கரை புரண்டோடுதே கனா… – 1 | பத்மாகிரகதுரை

 கரை புரண்டோடுதே கனா… – 1  | பத்மாகிரகதுரை

   

      அத்தியாயம் – 1

ங்கள் அடிமனதில் என்ன இருக்குதுன்னு இப்பத்தானே எனக்கு தெரியுது..” தரையில் உருளும் வெங்கலடம்ளராய் மனோரமாவின் குரல் உயர்ந்துகேட்டது..

“என்னத்தடி பெரிசா தெரிஞ்சது..?” கற்பாறையில் உரசும் கருங்கல்லாய் மாதவனின் குரல்..

“உங்க பவுசும் உங்க வீட்டாளுங்க பவுசும் இப்பத்தான் எனக்கு புரியுது..”

“போடி போக்கத்தவளே,  இவள் பெரிய பவுசு குடும்பத்தை சேர்ந்தவ.. நீயெல்லாம் பவுசை பத்தி பேசுற பாத்தியா.. அதைத்தான் என்னால் பொறுத்துக்க முடியலை..”

“என்ன சொன்னீங்க..?  போக்கத்தவளா..?  நான் போக்கிடம் இல்லாதவளா..? அப்போ நீங்க யாரு..?  சோழபரம்பரை மகராசாவா..?”

“ஆமா இவள் பாண்டியகுல அரசகுமாரி.. என்னை கேட்கிறா..?”

“நான் ராசபரம்பரையா இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் ராஜகுமாரி மாதிரித்தான் வளர்ந்தேன்..”

“அட அப்படியா..?  எந்த ராசாங்கத்தை உனக்கு உங்க அப்பா வாங்கி தந்தாரும்மா..?”

“நிச்சயம் வாங்கித்தந்திருப்பாரு தான்.. நான் அவர் பேச்சைக்கேட்டு கட்டுப்பாடா இருந்திருந்தால் எனக்கு பெரிய சமஸ்தானத்தையே வாங்கித்தந்திருப்பார்.. ஆனால் என்புத்தி தான் புல்லு புடுங்க போயிடுச்சே..”

“ஏன் என்னடி வாய் ஓவரா போகுது..? அறைஞ்சேன்னா பல்லெல்லாம் பேந்துடும்..”

“ஓஹோ அடிக்கிற அளவு போயாச்சா..? கேட்க ஆள் இல்லைங்கிற நினைப்புதானே..?  அடிங்க.. அடிச்சு கொல்லுங்க..”

ஆராத்யா தான் எழுதிக்கொண்டிருந்த நோட்டை பட்டென மூடினாள்.. இல்லை இனியும் முடியாது அவளும் இவர்கள் சண்டை ஆரம்பித்த நிமிடத்திலிருந்து பேச்சுக்களை காற்றில் பறக்கவிட்டு விட்டு தனது பாடத்தில் கவனத்தை செலுத்த முயன்று கொண்டிருந்தாள்.. ஆனால் முடியவில்லை..

சை இவர்கள் எத்தனை வருடமானாலும் திருந்தவே மாட்டார்கள்.. எரிச்சலோடு நினைத்தாள்.. அவளது சிறுவயதிலிருந்தே இவர்கள் இப்படித்தான் இருக்கின்றனர்..

சை.. இவர்களுக்கு போய் மகளாகப் பிறந்தேனே.. எப்போதும் போல் தன்னையே நொந்து கொண்டாள்.. இனி இங்கிருந்தால் ஒருவரி கூட மூளையில் ஏறாது.. நோட்டை மூடி காலேஜ் பேகிற்குள் வைத்தாள், டேபிளில் இரைந்து கிடந்த மற்ற புத்தகங்களையும் பேகிற்குள் வைத்து பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்..

