காத்து வாக்குல ரெண்டு காதல் – 2 | மணிபாரதி
அத்தியாயம்- 2
ராகவ், நந்தினி வேலைப் பார்க்கும் அதே ஆபிஸில் வேலை பார்க்கிறான்.
அழகாக இருப்பான்.
எந்த பெண்ணிற்கும் அவனை சட்டென்று பிடித்துப் போகும்.
அவன் தன்னுடன் பேச மாட்டானா, பழக மாட்டானா என ஏங்கும் பெண்கள் நிரைய உண்டு.
ஆனால்,
நந்தினிக்கு தான் அவன் மீது எந்த ஈர்ப்பும் இல்லை பாஸ்கரனின் வளர்ப்பு அப்படி என்றும் சொல்லலாம்.ராகவ் என்று இல்லை, எந்த ஆணுடனும் அவள் அவ்வளவு எளிதில் பழகி விட மாட்டாள்.
என்ன தேவையோ அதை மட்டுமே பேசுவாள். எவ்வளவு தேவையோ அவ்வளவு உடன் இருப்பாள். வெட்டிப்பேச்சு, வீண் வழிசல் இப்படி எதுவும் இருக்காது. ஆனால், ராகவ்விற்கு நந்தினி மீது ஒரு கண் உண்டு.
“என்ன மேடம்.. குட் மார்னிங் சொன்னா திருப்பி சொல்ல மாட்டங்குறிங்க..“ என வழிவான்.
அவள், அதற்கு பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே உதிர்ப்பாள். பேச்சு கொடுத்தால் பேச்சு வளரும் என்பது அவளுக்கு தெரியும்.
அதனால் ஒதுங்கிப் போவாள். அவன் “ரொம்ப கஷ்டம்..“ என்பான் அலுத்துக் கொண்டவனாக… அவள் அதற்கும் புன்னகையை பதிலாக அளித்து விட்டு செல்வாள்.
ஒருநாள், அவர்களுடன் வேலைப்பார்க்கும் பத்மா, ராகவ்விடம் “நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரியரலயா..? அவதான் பிடி குடுக்க மாட்டங்குறா இல்ல… அப்புறமும் எதுக்காக அவகிட்ட போய் வழிஞ்சுகிட்டு இருக்க..“ எனக்கேட்டாள்.
“அவகிட்ட வழியுறதுனால நீ அழகு இல்ல.. உன்னை புடிக்கலன்னு அர்த்தம் இல்ல.. இது வேற.. அதாவது, கிடைக்காத பொருள் மேல ஒரு ஏக்கம் வரும் இல்ல.. அந்த ஏக்கம்தான் அவ மேல எனக்கு..“
“உன்னை மாத்துறது ரொம்ப கஷ்டம்.. எப்படியாவது தொலைஞ்சு போ..” பத்மா முறுக்கிக் கொண்டு போனாள்.
ராகவ் அதைப் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டான்.
ஒருநாள், ராகினியிடம் வெளிப்படையாகவே பேசினான்.
“ராகினி.. உங்க கூட நா ஒரு காபி சாப்பிடனும்ன்னு ஆசைப்படுறேன்.. சாப்பிடலாமா..“
“நம்பர் பதினெட்டு, பிள்ளையார் கோவில் தெரு, வளசரவாக்கம்.. இந்த அட்ரஸ்க்கு வந்திங்கன்னா சாப்பிடலாம்..“
“அந்த அட்ரஸ்ல காபி ஷாப் எதுவும் இருக்கா என்ன..“
அவளுக்கு சிரிப்பு வந்தது.
“அது என்னோட வீட்டு அட்ரஸ்.. வந்திங்கன்னா சேர்ந்து சாப்பிடலாம்..”
“எங்கப்பா நல்ல காபி மேக்கர்.“
அவன் வாடி போனான்.
“நா எதாவது ஒரு காபி ஷாப்ல சாப்பிடனும்ன்னு ஆசைப்பட்ரேன்..“
“ஸாரி.. அந்த மாதிரி பழக்கம் எனக்கு இல்லை..“ என்று கூறி வேகமாக நடையை கட்டினாள். அவனுக்கு கோபம் வந்தது. ஆனால், காட்டிக் கொள்ள வில்லை.
