாங்கினார்கள். பின், அதை எடுத்துக் கொண்டு ஓரு டேபிளில் வந்து உட்கார்ந்தார்கள். பத்மா “நேத்து காபி ஷாப்ல என்ன நடந்துச்சு..“ எனக்கேட்டாள்.

“நா எதிர்பார்த்ததுதான்..“

“எதிர்பார்த்ததுன்னா..“

“லவ் புரப்போஸல்.. என்னை ராகவ்வுக்கு புடிச்சுருக்காம்..“

“நீ என்ன சொன்ன..“

“எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லன்னு சொல்லிட்டேன்..“

“ஏன் வேற யாரையாவுது லவ் பண்றியா..“

“இல்ல..“

“அப்புறம் என்ன.. அவன் எங்ககிட்ட எல்லாம் புரப்போஸ் பண்ண மாட்டானான்னு நாங்கல்லாம் ஏங்கிகிட்டு இருக்கோம்..“

“அது உங்க விருப்பம்.. நா தப்புன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா என்னோட ஐடியா வேற..“

“என்ன ஐடியா..“

“எனக்கு பத்து வாயசு இருக்கும் போது எங்கம்மா இறந்துட்டாங்க.. அதுக்கப்புறம் அந்த குறையே தெரியாம எங்கப்பா என்னை வளர்த்தார்.. அவர் நினைச்சுருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு ஜாலியா இருந்துருக்கலாம்.. ஆனா, அவர் அப்படி பண்ணல.. எனக்காக, எல்லா சந்தோஷத்தையும் தூக்கி மூட்டை கட்டி வச்சுட்டு, நான்தான் உலகம்ன்னு வாழ ஆரம்பிச்சார். இன்னிக்கு வரைக்கும் அப்படிதான் வாழ்ந்துகிட்டு இருக்கார்.. அந்த தியாகத்தை நா மதிக்கனும்ன்னு நினைக்குறேன்… அவர் இருக்குற வரைக்கும் அவரை சந்தோஷமா வச்சுக்கனும்ன்னு நினைக்குறேன்.. ஒரு சின்ன விஷயத்துக்கு கூட அவர் மனசு வருத்தப்பட்டுடக் கூடாது.. நா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கப் போய், அவங்களால அவருக்கு இடையூறு வந்துதுன்னு வச்சுக்க, அப்புறம் என்னால அதை தாங்கிக்க முடியாது.. அதை விட, அவர் பொண்ணா, அவருக்கு சந்தோஷம் தர்ற ஒரு மகளா அவர் கூடவே வாழ்ந்துட்டு போறது பெட்டர்ன்னு நினைக்குறேன்..  அவர்தான் தியாகம் பண்ணனுமா.. ஏன் நா தியாகம் பண்ணக் கூடாதா..“

“என்னடி உன் லாஜிக்..  எனக்கு சத்தியமா புரியல.. இப்படி ஒரு நினைப்போட நீ இருக்கங்குறது உங்கப்பாவுக்கு தெரியுமா..“

“தெரியாது..“

“தெரிஞ்சா அவர் என்ன சொல்லுாவாரு தெரியுமா..“

“தெரியல..“

“அதை முதல்ல தெரிஞ்சுக்க.. பொண்ணோ, பையனோ ஒரு வயசுக்கப்புறம் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது பெற்றோர்களோட கடமை.. என்னைப் பத்தி நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்ல.. பேசாம ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க, அப்படின்னுதான் சொல்லுவார்..“

நந்தினி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“உன்னை நினைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்குடி.. அதது அந்தந்த வயசுல நடக்கனும்.. தவற விட்டுட்டா காலம் பூறா வருந்த வேண்டி இருக்கும்..“

“நா அவ்வளவு தூரமெல்லாம் யோசிக்கல.. எனக்கு எங்கப்பா முக்கியம்.. அவர் சந்தோஷமா இருக்கனும்.. அவ்வளவுதான்..“

“எனக்கு தோனினத நா சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்..“ என்று கூறி “இதனால பாதிக்கப்படப்போறது பாவம் ராகவ்வும்தான்.. அவன் உன்னை மறந்துட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்குவான்னு எனக்கு தோனல..“ என்றாள்.