திடுமென நினைவு வந்து திரும்ப அறையினுள் வந்து கண்ணாடி முன்நின்று தன்னைப் பார்த்துதலை முடியை கோதிக் கொண்டவள், பொட்டினை  நடு நெற்றியில் அழுத்திக் கொண்டு பவுடர் போடவா என யோசித்து ப்ச்.. ஆமாம் இப்போ ரொம்ப தேவை மனதிற்குள் சலித்தபடி சுடிதார் ஷாலை சரி செய்து கொண்டு படியிறங்கி கீழே வந்தாள்..

“அன்னைக்கு அந்த கருப்பசாமி கோவில் கிட்டவே உன்னையை விட்டுட்டு வந்திருக்கனும்டி..”

“வாசப்படியை தாண்டி காலெடுத்து வச்சேன்ல.. அதான் இப்போ அனுபவிக்கிறேன்.. ”

ஹாலில் நின்று மெல்ல டைனிங் ரூமுக்குள் எட்டிப்பார்த்தாள் ஆராத்யா.. உள்ளே மாதவன் சேரில் உட்கார்ந்தபடி கிச்சனை பார்த்துகத்தியபடி இருக்க, மனோரமா கிச்சன் வாசலில் கையில் மரக்கரண்டி வைத்துக்கொண்டு மூக்குறிஞ்சிக் கொண்டிருந்தாள்.. இப்போது சாப்பிட போனால் இருவருக்கும் பஞ்சாயத்து பண்ணுவதிலேயே இந்தநாள் போய்விடும் என ஆராத்யாவிற்கு தெரியும்..

அப்படி ஒரு முழுநாளை வீணடிக்க அவள் விரும்பவில்லை.. அவள் ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் இருக்கிறாள் கைதிருப்பி மணிக்கட்டில் நேரம் பார்த்தவள் பரபரத்து வீட்டைவிட்டு வெளியே வந்து வாசல் கதவை சத்தமின்றி சாத்தினாள்..

ஓசையின்றி தன் ஸ்கூட்டியை மெல்ல உருட்டி எடுத்தாள்..

கடைசி நேரத்தில் காம்பவுண்ட் கேட்டை தாண்டுகையில் அதன் தாழ்பாள் அசைந்து சத்தமெழுப்பிவிட அவசரமாக கேட்டை மூடிவிட்டு, ஸ்கூட்டியில் ஏறி உட்கார்ந்தாள்..

அந்தசத்தத்திற்கே மனோரமா வாசல் படிக்கு வந்து விட்டிருந்தாள்..

“ஆரா சாப்பிட்டு போடி..”கத்தினாள்..

“எனக்குவேண்டாம்.. சண்டைபோட்டு முடிச்சுட்டு.. நீயும் உன் புருசனுமே கொட்டிக்கோங்க..” சொன்ன மறுநொடியே ஸ்கூட்டி, பட்டனைஅ ழுத்திஸ்டார்ட் செய்து பறந்துவிட்டாள்..

மகள் சாப்பிடாமல் போகும் கவலை கணவன் மேல் கோபமாக திரும்பியது மனோரமாவிற்கு எல்லாம் அந்த மனுசனால வந்தது..

புள்ளை காலையில காலேஜீக்கு போகும் போது இப்படியா என் வாயைபுடுங்கி சண்டையை ஆரம்பிப்பாரு..

அவரை.. கையில் வைத்திருந்த மரதோசைக் கரண்டியை சுழற்றியபடி உள்ளே ஆக்ரோசமாக நுழைந்தாள்..

“ஆரா இன்னைக்கு நம்ம டிபார்ட்மெண்ட் ஹெட்டு கிட்ட டிரையல் பார்க்கிறதுக்கு ரஞ்சித் பெர்மிசன் வாங்கிட்டான்டி.”

அவள் ஸ்கூட்டியை ஸ்டான்டில் நிறுத்தும் முன்னரே அவள் வண்டியின் முன்வந்து விழுபவள் போன்ற சோகத்துடன் மூச்சுவாங்க வந்து நின்றாள் ரூபிணி,

முதலில் அவள் ஓடி வந்த வேகத்திற்கு முகம் சுளித்த ஆராத்யா, அவள் சொன்ன செய்தியில் முகம் மலர்ந்தாள்.

“ஏய்நிஜமாகவாடி..?”

