டி.டி .கோசாம்பி எனும் பன்முக ஆளுமை

 டி.டி .கோசாம்பி எனும் பன்முக ஆளுமை

‘பன்முக ஆளுமை’ என்ற சொல்லுக்கு டி.டி.கோசாம்பியை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். யாருக்கேனும் ஐயம் இருந்தால் மூ.அப்பணசாமி எழுதிய ‘வரலாறு – பண்பாடு – அறிவியல் : டி.டி.கோசாம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்’ என்கிற நூலைக் கட்டாயம் வாசியுங்கள். நீங்களும் வழிமொழிவீர்கள்.

இடதுசாரி பதிப்பகங்கள் மொழியாக்கம் செய்து வெளியிட்ட டி.டி.கோசாம்பியின் நூல்களை முன்பே வாசித்திருக்கிறேன். கடினமான மொழி நடையால் உள்வாங்க சிரமப்பட்டிருக்கிறேன். அவர் குறித்து சில கட்டுரைகளையும் முன்பே வாசித்திருக்கிறேன். ஆயினும் அவரைப் பற்றி ஓர் முழுமையான சித்திரத்தை இந்நூலில் கண்டுணர்ந்தேன். தோழர் அப்பண்ணசாமிக்கு மிக்க நன்றி! பாராட்டுகள்!

இந்நூல் மூன்று பகுதிகளை உடையது என்றே எல்லோரும் சொல்கிறார்கள். நான் மறுக்கிறேன். நான்கு பகுதிகளைக் கொண்டது. முதல் நாற்பது பக்கங்களில்
ஆ. சிவசுப்பிரமணியன், ந. முத்துமோகன், செள. குணசேகரன், க. காமராசன் ஆகியோர் எழுதிய அணிந்துரைகளும், ‘தென் கோடியிலிருந்து கோசாம்பியை நோக்கி..’ என
மூ. அப்பணசாமியின் பொருள் பொதிந்த முன்னுரையும் இடம் பெற்றுள்ளன. இந்த முதல் பகுதியை வாசிப்பது, பின்னால் தொடரும் 19 அத்தியாயங்கள் அடங்கிய மூன்று பகுதிகளை வாசிக்க முன்னோட்டமாக அமையும். ஆகவேதான் நான்கு பகுதிகளைக் கொண்ட நூல் என்றேன்.

முதல் பகுதி ‘வரலாறு எழுதுதலில் கோசாம்பி’ என்பதாகும். இரண்டு அத்தியாயங்களைக் கொண்ட இப்பகுதியில் முதலில் ‘கோசாம்பியின் வாழ்க்கை வரலாறு’ பேசப்படுகிறது. முதலில் தந்தையின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டே மகன் வரலாறு வருகிறது. 1907ஆம் ஆண்டு ஜூலை 31ல் பிறந்து 1966ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் நாள் மறைந்த கோசாம்பியின் வாழ்நாள் என்பது வெறும் 59 ஆண்டுகளே. அதில் மூன்றில் ஒரு பகுதி பள்ளி, கல்லூரிப் படிப்பில் கழிந்தது. சுமார் நாற்பதே ஆண்டுகளில் அவர் பயணப்பட்ட பெருவெளியை, சேகரித்த அறிவுப் புதையலைச் சொல்லும் வாழ்க்கை வரலாறுதான் முதல் பகுதி.

இவர் பெயர் தாமோதர் தர்மானந்தா கோசாம்பி. இவரது தந்தை பெயர் தர்மானந்தா தாமோதர் கோசம்பி. ஆக இருவரையும் டி .டி. கோசம்பி என்றே குறிப்பிடுவர். கோவாவில் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை புத்த மதத்தையும் பாலி மொழியையும் மீட்டுருவாக்கம் செய்வதில் ஈடுபபட்ட பேரறிஞர். ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றியவர். எனவே மகன் தாமோதர் கோசம்பி வெளிநாடுகளில் பயிலும் வாய்ப்பு பெற்றவர். சனாதன மரபுகளை வீட்டிலேயே உடைத்த குடும்பம். மாட்டுக்கறி சாப்பிட்டு மரபை உடைத்த பார்ப்பனக் குடும்பம்.

