நீ என் மழைக்காலம்… – 1 | இ.எஸ்.லலிதாமதி

 நீ என் மழைக்காலம்… – 1  | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 1

கொஞ்சம் மழை வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது.

காரணம் அடித்துது வைத்து சாலையில் செல்வோரை, காய வைத்துக் கொண்டிருந்தது வெயில்.

அந்த வெயிலை கிழித்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வேகமாகப் பயணித்தாள் நிவேதிதா.

இருபது நிமிட காய்தலுக்குப்பின்,  வண்டியை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு,

முதல் மாடியில் உள்ள தன் வீட்டை, இரண்டிரண்டு படியாக ஏறி அடைந்தாள்.

கதவைத் திறந்தக் கொண்டு உள்ளே சென்றாள்.

முகத்தையும்,  தலையையும் சுற்றியிருந்த துப்பட்டாவின் முடிச்சை அவிழ்த்தாள்.

தோளில் தொங்கிய பையை,  ஒருபக்கம் தூக்கிப் போட்டாள்.

நெற்றி,  கழுத்து என்று கோடு போட்டாற் போல்,  இறங்கிய வியர்வை நீரை,  துப்பட்டாவை கொண்டு துடைத்தாள்.

‘ஸ்ஸப்பா! என்ன ஒருவெயில்! ‘

தனக்குள்ளே முனகிக் கொண்டாள்.

வார்த்தா புயல் வந்து சென்னை நகரில் நின்றிருந்த மரங்களை எல்லாம் வாரி எடுத்து போய்விட்டதால் தான், இந்த வருடம் வெயில் இப்படி கொளுத்துகிறதோ என்று நினைத்தாள்.

உடலே அனல் காற்றில் எரிவது போல் இருக்க,  ஃபேன் காற்றும்,  ஏ.சி. யும் போதாது என்று தோன்றியது.

குளித்தால் தான் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று நினைத்தாள் .

வாசல் கதவை இழுத்து தாளிட்டவள்,

தலையில் இருந்த கிளிப்பைக் கழற்றி மேசை மீது போட்டாள்.  முடி முதுகில் புரள,

துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.

ஆடைகளைக் களைந்து விட்டு,  ஷவரை திறந்து விட்டாள்.

நீர்ச்சரங்கள் உச்சந்தலையில் இறங்கியதுமே , ஜில்லென்று உடல்சிலிர்த்தது.  மெது மெதுவாய் வெம்மை தணியத் தொடங்கியது.

மழை விழுகையில் மனம் குளிர்வது போல் குளிர்ந்தது,
இதமளித்தது. விழும் நீரின் முன்னால் முகத்தை காட்டி கண்களை மூடினாள்.

இத்தனை நேரம் இருந்த உடல் சூடு,  இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. முகத்துக்கு ‘பேஸ்வாஷ் ’போட்டு கழுவினாள்.

நீரை இருகரங்களிலும் அள்ளி வாயில் வைக்கச் செல்கையில்,  அவன் வந்து நினைவுகளில் நின்றான்.

இவளையே வேடிக்கைப் பார்த்தான்.

‘‘அறிவு கெட்ட முண்டம். உனக்கு நேரம் காலமே கிடையாதா?’’

செல்ல மாய்திட்டினாள்.

அவன் மீதும் நீரை வாரி இறைத்தாள்.

‘‘உன்னை பார்க்க எனக்கு எதுக்கு நேரம் காலம்?

நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன்’’

அவன் கண் சிமிட்டினான்.

‘‘அலோ… நான் குளிச்சிட்டு இருக்கேன். வெளியில் போ’’என்றாள்.

‘‘நீ குளிக்கிறேன்னு தெரிஞ்சுதான் வந்தேன்’’ அவன் அவளைவம்புக்கு இழுத்தான்.

‘‘நான் அப்படித்தான் உன்னை வந்து தொந்தரவு பண்ணுகிறேனா?’’ இவள் திருப்பிக் கேட்டாள்.

முகத்தை பாவமாய் வைத்து கொண்டாள்.

‘‘நானாவது பரவாயில்லை. நீ மகா மோசம். என்னை தூங்கவிடாமல், சாப்பிடவிடாமல், வேலை செய்யவிடாமல் எப்பப்பாரு எதிரில் வந்து உட்கார்ந்துக் கொள்கிறாய்!

இல்லாட்டி காதோரம் வந்து கிசுகிசுக்கிறாய்.
நான் பக்கத்தில் இருக்கும் போது உனக்கென்னடா வேலை? என்று பேனாவை பிடுங்கிக் கொள்கிறாய்.