“ஆமான்டி..ஒரு மாதமாக இதோ அதோன்னு இழுத்தடித்துக் கொண்டே இருந்தாரே..

அவர் பின்னேயே அலைந்து,  அவர் மூட் பார்த்து பேசி, கொஞ்சம் ஐஸ் வைத்து என்று எப்படியோ நம்ம ப்ராஜெக்டை பார்க்க இன்னைக்கு பெர்மிசன் வாங்கிட்டான்..

கிரிக்கெட்க் கிரௌண்டுக்கு இன்று ஈவினிங் போர் ஓ க்ளாக் வரச் சொல்லியிருக்கிறாராம்..”

“ஹை.. சூப்பர்டி,  ரஞ்சித் எங்கே..? முதலில் அவனுக்குத் தான் ஹேண்ட் ஷேக் பண்ணனும்..”

“அவன் க்ளாஸ் போயிட்டான்டி,

நீ ஏன் இவளோ லேட்..? நான் உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்..”

“அதுவேறகதை.. பசிக்குது.. வா கேன்டீன்ல என்ன இருக்குதுன்னு பார்க்கலாம்..”

“ஏய் க்ளாஸ் போயிட்டிருக்குடி..”

“இந்த க்ளாஸை கட் அடிச்சிடலான்டி.. எனக்கு பசியில் காது அடைக்குது.. இப்போ போய் க்ளாஸ்ல உட்கார்ந்தாலும் ஒண்ணும் காதுல விழாது..”

“ஏன்டிசாப்பிடலையா..? ஏன்..?”

“சும்மாதான்..

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அவுங்கவங்க ஆபிஸ்ல ஏதோ முக்கியமான மீட்டிங்காம்..

சீக்கிரமே ஆபிஸ் போயிட்டாங்க.. அதுதான் இன்னைக்கு சமைக்கலை..”

தன் குடும்ப ரசாபாசங்களை வெளிப்படுத்தாமல்ச மாளித்து பேசியபடி, தோசை ஆர்டர் செய்து கொண்டு டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“நம்ம டிபார்ட்மெண்ட் ஹெட் ஒகே சொல்லிட்டார்னா பிறகு நேராக பிரின்சிபால்,  கரெஸ்பாண்டன்ட்னு போயிடனும்டி,

அப்புறம் பேப்பர்ல நியூஸ் கொடுக்கனும்.. பிறகு பாரு எத்தனை கம்பெனி நம்மைதேடி வருவாங்கன்னு..

”ரூபிணி கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கலர் கலராக கனவு காண ஆரம்பித்தாள்..

“ஏய் போதும்டி.. ஓவரா ட்ரீம் பண்ணாதே..

முதலில் நம்ம காலேஜீல அப்ரூவ் பண்ணட்டும்.. அப்புறம் மத்ததை பார்க்கலாம்..”

“ஏன்டி அப்ரூவ் பண்ணமாட்டாங்க..?

இது எவ்வளவு நல்ல ப்ராஜெக்ட்.. இந்த போர்வே ரோட்ஸ் வந்ததிலிருந்து நிறைய ஆக்ஸிடென்ட்ஸ் தினமும் நடந்துட்டு இருக்கு..

அதெல்லாம் குறையும்னா எல்லோரும் இந்த ப்ராஜெக்டை விரும்பத்தானே செய்வாங்க..”

“அப்படித்தான் ரூபிணி..”

தலையாட்டி ஒத்துக்கொண்ட ஆராத்யாவிற்கும் ரூபிணியின் கருத்துக்களில் மாற்றமில்லை..

“இந்த ப்ராஜெக்டை ஆரம்பிக்கும் போது கூட இந்த அளவு சக்ஸஸ் ஆகும்னு நாம் எதிர்பார்க்கலையே..

இப்போது பாரேன்.. நாம் பெரிய ஆளாக வரப்போகிறோம்..