பத்மா அருகில் வந்து
“என்ன.. நல்லா நோஸ் கட் குடுத்தாளா..“ எனக்கேட்டாள்.
அவன் “இன்னிக்கு இல்லன்னாலும் என்னிக்காவது ஒருநாள் அவ என் கூட காபி ஷாப்ல உட்கார்ந்து காபி சாப்பிடுவா.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..“ என்று உறுதியாக கூறினான்.
பத்மா “பார்க்கலாம்..“ என்று கூறி “சத்யத்துல ஷாருக்கான் படம் ரிலீஸாயிருக்கு.. போகலாமா..“ எனக் கேட்டாள்.
அவன் “ஸாரி பத்மா.. நா இப்ப படம் பாக்குற மூட்ல இல்லை..“ என்றான்.
அவள் “இதுவே நந்தினி கூப்பிட்டுருந்தா இந்நேரம் நாக்க தொங்கப் போட்டுகிட்டு அவ பின்னாடி போயிருப்ப..“ என்றாள் சற்று கோபமாக.
அவன் அவளது கோபத்தை கண்டு கொள்ளாதவனாக “அப்படி ஒரு நாளைதான் ஆவலா எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்.. நடக்க மாட்டங்குதே..“ என்று கூறி அவளிடமிருந்து விலகி சென்றான்.
மறுநாள் –
ராகவ் பத்மாவை தேடி வந்தான். கம்ப்யூட்டரில் கவிழ்ந்து கிடந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“ஷாருக்கான் படம் எப்படி இருந்துது..“
“நானும் போகல..
படம் முழுக்க ரொமான்ஸ்ன்னு ரிவ்யூல பார்த்தேன்..
தனியா போய் என்ன பண்றது..“
“உன் எண்ணம் சீக்கிரமே நிறைவேறனும்ன்னு கடவுள்கிட்டே பிரெ பண்ணிக்குறேன்…“ என்று கூறி
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா..“ எனக்கேட்டான்.
“சொல்லு..“
“நந்தினிய நுங்கம் பாக்கத்துல இருக்குற காபி ஷாப்புக்கு அழைச்சுட்டு வறியா..“
அவள் அவனை கேவலமாக பார்த்தாள்.
“இது உனக்கே அசிங்கமா தெரியல..“
“இல்ல பத்மா.. நா கொஞ்சம் அவ கூட பர்சனலா பேச வேண்டியது இருக்கு..“
“அதை இங்கயே பேச வேண்டியதுதான..“
“இல்ல கொஞ்சம் பிரைவசி வேணும்..“
“என்னால கூட்டிட்டு வந்துட முடியும்.. ஆனா நீதான் கூட்டிட்டு வர சொன்னன்னு அவளுக்கு தெரிஞ்சுது.. இப்ப உன் மேல இருக்குற மரியாதையும் போயிடும்.. அது மட்டுமில்ல.. என்கிட்ட பயங்கரமா கோச்சுக்குவா..“
“நா என்னதான் பண்றது..“
“நீதான் முயற்சிக்கனும்.. நடுவுல மீடியேட்டர் செட் பண்ண, மாட்டிக்கிடுவ..“
அவன் யோசித்தான்.
“ஓகே.. ஐ வில் ட்ரை அகெய்ன்..“
அப்போது அந்தப்பக்கம் நந்தினி நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அவன் கப்சிப் ஆனான்.
அதை கவனித்த பத்மா நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
அருகில் வந்த நந்தினி ராகவ்விற்கு “ஹாய்“ சொல்லி விட்டு,
பத்மாவிடம் ஒரு ஃபைலை கேட்டு வாங்கினாள்.
பத்மா அவளிடம் “நந்தினி, சார் ரொம்பதான் கவலைப்பட்டுகிட்டு இருக்கார்.. அவர் கூட போய் ஒரு காபி சாப்புடுறதுல என்ன தப்பு இருக்கு..“ எனக்கேட்டாள்.
அதற்கு அவள் “ஏன் நீ போய் சாப்பிடுறதுதானே..“ என சுருக்கென்று கேட்டாள்.
பத்மா அதைப்பற்றி கவலைப்படாமல்
“அவன் உன்னைதான கூப்பிடுறான்..“ என்றாள். நந்தினி திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.