கோசம்பி படித்தது பொறியியல். ஆர்வத்தோடு ஈடுபட்டது கணிதத்தில். தெற்காசியாவின் மிகச் சிறந்த கணித அறிவியலாளர், புள்ளியியலாளர், மொழி ஆர்வலர், வரலாற்றைப் புதிய கோணத்தில் மக்கள் வாழ்விலிருந்து கட்டி எழுப்ப முயன்றவர், அதற்கெனத் தடம் பதித்தவர், பண்பாட்டில் கூர்மையாகக் கவனம் குவித்தவர், மார்க்சியச் சிந்தனையாளர், உலக அமைதி செயல்பாட்டாளர், அறிவியல் குறித்த சமூகப் பார்வையை வழங்கியவர்… இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

‘இயற்பியல், புள்ளியியல், நாணயவியல், கட்டடக் கலை, தொல்லியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாகப் புள்ளியியல், நாணயவியல் துறைகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பலனாக அந்த இரு துறைகளையும் அறிவியல் துறையாக மேம்படுத்திப் புதிய தடங்களை உருவாக்கினார். இன்றும் அவரது கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அந்த இரு துறைகளும் இயங்குகின்றன’ என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி, ஜெர்மன், இத்தாலி உட்பட பல மொழிகளைக் கற்றவர். சமஸ்கிருதக் கவிஞர் பத்ருஹரியின் ‘சுபஷிதா’ காவியத்தின் செம்பதிப்பை வெளியிட்டார். ‘ஷாதகாத்ரயீ’ சமஸ்கிருத நூலின் சிதைந்த சுவடிகளை இந்தியா முழுவதும் தேடி அலைந்து சேகரித்து விமர்சனக் குறிப்புகளுடன் செம்பதிப்பாக வெளியிட்டார் .

“பத்ருஹரி மக்கள் கவிஞரல்ல; அரசவைக் கவிஞர். அவரது அனுபவங்கள் கபீர், துக்காராம், துளசிதாஸ் போன்று நேர்மையாக இல்லை. பத்ருஹரி மக்கள் மனதில் இடம் பிடிக்கத் தவறிய கவிஞர். இன்றைய நடுத்தர மக்கள் மனதில் காணப்படும் அறிவிஜீவித்தனமே அவர் கவிதைகளில் வெளிப்படுகிறது” என்றார் கோசம்பி.

அவர் தன் மனதுக்குச் சரி எனப் பட்டதை எந்தச் சூழ்நிலையிலும் சொல்லத் தயங்கியவர் அல்ல. அவரது வாழ்க்கையும் படைப்புகளுமே அதன் சாட்சி. எந்த நூலையும் விமர்சனப்பூர்வமாகப் படிக்கும் மார்க்ஸுக்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்திருப்பார்.

“ஜவஹர்லால் நேரு எழுதிய ’டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலுக்கு கோசம்பி எழுதிய விமர்சன மதிப்புரை வெளிவந்திருந்தது. அந்த விமர்சனத்தில் நேரு புத்தகத்தில் இந்திய வரலாறு தொடர்பாகச் சில பிழைகளைக் கடுமையாக கோசாம்பி சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் இந்த விமர்சனம் இருவரின் தனிப்பட்ட நட்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்திய அறிவியல் மாநாட்டின் கணிதவியல் அரங்கின் பொறுப்பு கோசம்பிக்குத் தரப்பட்டதன் மூலம் அறியலாம். மாநாட்டினைச் சுமுகமாக நடத்துவது குறித்த சில ஆலோசனைகளையும் தனிப்பட்ட கடிதம் மூலம் நேருவுக்குத் தெரிவித்திருந்தார். இவற்றில் பல ஆலோசனைகள் ஏற்கப்பட்டன.” என்கிறார் நூலாசிரியர்.

[நேருவின் அந்தக் குறிப்பிட்ட நூலை விமர்சித்த இன்னொரு அறிவியலாளர் மேக்நாட் சாகா என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நேரு இவரோடு நட்பாக இருந்தார், பின்னர் சர் சி.வி. ராமன், ஹோமி பாபா போன்ற அறிவியலாளர்களால் தலித் என்பதால் மேக்நாட் சாகா ஒதுக்கப்பட்டது வரலாறு]

எஸ்.ஏ. டாங்கே [ஸ்ரீபத் அம்ரித் டாங்கே] எனும் கம்யூனிஸ்ட் தலைவர் வேத காலம் குறித்து எழுதியதைக் கடுமையாக எதிர்த்தவர் கோசாம்பி என்பதும் கவனத்துக்குரியது.

