எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 2 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 2 | ஆர்.சுமதி

     

அத்தியாயம் – 2

ன் பொண்ணை வந்துப் பார்த்துட்டுப் போனாங்கள்ல  அந்த மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சியிருக்கா. அவளும் பொண்ணு பார்க்க வந்திருந்தா. பார்க்க ரொம்ப அழகாயிருந்தா. எனக்கு அவளைப் பார்த்ததுமே உன்னோட மகனோட ஞாபகம்தான் வந்தது. குமணனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. குடும்பமும் நமக்கு ஏத்தமாதிரி நல்ல பணக்கார குடும்பம். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு வரச்சொன்னேன். நாங்க மாப்பிள்ளை வீடு பார்க்க போறஅன்னைக்கு நீயும் குமணனும் எங்கவீட்டு சார்பா வர்றமாதிரி வந்தா பொண்ணைப் பார்த்த மாதிரியிருக்கும். என்ன சொல்றே?”

முத்துலெட்சுமி சொல்லிக் கொண்டேயிருக்க அம்சவேணியின் கவனமெல்லாம் அவளுடைய பேச்சில் லயிக்காமல் பக்கத்து அறையில்  பாப்புக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த டீச்சர் மேலேயேயிருந்தது. இங்கிருந்து பார்க்கும் போது அவள் அமர்ந்திருப்பதும் அவளெதிரே பவ்யமாய் அமர்ந்து பாடம் படிக்கும் பாப்பும் நன்றாகத் தெரிந்தனர்.

மிகவும் பொறுமையாகவும் பொறுப்புடனும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“முத்து அந்த பொண்ணு பேர் என்ன?”

அம்சவேணியை ஆச்சரியமாகப் பார்த்தாள் முத்துலெட்சுமி. தான் சொல்வதை இம்மியளவு கூட அம்சவேணி கேட்கவில்லை என்பதை உணர்ந்தாள். அவளுடைய கவனமெல்லாம் அந்த டீச்சரின் மேல் இருப்பதைப் பார்த்தாள்.

“அவ பேர்…கோதை”

“கோதை. நல்ல பெயர்” மெதுவானக் குரலில் சொல்லிக்கொண்டாள். சில கணங்கள் இருவருமே கோதையையே பார்த்தவண்ணம் பேசாமலிருந்தனர்.

“எவ்வளவு பொறுமையாக சொல்லித் தர்றா பாரு”

“ஆமா…என் பேத்தியைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே. கொஞ்சம் மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தை. ஸ்பெஷல் கவனம் கொடுக்கனும். வீட்ல மகன், என் மகள், என் மருமகள் எல்லாருமே வேலைக்கு போறதால பாப்புவுக்கு பொறுமையா சொல்லிக் கொடுக்க முடியலை. நல்ல வேளை இந்தப் பொண்ணு கோதை கிடைச்சா. எம்.ஏ சைக்காலஜி படிச்சிருக்கா. இவ டியூஷன் சொல்லிக் கொடுக்க வந்த பிறகு பாப்புக்கிட்ட நல்ல மாற்றம். நல்லாவும் படிக்கிறா…”அவளைப் பற்றி சொல்லிக் கொண்டே போனாள் முத்துலெட்சுமி.

அம்சவேணியின் மனக்கண்ணில் குமணனுக்கு ஜோடியாக நின்று சிரித்தாள் கோதை.

‘பொண்ணைப் பார்” அம்சவேணி காதோரம் கிசுகிசுத்தாள்.

குனிந்திருந்த குமணன் தயக்கமாக நிமிர்ந்தான். கொள்ளையழகாய் கோதை நின்றிருந்தாள்.

வரைவதற்கு முன்பே வந்துவிட்ட ஓவியமாய்…எழுதுவதற்கு முன்பே எழுந்துவிட்ட காவியமாய்…உளி எடுப்பதற்கு முன்பே உருவாகிவிட்ட உயிர் சிற்பமாய்….அவள் நின்றிருந்தாள்.