அவள், மனதில் “டன் கணக்குல வழியுது..“ எனக நினைத்து, தனது எண்ணத்தைக் காட்டிக் கொள்ளாதவளாக
“ஓகே.. இன்னிக்கு ஈவ்னிங் போகலாம்..“ என்று கூறி அங்கிருந்து சென்றாள்.
பத்மா அவனிடம் “இப்ப சந்தோஷமா..“ எனக் கேட்டாள்.
அவன் அவளது கையைப் பற்றி புறங்கையில் முத்தமிட்டு “தாங்ஸ்டி..“ என்று கூறி, துள்ளி குதித்து ஓடினான்.
அவள் “அடப்பாவி..“ என்று கூறி, தன் புறங்கையை ஒரு முறை பார்த்து விட்டு தன் வேலையை தொடர ஆரம்பித்தாள்.
காபி ஷாப்.
ராகவ், நந்தினி இருவரும் ஒரு இடத்தை தேர்வு செய்து உட்கார்ந்தார்கள்.
பேரர் ஆர்டர் கேட்க, ராகவ் நந்தினியிடம் “உங்க ஃபேவரைட் என்ன..“ எனக்கேட்டான்.
அவள் “சாதாரன ஃபில்டர் காபி போதும்..“ என்றாள்.
அவன் பேரரிடம் “ஒரு ஃபில்டர் காபி.. ஒரு கோல்ட் காபி..“ என்றான்.
பேரர் நகர்ந்தான்.
ராகினி “ நீங்க என்கிட்ட பேசனும்ன்னு நினைக்குறத இப்ப தாராளமா பேசலாம்..“ என்றாள்.
அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.
“யாரும், கூட வந்து காபி சாப்பிடுறதுக்காக இவ்வளவு தூரம் மெனக்கெட மாட்டாங்க.. மனசுல எதோ இருக்கு.. அதை வெளில சொல்லனும்.. அதுக்கு தகுதியான ஒரு இடம் வேணும்.. அந்த இடமா இந்த காபி ஷாப்பா நீங்க நினைக்குறீங்க.. சொல்லுங்க.. என்கிட்ட என்ன பேசனும்..“
அவன் மிரண்டுதான் போனான். என்ன பெண் இவள்?
எச்சில் விழுங்குவதற்கு கூட நேநரம் தராமல் மடக்குகிறாள்.
அவனுக்கு யோசித்து பேச வேண்டும். கோர்வையாக ஒரு வரி கூட கைவசம் இல்லை.
அவசரத்தில் ஏதாவது உளறி வைத்தால், அப்புறம் சந்தர்பம் வீணாகி விடும்.
ஆனால்,
அவள் அவனை விடுவதாக இல்லை.
“என்ன பதிலேக் காணோம்.. இந்த சந்தர்பத்தை மிஸ் பண்ணிங்க.. இன்னொரு சந்தர்பம் அமையுறது ரொம்ப கஷ்டம்..“
இதற்கு மேல் யோசிப்பதில் அர்த்தமில்லை என்பதை புரிந்து கொண்ட அவன், என்ன வருகிறதோ அதை அப்படியே பேசி விடலாம் என முடிவு பண்ணி “நந்தினி உங்கள எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு..“ என்று சொன்னான்.
“இங்கதான் வந்து நிப்பிங்கன்னு தெரியும்.. ஒண்ணும் தப்பு இல்ல.. யாருக்கும் யாரை வேணும்ன்னாலும் புடிக்கலாம்.. அதை வெளில சொல்லவும் செய்யலாம்.. ஆனா, அது நடைமுறைக்கு சாத்தியமான்னு பாக்கனும்.. என்னைப் பொருத்த வரைக்கும், எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்ல.. வேற சில கமிட்மென்ட்ஸ் இருக்கு.. அதை நா நடைமுறை படுத்தனும்.. அதுக்கு எவ்வளவு காலம் ஆகும்ன்னு எனக்கு தெரியாது.. ஸோ ஸாரி..“ அப்போது காபி வந்தது. இருவரும் அதை எடுத்து அமைதியாக குடித்தார்கள். அவன் பில்லிற்கு பணம் கொடுத்தான். அவள் “நா வரேன்..“ என எழுந்து வெளியே சென்றாள். அவன் ஏமாற்றத்துடன் பார்க்க, கவலை சூழ்ந்து கொண்டது.
–காற்று வீசும்