இவரது இந்த இயல்பு காரணமாகவே பணி இடத்தில் தொல்லைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தவர். பல இடங்களுக்கு மாறியவர். ஊதியத்தை விட பணியின் தன்மைக்கே முக்கியத்துவம் அளிப்பவர். ஆயினும் தன் ஆர்வமான ஆய்வுகளில் எப்படியும் ஈடுபட்டு விடுவார்.

இந்தப் பகுதியின் இரண்டாவது அத்தியாயமான ‘இந்திய வரலாற்று ஆய்வில் கோசாம்பி’ எனும் கட்டுரை முக்கியமானது. ஏனெனில் அவரது வழியில் பலவற்றை இன்றைய வரலாற்றாசிரியர் கட்டுடைப்பதையும்; அவரோடு முரண்படுவதையும் நூலாசிரியர் இணைத்தே சொல்கிறார்.

“கோசாம்பி மார்க்சியத்தை ஒரு ‘மூடுண்ட அமைப்பாக’ பார்க்கவில்லை. அவரது மார்க்சியம் என்பது மனிதகுல வரலாற்றினைத் திட்டவட்டமான ஆய்வுக்குட்படுத்தும் அறிவியல் முறையாகும். மார்க்சியம் ‘திறந்த நிலையில்’ இருப்பது அவசியமாகிறது என்றார் கோசாம்பி.” இவ்வாறு நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

“இந்தியாவில் பொருளியல் மாற்றங்கள் தேவைப்படும்போதெல்லாம் மதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இறையியல் குறிகளுடன் இணைந்தே உருவாக்கப்படுகின்றன.“ என்கிறார் கோசாம்பி.

ஆரிய மயமாக்கல், வேதக் கதையாடல்களைக் கட்டவிழ்த்தல், கிருஷ்ணன் யார்? பலராமன் யார்? பகவத் கீதையின் காலம் எது? அவைதிக மதங்களின் வீழ்ச்சி, பார்ப்பனிய மறு எழுச்சி, சமஸ்கிருத, பாலி மொழிகளின் ஒப்பீடு போன்றவற்றில் கோசம்பியின் பார்வை என்ன என நாம் அறிய முடிகிறது. அவரின் ஆழமான பார்வை வியப்பேற்படுத்துகிறது.

“சமஸ்கிருதம் [அடித்தட்டு மக்களின்] புலனுணர்வு சார்ந்த அன்றாட வாழ்விலிருந்து தன்னைத்தானே துண்டித்துக் கொண்ட மொழி ஆகியது. மேட்டிமைச் சமூகத்தின் கருவியாகவும் அதிகாரத்தைச் சட்டப்பூர்வமாக்கும் கருவியாகவும் சமஸ்கிருத மொழி மாறியது.” என்கிறார்.

‘ஒருங்கிணைந்த முறைமைகள்’. ‘தொன்மமும் நடப்பும்’ என இரு அத்தியாயங்களைக் கொண்ட ‘பண்பாட்டின் முறைமை’ எனும் இரண்டாம் பகுதி வரலாற்றில் கோசம்பியின் முக்கியப் பங்களிப்பை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. கோசம்பியின் கருத்துகளோடு உடன்படுவோரும் உண்டு; முரண்படுவோரும் உண்டு. ஆயினும் மன்னர்களைச் சுற்றி வந்த வரலாற்றை மக்களைச் சுற்றி வர கால்கோள் இட்டவராகிவிட்டார் கோசாம்பி.

“குறிப்பாக, முகலாயர் வருகைக்கு முன் வரை எந்தவொரு வரலாற்று நபர் குறித்த துல்லியமான கால வரம்பும் நமக்குக் கிடையாது. வரலாறு குறித்த மேலோட்டமான தகவல்கள்கூட பொதுப் புத்தியில் பதியப்படவில்லை.”

இப்போது மோடி ஆட்சியில் சங்கிக் கூட்டம் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ள வேத காலத்தைப் புனிதப்படுத்த இதிகாசக் கற்பனைகளையே ஆதரப்பட்டு நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ் வரலாற்றுப் பிரிவின் பெயரே பாரதிய இதிகாஸ் சங்கலன் சமிதி [Bharatiya Itihas Sankalan Samiti ] என இதிகாச ஒட்டோடுதான் இருக்கும் . அறிவியலையும் வரலாற்றையும் மோடி அரசு இதிகாசக் கற்பனைக் கதை போல் பேசிக் கொண்டிருக்கிறது.