கம்ப்யூட்டரை அணைத்து வைத்து அட்டகாசம் செய்கிறாய், தெரியுமா?’’

அவன் பட்டியலை நீட்டிக் கொண்டே போக,  அம்மாடியோவ்! என்று மலைத்தாள் அவள்.

‘‘அப்படியா செய்கிறேன்.

இவ்வளவு கொடுமையா உன்னை பண்ணுகிறேன்?’’

அவள் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டாள்.

‘‘சே! சே! இதெல்லாம் கொடுமை என்று யார் சொன்னது?

எனக்குப் பிடிச்சிருக்கு .

நீ தொந்தரவு பண்ணுவதால் தான் வாழ்க்கை எனக்கு இனிக்கிறது.

இல்லாட்டி போரடிக்கும். கசக்கும். வெறுமையாக இருக்கும்.

அடுத்த நொடி என்ன செய்வது என்று தோன்றும்.

காதல் தான் ஒருவரை சுறுசுறுப்பாய் இயங்க வைக்கிறது தெரியுமா? காதலிக்காதவர்கள் எப்போதும் சோர்வாய்,  மந்தமாய், எதையோ பறிகொடுத்த மாதிரி உம்மென்று இருப்பார்கள்’’

அவன் கண்சிமிட்டி சிரித்தான்.

“தீசஸ் ரொம்ப பலமாகப ண்ணியிருக்கிறாய் போல ” என்றாள்.

“இதுக்கெல்லாம் ஆய்வே தேவையில்லை.

மனசில் காதல் இருந்தாலே போதும் எல்லாம் தானே வந்து கொட்டும்” என்றான்.

“எனக்கு அப்படி எதுவும் கொட்டலியே”

அவள் வேண்டுமென்றே பளிப்பு காட்டினாள்.

“நெஜமா சொல்லு! என்கண்ணைப் பார்த்து சொல்லு…. உனக்கு மனசில் எதுவுமே தோணலியா?

கனவு வரவில்லையா?

ஒரு முத்தம் கூட தரவில்லையா?

தூக்கம் கலையவில்லையா?”

அவன் அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்பவும்,

“சீபோடா”  என்று அவனை தள்ளிவிட்டாள்.

நினைவுகளில் இருந்தும் துரத்திவிட்டாள்.

மனதை கலைத்து கொண்டு, பாதங்களில் ஈரம் பதிய, கதவைத்திறந்து கொண்டு, வெளியில் வந்தாள்.

‘ஏன் எப்போதும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது மனம்?

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு,  பேசிக்கொண்டு,  அவனை யேரசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறது ?

உலகத்தில் எத்தனையோ பேரை தினமும் சந்திக்கிறோம். பார்க்கிறோம். ஆனால்

அத்தனைப் பேரையும் இப்படி பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று துடிப்பதில்லையே ஏன்?

அவனை அருகில் அமர்த்தி,  கைவிரல்களை பற்றிக் கொள்ளவேண்டும்.

அவன் தோளில் ஆறுதலாய் சாய்ந்து கொள்ள வேண்டும்.

கதை பேசவேண்டும். வம்பிழுக்க வேண்டும்.

மழை பெய்கையில் உடன் நனைய வேண்டும்.

சாரல் அடிக்கையில் சேர்ந்து ரசிக்க வேண்டும்.

ஒரு நொடியும் பிரியாது அவனை யுகம்யுகமாக கண்களுக்குள் வைத்து பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்று தான் எப்போதுமே நினைக்கிறது மனம்.

அலுவலகப் பணியில் இருக்கும் போது கூட அவனைப் பற்றிய நினைப்பு தான் அடுப்படி பூனைக்குட்டியாய் மனதில் உறங்கிக் கொண்டுஇருக்கிறது.

நிற்கையில் நடக்கையில்,  உண்கையில்…. இப்படி எல்லாமாக மாறிப்போன அவனாகவே அல்லவா நான் இருக்கிறேன்?

எதற்காக அவன் மீது இத்தனைப் பிரியம்.

பிரியத்தை விட,  பித்து என்று சொல்லலாமா?

காதல் என்றால் பித்துப் பிடிக்கத்தான் செய்யுமா?

புரியவில்லை அவளுக்கு.

காதலுக்கு முன்பிருந்த நிவேதிதா வேறாக இருந்தாள்.
காதலுக்குப்பின்பான நிவேதிதா வேறாக மாறியிருக்கிறாள்.

விடியலில் தொடங்கி இரவு வரையிலும் நீளும் நாட்கள்,
சதா அவனுக்கான நாட்களாக இருக்கின்றன.
நான் ஏன் அவனை பார்த்தேன்?  ஏன்பேசினேன்?