நாம் மூன்று பேருமாக தனியாக கம்பெனி தொடங்கி விடலாம்டி,

எந்த பாரின் கொலாப்ரேசனும் வேண்டாம்.. நமக்காக ஒரு கம்பெனி, இந்தியர்களாக.. தமிழர்களாக நாம் நிமிர்ந்து நிற்கனும்டி..”

ரூபிணியின் பேச்சுக்கள் ஆராத்யாவிற்கு புன்னகையை கொடுத்தது..

இது அவர்கள் மூவருடைய லட்சியம் தான்..

இந்த ப்ராஜெக்ட் செய்ய ஆரம்பிக்கும் போதே இது சக்சஸ் ஆனால் எந்த பெரிய கம்பெனியிடமும் விலை போகாமல் ப்ரெண்ட்ஸ் மூவரும் தாங்களாகவே தனித்து இயங்க வேண்டுமென்றே முடிவு செய்திருந்தார்கள்..

அதனையே இப்போது ரூபிணி பேசுகிறாள்..

ஆனாலும் அவளது கற்பனை கொஞ்சம் அதீத மென்றே ஆராத்யாவிற்கு தோன்றியது..

“ரூபிணி போதும் நிறுத்துடி..

அப்புறம் தயிர்காரி கதை மாதிரி ஆகிடப் போகுது..”

“அதென்னகதைடி..?”

“அரை ஆழாக்கு தயிர் வாங்கி உறை ஊற்றி வைத்துவிட்டு அதை விற்று வரும் பணத்தில் மாடு வாங்கி, வீடு வாங்கி, மனை வாங்கி,

என்று  கனவுகண்டு கொண்டே அந்த தயிர் பானையை போட்டு உடைத்து போட்ட முதலையே பாழாக்கினாளாம் ஒருத்தி..

அதுதான் தயிர்காரி கதை..”

சொன்னபடி அவர்களருகே வந்து அமர்ந்தான் ரஞ்சித்..

“ரஞ்சித் நீ க்ளாஸ் அட்டெண்ட் பண்ணவில்லையா..?”

“பர்ஸ்ட் அவர் முடிந்தது.. செகண்ட் அவர் நான் கட்..”

“ஏய் நாங்கள் ஏற்கெனவே பர்ஸ்ட் அவரே கட் பண்ணியிருக்கோம்.. இதற்கு போயே ஆக வேண்டும்..”

“சரிபோங்க..

நான் இன்னைக்கு ஈவினிங் நம்ம ப்ராஜெக்ட் டிரையலை நானே தனியாகவே செட் செய்கிறேன்..”

ரஞ்சித் சோககுரலில் சொல்லவும்,

ரூபிணி அவன் தலையில் தட்டினாள்..

“சரிதான்டா நிறுத்து.. இப்போது என்ன சொல வருகிறாய்..?”

“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம ஹெட்டிடம் அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கிறேன்..

நீங்கள் என்னடான்னா க்ளாஸ் அட்டென்ட் பண்ண போகிறேன் என்கிறீர்களே..”

“இம்பார்ட்டென்ட் க்ளாஸ்.. நீ அட்டெண்ட் பண்ணிவிட்டாய் மற்ற கிளாஸ்களுக்கு எங்களை போகவிடாமல் தடுக்கிறாயா..?”

ஆராத்யாமுறைத்தாள்.

“பர்ஸ்ட் அவர் நோட்ஸ் நான் தருகிறேன் படிப்பாளிகளே..

இப்போது வாங்க நம்ம ப்ராஜெக்ட் டிரையல் பார்ப்போம்..”

ரஞ்சித் சொன்னதை ஒத்துக்கொண்டு மூவரும் எழுந்து கல்லூரியின் பின்பக்க விளையாட்டு மைதானத்தை நோக்கி நடந்தனர்.

மாலை நான்குமணி,

டிபார்ட்மெண்ட்  ஹெட்  சடகோபன்  மாலை வெயிலை தனது உச்சந்தலையில் வாங்கி பளபளப்பாய் பிரதிபலித்துக் கொண்டிருந்தார்.. அவர்கள் காலேஜ் கிரிக்கெட் கிரௌன்டில் நின்றிருந்தனர்.