துல்லியமான வரலாற்றுப் பதிவு நம்மிடம் கிடையாது என்கிற கோசம்பி தொடர்கிறார், “இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் தொல் வரலாற்றிலிருந்து நம் காலம் வரை தொடரும் பழங்குடிகளிடம் காணப்படும் மிச்ச சொச்சப் பழக்க வழக்கங்கள், சடங்குகள் மட்டுமே இன்று நம் முன் வாழும் சான்றுகள் ஆகும். இன்றைய கணக்குப்படி [1967] இந்திய மக்கள் தொகையில் 6 விழுக்காடாக உள்ள சுமார் மூன்று கோடி பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மட்டுமே தொல் வரலாற்றுக் கால வாழ்வைத் தம் பண்பாட்டுக்குள் புதை படிவங்களாகத் [ Fossil ] தக்க வைத்துள்ளனர் என்கிறார் .

பசுவை பார்ப்பனர் கொண்டாடுவதைக் குறிப்பிட்டு கங்கைச் சமவெளிச் சேற்றில் நீர் எருமையே நன்கு வளர்ந்திருக்க முடியும் என்கிறார். தேங்காய் பண்டைய ஆவணம் எதிலும் இல்லை, நான்காம் நூற்றாண்டு வாக்கில் மலேசியா போன்ற தென் கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததாகவும் கூறுகிறார் .

ஆரியம் எப்படி எல்லாம் தொல்குடி பண்பாட்டை விழுங்கி ஏப்பம் விட்டது என்பதைப் பல உதாரணங்கள் மூலம் எடுத்துரைக்கிறார். பல தொல்குடி நாயகன் /தெய்வங்கள் எப்படி ஆரிய கற்பனைக் கதையில் பிசையப்பட்டது எனச் சுட்டுகிறார் .

“சிவ – பார்வதி திருமணம் மூலம் பார்வதியை சிவன் மனைவியாக்கி அர்த்த நாரீஸ்வரர் மூலம் பாதி உடல்கள் இணைக்கப்பட்டதைப் போல ல், மஹிஷாசுர – மர்த்தினி போல, நாகர் பண்பாடு அகற்றப்பட்டு நாகத்தை சிவன் கழுத்தில் சுற்றி விட்டதைப் போல, முன்னர் கூறிய வேறு உதாரணங்களையும் நினைவில் கொள்ளவும் [ அந்த அத்தியாயத்தை வாசித்தால் அறியலாம்] புனைவிலக்கியத் திறன்கள் கொண்டு இணைக்கப்பட்டு, முரண்பாடுகளை பக்தி என்ற சிமெண்ட் கொண்டு பூசப்பட்டுள்ளது” என்கிறார் கோசம்பி .

தமிழ்நாட்டில் முருக வழிபாட்டை சுப்பிரமணியனோடு முடிச்சுப்போட்டு வள்ளிக்கு சக்களத்தியாக தேவயானையைக் கொண்டு வந்து சேர்த்து, பின் வள்ளியையே சக்களத்தி ஆக்கிவிட்டதைப் போல, ஆடு, கோழி பலியிட்ட கிராமக் கோயிகளில் பிள்ளையாரையோ அனுமாரையோ பிரதிஷ்டை செய்து விட்டு அங்கு மொத்தமாகப் பொங்கல், சுண்டல் என மாற்றியதைப் போல காலங்காலமாக ஆரியர் செய்த திருகுதாளங்களை கோசம்பி பேசுகிறார்.

பகவத் கீதையின் மைய நோக்கத்தை நச்செனச் சொல்கிறார் கோசம்பி ”வன்முறையைப் பயன்படுத்தாமல் பார்ப்பனியத்தை ஏற்கச் செய்வது; ஆளும் வர்க்க ஒரு பிரிவினரால் ஏற்க இயலாத சமூகச் செயல்பாடுகளுக்கு அற போதனை வழியாக செல்வாக்கினைத் திரட்டுவது.”

அத்தியாயத்தின் இறுதியில் ஆரியர், ஆரியல்லாதார் பற்றி பேசுகிறார் .

இந்த இடத்தில் மூ. அப்பணசாமியின் முன்னுரையில் இருந்து ஒரு நெடிய மேற்கோள் தவிர்க்க முடியாதது ல்.