பார்த்தால்,  பேசினால் இப்படித்தான் பைத்தியம் போல் காதல் கொள்ள வேண்டுமா?

கிறுக்குத்தனம் பிடிக்கவேண்டுமா?

நீளும் பொழுதுதெல்லாம் அவனை  சுமந்து திரிய வேண்டுமா? ஏன் இப்படி இருக்கிறேன் நான்?

எனக்கென்ன வாய்த்தது?

உலகத்தில் காதல் பிடித்தவர்கள் எல்லாம் இப்படித்தான் என்னைப்போல் இருப்பார்களா?

என்னைப்போல் திரிவார்களாக?  சுற்றுவார்களா?’

புரியவே இல்லை அவளுக்கு.

யாரிடம் போய் சொல்வது இதையெல்லாம்?

கடலளவு காதலை உள்ளத்தில் சுமந்து கொண்டு திரியும் என் வலியையும் வேதனையும் எப்படி புரியவைப்பது?

அவனிடம் சொன்னால் கூட புரியாது என்காதல்.

கேட்டால் சிரிப்பான்.

இதோ நீ இருக்கும் ஊரில் தானே இருக்கிறேன் என்பான்.

ஊரில் இருந்தால் போதுமா?

போனில் பேசினால் போதுமா?

குறுந்தகவல் தட்டி விட்டால் எல்லாம்சரியாகுமா?

அவனை பார்ப்பதில் இருக்கும் நிறைவு

இவையாவும் நிவர்த்தி செய்யுமா?

அன்பு ஏன் இப்படி ஆட்டிப்படைக்கிறது?

அவனுடனே இருந்து தொலைய வேண்டும் என்று ஏங்குகிறது?

பேசாமால் பூமிக்கு அவன் பெயரை வைத்து விடலாமா?.

சந்திரனுக்கு அவன் நிறம் தான் பொருத்தம் என்று சொல்லிவிடலாமா?

நட்சத்திரங்கள் அவனிடம் சிரிப்பை இரவல் வாங்கிக் கொள்ள சிபாரிசு செய்யலாமா?

என்னென்னேவோ யோசித்தாள்.

என்னென்னவோ செய்தாள்.

பார்க்கும் பொருளை எல்லாம் அவனோடு ஒப்புமைப்படுத்திப் பார்த்தாள்.

கேட்கும் இசையை அவனுடன் பொருத்தினாள்.

காணும் யாவற்றிலும் அவனைக் கண்டாள்.

நினைக்கும் யாவற்றிலும் அவனை நினைத்தாள்.

படுக்கையறைக்கு வந்து பீரோ கண்ணாடி முன் நின்றாள்.

துண்டை பிரித்து குனிந்தபடி தலையை துவட்டினாள்.

கண்ணாடியில் முகத்தை உற்றுப்பார்த்தாள்.

பசலை நோயால் குறுந்தொகை தலைவி உடல் மெலிவதாய் பாடலில் படித்து இருக்கிறாள்.

ஆனால் தான் மெலிந்த மாதிரி தெரியவில்லையே என்றுநினைத்தாள்.

முன்பைவிடவும் கன்னம் இப்போது பூசினாற் போல் தோன்றியது. கண்கள் அழகாய் மலர்ந்திருந்தன.

முகத்தில் வசீகரம் கூடியிருந்தது.

`அகத்தில் புகுந்து கொண்டு முகத்தில் விளையாடுகிறானா அவன்?’

செல்லமாக கடிந்து கொண்டாள்.

காதல் எல்லாவற்றையும் மாற்றுகிறது.

உடலை,  உள்ளத்தை,

சுற்றுப்புறத்தை அனைத்தையுமே அழகாக்கிவிடும் வல்லமை காதலுக்கு வாய்த்திருப்பது வியப்பை அளித்தது நிவேதிதாவுக்கு .

மின்விசிறியை கூடுதலாக சுழல விட்டு,  தலையின் ஈரத்தைக்காய விட்டாள். கண்ணாடியில் ஒட்டிவைத்திருந்த பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள்.

இப்போது இன்னும் கூடுதல் பொலிவை முகம் கொடுத்தாலும் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றியது.

என்னது என்று யோசித்து, முகத்தை வலமும் இடமுமாக கண்ணாடி முன்நின்று திருப்பிப் பார்த்தாள்.

இடதுப் பக்க மூக்கில் மின்னிய மூக்குத்திக் காணோம்.

‘பகீர்’ என்று பதறியது மனம்.

காரணம் அது அவன்,

கார்த்திக் வாங்கிக் கொடுத்த மூக்குத்தி…
-(சாரல் அடிக்கும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...