அமைதியான நதியைப்போல் சலனமற்ற முகம். நதியில் விழுந்த மலர் நகர்வதைப்போல் நளினமான புன்னகை. துள்ளாத மீன்களாய் கண்கள். சொல்லாத கவிதைகள் சொல்லும். விழிகளைப் பார்த்தவர் விட்டுவிடுவர் மீன் சாப்பிடுவதையே. சிவன் பார்வதியை பாதி உடம்பில் வைத்ததாய் பக்தி புராணங்கள் சொல்கின்றன. பார்த்தால்  பாதியாக இவளைத்தான் வைத்திருந்தாரோ என்று தோன்றியது. பயமே இல்லாமல் பாம்பை தோளில் தவழ விட்டிருந்தாள். பாம்புக்கு பால் வைத்துத்தான் பார்த்திருக்கிறோம் . இவள் பல வண்ண மலர் வைத்திருந்திருந்தாள்.

“பொண்ணோட பேர் கோதை” மறுபடியும் மகனின் காதில் கிசுகிசுத்தாள் அம்சவேணி.

“கோதை”

‘கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்

இல்லாமல் கல்யாணம் வேண்டாள்.’

உள்ளே பாட்டு ஒலித்தது. ‘கோதை அழகான பெயர். என் பெயர் கோபாலன் என்றிந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

“ எங்க பையன் பெயர் குமணன். இவனோட அப்பாவுக்கு ரொம்ப தர்ம சிந்தனை. யார் வந்து என்ன கேட்டாலும் கொடுத்துடுவார். அதனால பையனுக்கு குமணன வள்ளல் பெயரை வச்சுட்டார்” அம்சவேணி பெயர் பெருமையை சிலாகிக்க உள்ளே ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த மீராவும் பானுவும் சிரித்தனர்.

“பேசாம கர்ணன்னு வச்சிருக்கலாம். கண்டா வரச்சொல்லுங்க…கர்ணனை கண்டா வரச்சொல்லுங்கன்னு நாம செமையா கலாய்ச்சிருக்கலாம்” மீரா சிரிக்க “யேய்… சும்மாயிரு. அம்மா காதுல விழுந்தா திட்டுவாங்க.”

“என் கணவர் மட்டும் இல்லை என் புள்ளையும் தர்ம சிந்தனை உள்ளவன்தான்.”

மீரா மறுபடி கிசுகிசுத்தாள். “எனக்கென்னமோ சீர் வரிசையில வெள்ளியால திருவோடு கேட்பாங்கப் போலிருக்கு. பொண்ணுக்கு தினமும் அதுலதான் சோறு போடுவாங்கப்போலிருக்கு”

“ யேய்… சும்மா இரு. அம்மா ஜன்னல் பக்கம் திரும்பி முறைக்குறாங்க.”

“அப்பா பேர்ல ட்ரஸ்ட் வச்சு நடத்திக்கிட்டு வர்றான்னா பாருங்களேன். நிறைய சமுகசேவை செய்யறான்.” என்றவள் மகன் பக்கம் மறுபடியும் கிசுகிசுத்தாள்.

“பொண்ணு புடிச்சிருக்கா?”

ஓராயிரம் வார்த்தைகளில் சொல்லக்கூடிய தன் உள்ளக்கிடக்கை ஒரே வார்த்தையில் “உம்’ என சொன்னான் குமணன்.

சந்தோஷமாக நிமிர்ந்தமர்ந்தாள் அம்சவேணி.

“ எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க விருப்பத்தை சொன்னா மேற்கொண்டு பேசலாம்.”

சொல்லிவிட்டு கோதையின் தாயைப் பார்த்தாள்.

கோதையின் தாய் புஷ்பாவின் கண்களோ குமணனின் தாய் கழுத்து நிறைய போட்டிருந்த தங்க சங்கிலிகளின் மீதேயிருந்தது.

அனிச்சையாக தோளை சுற்றி போட்டிருந்த முந்தானையை இன்னும் இழுத்து மூடிக்கொண்டாள். மரியாதை நிமித்தமாக தெரியவில்லை அந்த செயல். கழுத்தை மறைக்கவே.

ஏதோ அவளுக்கு இந்த வயதிற்குமேல் நேர்முகத் தேர்வு வைத்ததைப்போல் படபடப்பாகவும் பயமாகவும் எச்சில் விழுங்கினாள். என்ன பதில் சொல்வதென தடுமாறினாள்.

“ என்னால நம்ப முடியலை. நீங்க எங்க வீட்டுக்குப் பெண் பார்க்க வந்ததையே நம்ப முடியலை.”

உண்மைதான்.!