“….. ஆமாம். அவர் தக்காணத்தைச் சேர்ந்தவராக இருந்ததால்தான் சிந்துவெளிக்கும் தென்னிந்தியாவுக்கும் இடைப்பட்ட தொல்லியல் இடங்களில் ஆராய்ச்சி செய்ய நேர்ந்தது. அங்கிருந்துதான் அவர் பார்ப்பனியப் பண்பாட்டு ஆக்கிரமிப்பின் எச்சங்களைக் கண்டுபிடித்தார். பார்ப்பனியப் பண்பாட்டுக்கு முந்தைய தொல் திராவிடப் பண்பாட்டு மரபை மீளுருவாக்கம் செய்யவும் ஆரம்பித்தார். ”

“அதே சமயத்தில், தென் இந்தியாவின் திராவிட மரபின் தொன்மை குறித்து ஒன்றிரண்டு இடங்களில் ஆயினும், அழுத்தமாக வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழி வழி வாழ்வியல், சென்னை வட்டாரக் கற்கருவிகள், ஆதிச்ச நல்லூர், சங்க இலக்கியங்கள் குறித்தும் கோசம்பி அதிகம் கவனம் செலுத்தவில்லை .”

“ இதற்கும் அவர் பெரும்பாலும் தக்காணத்தை மையமாகக் கொண்ட கள ஆய்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது காரணமாக இருக்கலாம். மேலும் விடுதலைக்குப் பின்னர் தென்னிந்தியாவில் தொல்லியல் ஆய்வு ஏறத்தாழக் கைவிடப்பட்டிருந்ததும், புதிய வெளிச்சங்களைப் பாய்ச்ச முடியாமல் போனதற்குக் காரணம் ஆகலாம். தனது அறிவுப் பயணம் குறித்த கட்டுரையில் , ‘ ஒவ்வொரு வட்டாரத்திலும் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆய்வுகளே, துணைக் கண்ட வரலாற்றைத் தலைகீழாகப் புரட்ட உதவும் .’ என்கிறார் கோசம்பி. தமிழ்நாட்டில் அண்மையில் நடந்துள்ள தொல்லியல் ஆய்வுகள், குறிப்பாக கீழடிக்குப் பிறகான இன்றையச் சூழலில் கோசம்பியின் வரலாற்று அணுகுமுறை நமது தொன்மையின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுவதை வாசகர்கள் உணர்வார்கள்.” இப்படி மூ. அப்பணசாமி சொல்லியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியச் செய்தியே !

பதினைந்து அத்தியாயங்களைக் கொண்ட ‘வரலாறும் அறிவியலும்’ எனும் மூன்றாம் பகுதி வெவ்வேறு சந்தர்ப்பத்தில் கோசம்பியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் மொழியாக்கத் தொகுப்பு ஆகும். ஒவ்வொன்றும் நாம் அறிய வேண்டிய ஏராளமான தகவல்களை, செய்திகளை, கேள்விகளைத் தாங்கி நிற்கிறது. உலக அமைதிக்கும் மானுட முன்னேற்றத்திற்கும் அழைப்பு விடுக்கிறது .

அறிவியலில் இந்தியா பின் தங்குவது ஏன் ? அறிவியலின் சமூகச் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் ? இந்த மண்ணுக்கு எத்தகைய அறிவியல் பார்வை வேண்டும் ? அணு ஆற்றலை ஏன் எதிர்க்க வேண்டும் ? சூரிய ஆற்றலே இந்தியாவுக்கு ஏற்ற மாற்று. ஏன் ? உலக சமாதானத்தின் தேவை ஏன் ? சோவித் யூனியனின் பங்களிப்பு என்ன ? இப்படி நாம் அறிய வேண்டிய சிந்திக்க வேண்டிய விவாதிக்க வேண்டிய செய்திகளை இந்த அத்தியாயங்கள் நெடுகப் பேசுகிறார். இங்கு அறிவுஜீவி வர்க்கத்தின், நடுத்தர வர்க்கத்தின் இரட்டை நிலை குறித்தும் வேதனைப் படுகிறார் .மார்க்சிஸ்ட் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கிறார் .

“நம்மிடம் நமக்கான சிறப்பு மிக்க அறிவியல் ஒன்றும் கிடையாது. அரபு அறிவியல், இந்திய அல்ஜீப்ரா அவ்வளவுதான். இவை இரண்டும் ஒரு காலத்தில் தலைசிறந்த அறிவியல் ஒழுங்குகளாக விளங்கின; ஆனால் இன்று காலாவதி ஆகிவிட்டன. ஆப்பிரிக்க வேதியியல், தெற்காசியப் பொறியியல் குறித்துகூடப் பேச ஒன்றுமில்லை. அறிவியல், அறிவியல் தொழில்நுட்பம் தேச எல்லைகளை அறியாது. எனவே அது எங்கு தொழிற்படப் போகிறதோ அதன் பின்புலம் நமக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகிறது.” என்கிறார். கூர்மையான பார்வை இது .