“ஆரா இவரோட தலை பளபளப்பினால் நம்ம ரஞ்சித்துக்கு எதுவும் பாதிப்பு.. ஐமீன் கண்கூசி.. அதுபோல எதுவும் ஆகாதே..”

ரூபிணியின் கமெண்டுக்கு அவளை முறைத்த ஆராத்யா,

“என்னடி முக்கியமான நேரத்தில் கிண்டல்..?”  என்றாள்..

“தோணுச்சு சொன்னேன்.. சரி அங்கே பார்..”

அங்கே ரஞ்சித் தனது பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தான்..

ஆராத்யாவும், ரூபிணியும் கண்களை அகல விரித்து அவனை பார்க்க

சடகோபன் தனது மூக்கு கண்ணாடியை சுழட்டி துடைத்து திரும்ப போட்டுக்கொண்டு ரஞ்சித்தை உற்றுபார்த்தார்..

ரஞ்சித் இப்போது ஹெல்மெட்டை தனது தலையில் மாட்டிக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான்..

வண்டி உறுமி கிளம்பியது..

அந்த கிரௌண்டை ஒருரவுண்ட் வந்தவன்,

இவர்கள் மூவரும் நின்றிருந்த இடம் அருகே நெருங்கும் போது, இடக்கையால் தலையிலிருந்த ஹெல்மெட்டை கழட்டி பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது வைத்தான்..

உடன் வண்டியின் வேகம் குறைந்தது.. தட்டுதடுமாறி திணறி பைக் சில அடிகளில் நின்றே விட்டது..

அது நின்ற இடம் சடகோபனின் அருகே..

அவர் வேகமாக பைக்கின் அருகே போய் ஆராய்ந்தார்..

ரஞ்சித்தின் ஹெல்மெட்டை வாங்கி ஆராய்ந்தார்..

“பென்டாஸ்டிக்..” பாராட்டினார்..

“யு ஆர் டூ யிங் எ கிரேட் ஜாப்ஸ் டூடன்ட்ஸ்..”
மூவரின் கைகளை குலுக்கினார்..

“சோ பைக் ஓட்டும் போது உங்களது இந்த ஹெல்மெட்டை போட்டுக் கொள்ளாவிட்டால் வண்டி ஓடாது..

ஆம் ஐ கரெக்ட்..?”

“அப்சலுயூட்லிசார்..
ஹெல்மெட் போட்டுக் கொண்டால் தான் வண்டி ஸ்டார்ட் ஆகவே செய்யும் வண்டி ஓடும் போது ஹெல்மெட்டை கழட்டி விட்டால் வண்டி தானாக நின்றும் விடும்..”

“குட்..

இது நிச்சயம் பெர்பெக்டான ப்ராஜெக்ட்..

நமது நாட்டிற்கும் தேவையானது கூட..

இது விசயமாக நான் நம் ப்ரின்சியிடம் பேசுகிறேன்..”

தோழர்கள் மூவரின் முகமும் மலர்ந்தது..

“தேங்க் யூ சார்.. தேங்க் யூ வெரி மச்..”

தங்கள் ப்ராஜெக்டை வெற்றி கரமாக டிரையல் காட்டிய சந்தோசத்தை மாலை சிறுபார்ட்டியாக இனிப்பு,  ஐஸ்கிரீம், ஜூஸ்  என ஒரு ஹோட்டலில் கொண்டாடி விட்டு நட்புகள் மூவரும்அவரவர் வீடு திரும்பினர்..

ஆராத்யா தன் ஸ்கூட்டியை அதன் இடத்தில் ஸ்டாண்ட் இட்டு விட்டு இறங்கினாள்..

காலையில் வீட்டில் நடந்த சண்டை நினைவிற்கு வந்தது..

கொஞ்சம் தயக்கத்துடன் படியேறி உள்ளே நுழைந்தாள்..

வீடு புத்த விஹாகரம் போல் அமைதியாக அவளை எதிர்கொண்டது..

-(கனா… தொடரும்…) 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...