அம்சவேணி எங்கே?  அவர்கள் எங்கே? ஏணி வைத்தால்…ஏணி என்ன லிப்ட் வைத்தால் கூட தொட முடியாது. கோடீஸ்வரக்குடும்பம் அவர்கள். தெருக்கோடியில் புறாக்கூடுபோன்ற ஒரு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இவர்கள். பல துணிக்கடைகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள். பழையதுணியை தைத்துக்கொடுத்து மந்தமான ஜீவனம் இவர்கள். கரைகாணாத செல்வம் அவர்களிடம். கரையேற வழி இல்லாத மூன்று பெண்கள் மட்டுமே இவர்களிடம்.

“நீங்க சரியா விசாரிக்காம வந்துட்டிங்கன்னு நினைக்கிறேன்” புஷ்பா ஏழ்மை நிலையை எடுத்து சொல்லும் வழி தெரியாமல் வாயில் வந்ததை சொன்னாள்.

அம்சவேணி அனைத்தும் அறிவோம் யாம் என ஆண்டவன் பாணியில் சிரித்தாள்.

“விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் வீட்டுப்படியேறிவந்தோம்.”

“எங்க நிலைமை …”

“அப்பா இல்லாத குடும்பம். மூணும் பொண்ணுங்க. பழைய டைலரிங் மெஷின வச்சுக்கிட்டு பொழப்பு ஓடுது. கஷ்டப்பட்டாலும் பொண்ணுங்களுக்கு கல்வியை கொடுத்திருக்கீங்க. ரெண்டு பொண்ணு டிகிரி முடிச்சிருக்கு. மூணாவது பொண்ணு காலேஜ்ல படிக்குது.கோதை மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல வேலைப்பார்க்குது. சாயங்காலம் ஹோம் டியுஷன் எடுக்குது. சின்ன பொண்ணு ஒரு மெடிக்கல் ஷாப்புல வேலைப் பார்க்குது. விவரம் சரியா?”

“ விவரம் சரிதான். ஆனா… உங்களுக்கும் எங்களுக்கும் காசு பணத்துல ஒத்து வராதே”

“ஒத்து வராததைப்பத்தி ஏன் யோசிக்கனும்? ஒத்து வரதைப்பத்தி யோசிக்கலாமே. கோதை வயசுல நான் இவங்க அப்பாவுக்கு கழுத்தை நீட்டினபோது இவங்கப்பா சைக்கிள்ல தான் துணி வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. படிப்படியா கிடைச்சதுதான் இந்த பணம் காசெல்லாம். பல வரஷங்களுக்கு முன்னாடி நாங்களும் உங்களை மாதிரி இருந்தது ஒத்து வருதுல்ல…வர்றவ லெட்சுமி கடாட்சத்தோட இருந்தா வசதி வர்றதுக்கு சொல்லவா வேணும்?”

புஷ்பாவுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“என்னோட சினேகிதி வீட்லதான் நான் முதன்முதலா கோதையைப் பார்த்தேன். என் சினேகிதியோட பேத்தி மனவளர்ச்சி இல்லாத குழந்தை. அந்த குழந்தைக்கு கோதை பாடம் சொல்லிக்கொடுத்துக்கிட்டிருந்ததை ஒருநாள் பார்த்தேன். எத்தனையோ டீச்சர்ஸை பார்த்திருக்கேன். இந்த மாதிரி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க நிறைய அனுபவம் வேணும். அந்த அனுபவம், பொறுமை எல்லாம் கோதைக்கிட்ட இருக்கறதைப் பார்த்தேன். ரொம்ப ஆச்சரியமா இருந்தது.”

மீரா வாயைப்பொத்தி சிரித்தாள். “அந்த அனுபவத்தையும் பயிற்சியையும் அக்காவுக்கு கொடுத்ததே நாம தானே. நம்மை மாதிரி லூசுங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தே அக்கா ரொம்ப டேலண்டா ஆயிட்டா.”

“அன்னைக்கே தீர்மானிச்சுட்டேன். கோதை தான் எங்க வீட்டு மருமகன்னு”

“இப்பத்தான் புரியுது. இந்தம்மாவும் மனவளர்ச்சி இல்லாதவங்க போலிருக்கு”

“ ஆமா.. இல்லாட்டி நம்ம வீட்டுக்கு பொண்ணு கேட்டு வருவாங்களா?” மீராவும் பானுவும் கிசுகிசுப்பாக தங்களின் கிண்டல் பேச்சை தொடர்ந்தவண்ணமே இருந்தனர்.