“அதுக்கு நா என்ன பண்ண முடியும்.. என்னை லவ் பண்ணுடான்னு நா சொல்லலையே..“ என்று கூறி “அதுக்காக தான் இந்த விஷயத்துல அவசரப்படக் கூடாது.. ஒருத்தருக்கொருத்தர் நல்லா பழகி ஒருத்தர் மனசுல என்ன இருக்குன்னு இன்னொருத்தர் தெரிஞ்சுகிட்டு அதுக்கப்புறம் புரப்போஸ் பண்ணனும்.. அரைகுறையா பழகிட்டு அவசரப்பட்டு புரப்போஸ் பண்ணா இப்படிதான் அது ஏமாற்றத்துல வந்து நிக்கும்..“ என்றாள்.

“இதுதான் காரணம்ங்குறத நா ராகவ்கிட்ட சொல்லிடலாமா..“

“தாராளமா..“

“அப்புறம் மனசு மாற மாட்டியே..“

“இல்ல, அதுக்கு அவசியம் இருக்காது..“

“அழுத்தகாரிதான் நீ..“

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.. காரணம் என்னங்குறததான் சொல்லிட்டேன் இல்ல..“

இருவரும் காபி குடித்து முடித்து, கேண்டியனை விட்டு வெளியே வந்தார்கள். பத்மா தனது சீட்டை நோக்கி நடந்து போனாள். அப்போது ராகவ் அங்கு மணியுடன் பேசிக் கொண்டிருந்தான். பத்மாவை பார்த்ததும் அருகில் வந்தான். “நீயும் நந்தினியும் ரொம்ப நேரமா கேண்டியன்ல பேசிட்டு இருந்த மாதிரி தெரியுது..“ எனக்கேட்டான்.

“தெரியுது என்ன தெரியுது.. உன்னை பத்திதான் பேசிகிட்டு இருந்தோம்..“

“என்ன சொன்னா..“

நந்தினி அவளிடம் சொன்னதை, ஒரு வார்த்தை மாறாமல், அவனிடம் சொன்னாள். அவனுக்கு முனக்கென்று கோபம் வந்தது.

“என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு.. ஆம்பளைங்களுக்கெல்லாம் அறிவு இருக்காதா.. பாசம்ன்னு ஒண்ணு கிடையாதா.. அவங்களும் ஒரு அப்பா அம்மாவுக்கு பொறந்தவங்கதான.. கல்யாணத்துக்கு அப்புறம் மாமனார்கிட்ட எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியாதா.. நிறைய குடும்பங்கள்ள மாமியார் மருமக சண்டைதான் நடந்துகிட்டு இருக்கு.. மாமனார் மாப்ள சண்டை இல்ல.. இது கூட புரிஞ்சுக்காத முட்டாளா நா..“

“நா எல்லாத்தையும் சொல்லிப்பார்த்துட்டேன்.. அவ புரிஞ்சுக்குறவளா தெரியல..“

“புரிஞ்சுக்கலன்னா விடு.. தனியா கிடந்து கஷ்டப்படனும்ன்னு அவ தலையில எழுதி இருந்தா அதை யாரால என்ன பண்ண முடியும்..“

“உனக்கு இன்னொரு சான்ஸ் இருக்கு..“

“என்ன..“

“அவ பேரு பத்மா..  நீ எப்படி நந்தினிய விரும்புனியோ அதை விட அதிகமா அவ உன்னை விரும்புறா..“

அவன் அவளை கவலையுடன் பார்த்தான். “உன் உணர்வுகள என்னால புரிஞ்சுக்க முடியுது பத்மா.. ஆனா, உடனுக்குடன் எந்த முடிவையும் என்னால எடுக்க முடியாது.. ஐ நீட் சம் டைம்..“ என்றான்.

“ஒரு மாசம் கூட எடுத்துக்க.. நல்ல பதிலா சொல்லு..“ என்று கூறி “நீ என் புறங்கைல குடுத்த முத்தத்தோட ஈரம் இன்னும் காயாம அப்படியேதான் இருக்கு..“ என்றாள்.

அவன் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.

-(காற்று வீசும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...