அவரது கூரிய விமர்சனத்துக்கு இன்னொரு சாட்சி. 1966 ஆம் ஆண்டு ‘செமினார்’ இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரையிலிருந்து…..

“இங்கே நவீன ஆசிரியரும் தவறான கொள்கையில் விழுந்தவராக உள்ளார். அந்நிய ஆட்சியின்போது திணிக்கப்பட்டு எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் கல்வி அமைப்பின் அதிகார வர்க்க இயந்திரத்தின் நடுவே பணியாற்றுகிறார். அந்நிய ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் வழங்கிய கல்வியைக் கற்று ஆசிரியராகி உள்ள ஒருவரது தாத்தா, தனக்குப் பிடித்த புரியாத சமஸ்கிருத சுலோகங்களை மனப்பாடம் செய்து அர்ச்சித்துக் கொண்டிருப்பார். பேரன் ஆசிரியர் வகுப்பறையில் விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கற்றுக் கொடுப்பார்; வகுப்பறைக்கு வெளியே யோகா கற்றுக்கொண்டால் அப்படியே வானத்தில் பறக்கலாம்; உள்ளொளி மூலம் அணுப் பொருட்களையும் கிருமிகளையும் காண முடியும் என்று பிரசங்கம் செய்வார். தாம் நம்பும் மூட நம்பிக்கைகள் மீது தாம் கற்ற அறிவியல் கல்வியைச் செலுத்தி ஆய்வு செய்ய மாட்டார். உச்சிக் குடுமியும் பட்டை அல்லது நாமத்துடன் பள்ளிக்கு வருவார். இந்த மூடநம்பிக்கைகள் ஏன் உருவாயின? இந்தியப் பஞ்சாங்கம் இதுவரை ஏதாவது பயனுள்ளதாகச் சாதித்துள்ளதா ? இல்லையானால் அதை ஏன் கட்டியழ வேண்டும் ?”

1966ல் கோசம்பி கேட்டார். மிகச் சரி ! மோடியின் புதிய கல்விக் கொள்கை அந்த மூடநம்பிக்கைகளையே கல்வி என அதிகாரப்பூர்வமாகப் போதிக்க முனைகிறதே? இச்சூழலில் இவரது ஒவ்வொரு கட்டுரையும் ஆழ்ந்து வாசிக்கத் தக்கன. செய்வீர் !

கோசம்பியின் எச்சரிக்கை ஒன்றையும் இங்கு பொருத்தமாக நினைவூட்டுவோம்;

“கம்பி வலைச் சிறைக்குள் அறிவியல் மலராது. அறிவியல் என்பது தேவையை அதிகரிப்பதாகும். அறிவியல் என்பது பரிசோதனை, பகுப்பாய்வு மற்றும் தேவை அறிதல் ஆகும். அறிவியலும் சுதந்திரமும் முன்னோக்கி மட்டுமே பயணிக்கும். சுதந்திரத்தை அழிக்கும் போர்வெறி அறிவியலையும் அழிக்கும் .”

“இந்நூலின் தாக்கத்தால் கோசம்பியின் வரலாற்று நூல்களின் வாசிப்புத் தளம் விரிவடைவதுடன் அவரது வரலாற்று முறையியலை அடியொற்றித் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு எழுதப்படும் என்று நம்புகிறேன்.“ இவ்வாறு முன்னுரையில் ஆ. சிவசுப்பிர மணியன் தெரிவித்துள்ள நம்பிக்கையை நானும் வழிமொழிகிறேன்.

இறுதியாக ஒரு சொல் : மூன்று அத்தியாயங்களையும் தனித்தனி நூலாகக் கொணர்ந்தால் இன்னும் பரவலாகச் செல்லுமோ? அப்பணசாமி யோசிப்பாராக! வாழ்த்துகள்!

நூல் : வரலாறு – பண்பாடு – அறிவியல் -டி.டி.கோசாம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்

ஆசிரியர் : மூ.அப்பணசாமி,

வெளியீடு : ஆறாம் திணை, தொடர்புக்கு : 98400 27712 / 88389 69099

மின்னஞ்சல்: [email protected]

பக்கங்கள் : 344, விலை : ரூ.400/

– சு.பொ.அகத்தியலிங்கம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...