“ எங்க முடிவை நாங்க சொல்லிட்டோம். நீங்களும் உங்க சொந்த பந்தங்கள்கிட்ட கலந்துயோசிச்சு முடிவை சொல்லுங்க”

“இப்படி ஒரு இடத்திலேர்ந்து பொண்ணு பார்க்க வந்தாங்கன்னு சொன்னாலே போதும் நம்ம சொந்தக்காரங்களெல்லாம் நமக்கு சூன்யமே வச்சிடுவாங்க”

மீராவின் பேச்சு இப்பொழுது கோதையின் காதுவரை வந்ததில் கோதை தன்னையும் மீறி சத்தமின்றி சிரித்துவிட்டாள்.

பார்த்துக்கொண்டிருந்த குமணன் பரவசமானான். மௌனம் சம்மதம் என்ற பழமொழி மாறி சிரிப்பே சம்மதம் என எடுத்துக்கொண்டான்.

மாப்பிள்ளை வீட்டார் மகிழ்வோடு சென்றனர்.

 “எல்லாரும் இப்படி அமைதியா இருந்தா எப்படி? ஏதாவது பேசுங்களேன.” ஏதோ பெரிய போர்டு மீட்டிங்கை ஆரம்பித்து வைப்பதைப்போல் சொன்னாள் மீரா.

“இன்னுமே என்னால நம்பமுடியலை. எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்கள் அவர்கள். நம்ம வீட்ல பெண் எடுக்க நினைக்கிறாங்க.!” அம்மாவால் ஆச்சரியப் படுவதைத்தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

“எல்லாம் அக்காவோட அழகுதான். அழகுல மயங்குறதா சொல்றாங்களே அது இதுதான் போலிருக்கு” பானு கோதைக்கு திருஷ்டி கழித்தாள்.

“ஆமா..பெரிய அழகி? அழகிப்போட்டிக்கு அனுப்பி வை. எனக்கென்னமோ அந்த மாப்பிள்ளைக்கு ஏதாவது குறை இருக்கும்னு தோணுது. அதான் விஷயம் தெரிஞ்ச பணக்காரங்களெல்லாம் விலகிப் போயிருப்பாங்க. வேற வழி இல்லாம நம்ம வீடு தேடி இவங்களெல்லாம் வருவாங்களா?”

“அதானே பிச்சைக்காரன் கூட நம்ம வீட்டுக்கு வரமாட்டேங்கறான். பிச்சைப்போடற சாக்குல பொண்ணை தலையில கட்டிடுவாங்களோன்னு” திருஷ்டிக்கழித்த பானு ப்ளேட்டை இப்பொழுது திருப்பிப் போட்டாள்.

அம்மா முறைத்தாள்.

“முறைக்காதம்மா. மூணு பொண்ணைப் பெத்து வச்சிருந்தா பிச்சைக்காரன் கூட அப்படித்தான் நினைப்பான்.குறை ஏதோ இருக்கு அதான் இங்க வந்திருக்காங்க. அந்த மாப்பிள்ளை ஜன்னல் வழியே என்னையே பார்க்கும்போதே எனக்கு சந்தேகமா இருந்தது.”

“என்னது உன்னையே பார்த்துக்கிட்டு இருந்தாரா?”

“ஆமா என்னையே பார்த்துக்கிட்டு இருந்தாரு.நான் கூட நினைச்சேன் திடீர்ன்னு அக்கா வேண்டாம் தங்கச்சியை தருவீங்களான்னு கேட்கப்போறாருன்னு”

“ஆஹா… ஆசையைப் பாரு..”

“இப்பத்தான் புரியுது. அவருக்கு மாறுகண்ணு. அக்காவைத்தான் பார்த்திருக்கார். ஆனா என்னைப் பார்த்த மாதிரி இருக்கு. மாறு கண்ணு மாப்பிள்ளையை அக்கா உன் தலையில கட்டத்தான்  இந்த ஏற்பாடு.”

மீரா சொல்ல பானு தானும் யோசித்தாள்.

“ம்…  இப்பத்தான் எனக்கும் ஞாபகம் வருது. காபி குடிக்கும்போது கவனிச்சியா? மாப்பிள்ளை இடது கையால காபி டம்ளரை எடுத்து குடிச்சாரு. இடது கை பழக்கம் உள்ளவரு போலிருக்கு”

“இடது கை பழக்கம் உள்ளவங்க ரொம்ப புத்திசாலியா இருப்பாங்களாம்.”

