என்றும் வாழும் ஷண்முகப்பிரியன் || காலச்சக்கரம் சுழல்கிறது-18

 என்றும் வாழும் ஷண்முகப்பிரியன் || காலச்சக்கரம் சுழல்கிறது-18

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் தமிழ் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

“ஈரோடு பள்ளிப்பாளையத்திலிருக்கும் ‘சேஷாயி பேப்பர் போர்டு’ நிறுவனம் மிகவும் பாப்புலர். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஈரோடு ஷண்முகப்பிரியன் ஒரு நல்ல நாடக ஆசிரியர்.

பணியில் இருக்கும்போது தன்னுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பலரையும் இணைத்துக்கொண்டு அவர்களை எல்லாம் நடிக்க வைத்து பல நாடகங்கள் போட்டிருக்கிறார். எல்லாமே வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் ஷண்முகப்பிரியனின் எழுத்தாற்றலும், டைரக் ஷனுமே காரணம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட நடிகை சந்திரகாந்தா குழுவின் சார்பாக இரண்டு நாடகங்களை அங்கு நடத்த நாங்கள் சென்றிருந்தபோது சேஷாயி பேப்பர் போர்டு நிறுவன உறுப்பினர்கள் அனைவருமே தங்கள் குடும்பத்தாரோடு நாங்கள் நடத்திய ‘டெல்லிக்குப் போறோம் வாறியளா?’ எனும் தலைப்பில் ஏ.வீரப்பன் எழுதிய நாடகத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.

“இரண்டு மணி நேரமும் சிரித்துக்கொண்டே இருக்கும்படியான ஒரு நாடகத்தை உங்களால் எப்படி எழுத முடிந்தது?” என்று வீரப்பனிடம் ஒரு கேள்வியைக் கேட்டபோது “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி,  சாதுமிரண்டால் போன்ற நகைச்சுவை படங்களுக்கு எப்படி எழுதினேனோ அதே மாதிரிதான் இதையும் எழுதினேன்.”

எந்த ஒரு நாடகமோ, சினிமாவோ வெற்றி பெறுவது என்பது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. நல்ல கதை அம்சத்தோடு காமெடியையும் தரமாக எழுதினால் அது நிச்சயம் வெற்றி பெறும். அக்காலத்தில் வெளியான பல படங்கள் கலைவாணர் என்.எஸ்.கே. எழுதிய நகைச்சுவையால் தானே நன்றாக ஓடியது.

அதனால்தான் என்.எஸ்.கே. அவர்களை *FILM REPAIRER* என்று சொன்னார்கள். அப்போது சபாவின் செயலாளர் ஈரோடு ஷண்முகப்பிரியனை வீரப்பனுக்கும், சந்திரகாந்தாவிற்கும் அறிமுகம் செய்தபோது இவர் பெயர் ஈரோடு ஷண்முகப்ரியன் நல்ல நாடக ஆசிரியர் என்று சொன்னவுடனே சந்திரகாந்தா “எங்கள் சிவகாமி கலை மன்றத்திற்கு ஒரு நல்ல நாடகம் எழுதிக் கொடுங்களேன்” என்றார்.

அப்போது ஷண்முகப்பிரியன் “லேடி சென்டிமென்ட் கதை ஒன்று நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கிறது. அதை எழுதுகிறேன். நீங்கள்  நடிப்பதற்குச் சம்மதம் என்றால் ஒரு மாதத்தில் கிரிப்டை தருகிறேன்” என்று சொன்னதும்,  சந்திரகாந்தா சம்மதம் தெரிவித்ததும் ஒரு மாதத்திற்குள் ஷண்முகப்பிரியன் எழுதிய நாடகம்தான் ‘பயணங்கள் நிற்பதில்லை’. சொல்லத்தான் நினைக்கிறேன், டெல்லிக்குப் போறோம் வாறியளா,  சிகப்பு விளக்கு, கீதா ஆகிய நாடகங்களைத் தொடர்ந்து கலைமாமணி விருது பெற்ற நடிகரும் சாந்தி நிகேதன் எனும் நாடகக் குழுவின் உரிமையாளரும், இயக்குநருமான டி.எஸ்.சேஷாத்திரி அவர்கள் இயக்கத்தில் ‘பயணங்கள் நிற்பதில்லை’ எனும் ஷண்முகப்ரியனின் நாடகமும் அரங்கேறியது.

பக்கா சீரியஸ் நாடகம் என்பதால் வீரப்பனும் நானும் சேர்ந்து நகைச்சுவையை இடை இடையே புகுத்தினோம். அது நாடகத்திற்கு மிகவும் பேலன்ஸ் ஆக இருந்தது. பத்திரிகைகள் எல்லாம் பாராட்டி எழுதியது.

50 நாடகம் ஆவதற்குள் அதைப் படமாகத் தயாரிக்கும் ஏற்பாடு நடந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுதும் அவரும் நாடகம் பார்த்து பிரமாதம் என்றார். நகைச்சுவை பாத்திரம் ஏற்ற ஏ.வீரப்பனும், சேவா ஸ்டேட் துரையும் மிகவும் நன்றாக நடித்தது நாடகத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.

எம்.எஸ்.வி. அவர்களைப் பாராட்டும் விதத்தில் வீரப்பனும், துரையும் சேர்ந்து ஒரு நகைச்சுவையைத் தயாரித்து நடித்துக் காட்டினார்கள்..

துரை  :-  பாரதியார் பாட்டுக்கு புதுசா ஒரு டியூன் போட்டு இருக்கேன், இதுவரைக்கும் இந்த ட்யூனை ஒரு இசையமைப்பாளரும் டச் பண்ணினது இல்ல…

வீரப்பன்  :- எங்கே பாடு பார்க்கலாம்…!

(கைகொடுத்த தெய்வம் படத்தில் வரும்   இந்தப் பாடலை அப்போது துரை பாடுகிறார்.)

துரை  :-  சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேரநன்னாநாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து….

(என்று துரை பாடியதும் வீரப்பன் துரையின் சட்டையைப் பிடித்து) 

வீரப்பன் :-  இது நீ போட்ட  ட்யூணா.. கொன்னுடுவேன் ராஸ்கல்..

 இந்தப் பாட்டுக்கு இசையமைச்ச ‘எம்.எஸ்.வி.யே’ நாடகம் பார்க்க வந்திருக்காரு. அவர் போட்ட டியூனை நீ போட்ட ட்யூன்னு சொல்றதுக்கு உனக்கு என்ன திமிர் இருக்கும்.

எம்.எஸ்.வி. ஒரு மெர்க்குரிடா நீ ஒரு தற்குறி..

சந்திரகாந்தாவின் சகோதரனாக  நடித்த ஷண்முகசுந்தரம் தன் உணர்ச்சிமிக்க நடிப்பால் தான் ஒரு பண்பட்ட நடிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்தார். தேவராஜ் மோகன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படம்தான் ‘உறவாகும் நெஞ்சங்கள்’. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ எனும் படத்தையும் எழுதி இயக்கியவர் ஈரோடு ஷண்முகபிரியன்தான் என்பதை இதில் பதிவு செய்கிறேன்.

நான் என்றென்றும் போற்றிப் புகழ்வது ஈரோடு ஷண்முகபிரியனைத்தான்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...