“பக்கத்து வீட்டு மீனா இடது கை பழக்கம் உள்ளவதான். பத்தாங்க்ளாஸ் எக்ஸாமை பத்துவாட்டி எழுதியும் பாஸ் ஆகலை.”

“அது மட்டும் இல்லை. மாப்பிள்ளை போகும்போது கவனிச்சியா? லேசா உந்தி உந்தி நடந்தாரு.”

மீரா திடீரென பெருங்குரலில் சிரித்தாள்.

“அக்கா.. ஆக மொத்தம் பதினாறு வயதினிலே சப்பாணி மாப்பிள்ளைத்தான் உனக்கு”

“கொழுப்புடி உங்களுக்கு! பணக்காரங்க பெருந்தன்மையா இருந்தா இப்படித்தான் உலகம் பேசும். கட்டிக்கப்போறவளை கேட்போம். என்னடி சொல்றே?”

எல்லோரும் கோதையின் பக்கம் திரும்பினர்.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த கோதை விருட்டெனெ எழுந்தாள்.

“அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லிடு”

அதுவரை விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்த தங்கைகள் வேதனையாகப் பார்த்தனர்.

“இதப்பாருடி இவளுங்க ஏதோ விளையாட்டா பேசுனதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதே. மாப்பிள்ளைக்கு எந்தக் குறையும் இல்லை. ராஜா மாதிரி ஜம்முனு இருக்கார்.

“ஆமாக்கா. நாங்க சும்மா உன்னை கலாய்க்கத்தான் சொன்னோம்” தங்கைகள் சட்டென்று சரண்டர் ஆயினர்.

“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு இஷ்டமில்லை.” கறாராக சொன்னாள் கோதை.

“அக்கா உன் முடிவுலதான் என் வாழ்க்கையும் அடங்கியிருக்கு. ப்ளீஸ்க்கா…” மீரா கோதையின் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள்.

“அக்கா முடிவுலதான் உன் வாழ்க்கை அடங்கியிருக்கா?  நீ என்ன அந்த குமணவள்ளலை ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கப் போறியா?”

“ச்சீ… அசிங்கமா பேசாதே. தெருமுனையில இருக்கானே ஆட்டோக்காரன்…”

“யாரு ரவியா?”

“அவன்தான். அவன் தினமும் என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்றான். ப்ரபோஸ் கூட பண்ணினான். நீ மட்டும் இந்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலைன்னா நான் அவனுக்கு ஓகே சொல்லியாகனும்.’

“அடிப்பாவி இது எப்பத்திலிருந்து?”அம்மா அதிர்ச்சியாக மீராவைப் பார்த்தாள்.அதே அதிர்ச்சியுடன் பானுவையும் பார்த்தாள்.

“ஏன்டி உன்னையும் இந்தமாதிரி யாராவது ஃபாலோ பண்றாங்களா?”

“தினமும் நான் போற பஸ்ல வர்ற கண்டக்டர் ரெண்டு நாளா டிக்கட்டுக்கு காசு வாங்கிக்க மாட்டேங்கறான்.  எனக்கு சந்தேகமா இருக்கு”

“அக்கா.. நீ மட்டும் குமணவள்ளலை கட்டிக்கலைன்னா நாங்க ஆட்டோ டிரைவரையும், பஸ் கண்டக்டரையும்தான் கட்டிக்கனும். நீ இவரைக் கட்டிக்கிட்டா நாங்களும் ஒரு நகைக்கடைக்காரனையோ, ஒரு ரியல் எஸ்டேட் ஓனரையோ கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“பேராசை பெருநஷ்டம். வேலையைப்பார்த்துக்கிட்டு போங்க.எனக்கு இஷ்டம் இல்லை. “

சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள் கோதை.

அம்மா முகம் வாடிப் போனாள்.

“என்னடி இப்படி சொல்லிட்டுப் போறா? “

“அம்மா ஏதாவது வாங்கிக்கொடுன்னு கேட்டா நீ சொல்லுவியே விரலுக்கு ஏத்த வீக்கம் வேணுமின்னு அதையேத்தான் இப்ப அக்கா சொல்லிட்டுப் போறா” மீரா சொல்ல பானு “வீக்கமே வியாதிதான். இதுல என்ன விரலுக்கு ஏத்த வீக்கம்” என தலையில் அடித்துக்கொண்டாள்;

-(தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...