பாமா கோபாலன் என்ற இனியவருக்கு நினைவேந்தல்

 பாமா கோபாலன் என்ற இனியவருக்கு நினைவேந்தல்

பாமா கோபாலன் என்ற இனியவர்!

அவரை இரண்டு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். போனில் இரண்டு மூன்று தடவை பேசியிருக்கிறேன். முகத்தில் எப்போதும் புன்னகை. தீர்க்கமான நாசியின் தொடர்ச்சியாக நெற்றியில் எப்போதும் ‘பளிச்’ சென்ற திருமண். வாய் திறந்தால் ஒன்று பாராட்டு மழை அல்லது சிதறும் நகைச்சுவை! அவர்தான் திரு பாமா கோபாலன் எழுத்தாளர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், பேட்டியாளர் எனப் பன்முகம் கொண்ட மனிதர். எழுத்தாளர் வேதா கோபாலன் அவர்களின் கணவர்.

டிசம்பர் 2, 2022 அமெரிக்காவில் தன் மகன் வீட்டில் காலை பூஜை முடித்துப் பெருமாளை சேவித்தவர், அப்படியே அவரது திருவடிகளில் கரைந்துவிட்டார். இன்று அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கோட்டுர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், ‘பாமா கோபாலனின் சிந்தனைச் சிதறல்கள்’ புத்தக வெளியீட்டுடன் நெகிழ்ச்சியாக நடந்தது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை வடிவமைத்திருந்ததுடன், நேர்த்தியாக ஒருங்கிணைத்து நடத்தினார்.

‘ஒலி’ அஞ்சலி என வேதா கோபாலன் விளக்கேற்ற, பேச வந்த வி ஐ பிக்கள் பாமா கோபாலன் படத்திற்கு ‘மலர்’ அஞ்சலி செலுத்தினர். இரண்டு நிமிட ‘மெளன’ அஞ்சலியைத் தொடர்ந்து, பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கே.ஜி.ஜவகர் அவர்கள் பாமா கோபாலனுக்குப் பிடித்த நான்கு பாடல்களை வாசித்து (இரண்டு எம் ஜி ஆர் பாடல்கள், ஒரு முருகன் பாடல், உடன் பா.கோ விற்கு மிகவும் பிடித்த சிப்பி யிருக்குது, முத்துமிருக்குது பாடல்) ‘இசை’ அஞ்சலி செலுத்தினார்.

பா.கோ. அவர்கள் பிரபலங்களுடன் உள்ள புகைப் படங்கள் திரையிடப்பட்டன. நேரம் கருதி மிக, மிகக் குறைவான படங்களே காட்டப்பட்டன. திருப்பூர் கிருஷ்ணன் தன் உரையில் சொன்னதைப்போல, எல்லா துறை வல்லுனர்களிடமும் பா.கோ. பேட்டி எடுப்பதைக் காணமுடிந்தது.

முதலில் பேசிய ஓவியர் மணியம் செல்வன், பா.கோ. வின் எடிடோரியல் துறை சேவைகளை வியந்தார். கோபமே படாமல் வீட்டிற்கு வந்து, பொறுமையாகக் காத்திருந்து தன் ஓவியங்களை வாங்கிச்செல்லும் பா.கோ. வின் அன்பினை சிலாகித்தார்.

புகைப்படக் கலைஞரும், எழுத்தாளருமான யோகா பேசும்போது, வேதா கோபாலன் திடமனத்துடன் அவரது இழப்பை எதிர்கொண்டதைக் குறிப்பிட்டு, பா.கோ. உடனிருந்து கொடுத்திருந்த மனோதைரியமும், தீர்க்கமான சிந்தனைகளும்தான் காரணம் என்றார். யோகா பேசும்போது, ‘க்ளிக்’ ரவி, போட்டோ எடுத்தார்!

எழுத்தாளர் தேவி பாலா, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு உயர்வின்போதும், பா.கோ. உடன் இருந்ததைக் கூறி நெகிழ்ந்தார். தான் வாங்கிய முதல் காரில், முதலில் உடன் பயணித்தது பா.கோ. என்று மகிழ்ந்தார். பத்திரிகையாளர் மோகன்தாஸ் பேசும்போது, அவரது கண் சிகிச்சை பற்றிய பேட்டியை பா.கோ. எடுத்ததையும், பின்னர் தன் அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க அதை வெளியிட வேண்டாம் என்று தான் தடுத்து விட்டதையும் குறிப்பிட்டார். பா.கோ. அதனை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டதை எண்ணி வியந்தார். எழுத்தாளர் ராணி மைந்தன் வேதா கோபாலன் தன் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார். குங்குமம் ஆசிரியர் கே என் சிவராமன் பேசும்போது, பா.கோ. தந்தையைப் போல அன்பு கொண்டிருந்தார் என்றார். குமுதம் வெள்ளிக்கிழமை ஆன்மீகக் கூட்டங்களில், அனுமதிக்கப்பட்ட ஒரே பெண்மணி வேதா கோபாலன் என்றார். ஓவியர் ஷ்யாம் ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்ற தத்துவத்தைத் தனக்குக் கூறியவர் பா.கோ. என்றார். வழக்கறிஞர் சுமதி, பா.கோ. எப்படி இயல்பாகவே அவரவர் இடத்தைக் கொடுக்கும் பண்புள்ளவர் என்பதையும், வேதா கோபாலனுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காதல், குடும்பம் என வாழ்ந்தது, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம் என்றார். சுரேஷ் பாலா இருவரும் கொடுத்த ஏழு நிமிடங்களை இரண்டு மூன்றரை நிமிடங்களாகப் பிரித்துப் பேசினர்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார், இந்திரா செளந்தரராஜன், கார்த்திகா ராஜ்குமார், திருமதி சுமிதா ரமேஷ், பா.கோ. வின் மகன், மருமகள், பேரன்கள் ஆகியோர் காணொளி மூலம் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். மிக அழகாக இந்த வீடியோ கிளிப்பிங்குகளை, இடையிடையே ஒளிபரப்பிய பட்டுக்கோட்டை பிரபாகர் பாராட்டுக்குரியவர்.

‘பாமா கோபாலனின் சிந்தனைச் சிதறல்கள்’ (தொகுப்பு: வேதா கோபாலன்) புத்தகத்தை ஓவியர் ஷ்யாம் வெளியிட, மணியம் செல்வன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மேடையில் பேசிய அனைவருக்கும் ஒவ்வொரு பிரதி வழங்கப்பட்டது. அருமையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம், அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. மேலும் ஆன் லைனில் இலவசமாகப் படிக்க புஸ்தகா.காம் இணையதளத்தில் கிடைக்கிறது (நன்றி புஸ்தகா ராஜேஷ் அவர்களுக்கு!).

பின்னர் பேச வந்த எழுத்தாளர், முனைவர் லேனா தமிழ்வாணன், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களைப் பாராட்டினார். பா.கோ. வுக்கும் தனக்குமான நட்பையும், அன்பையும் கூறி நெகிழ்ந்தார். வேதா கோபாலன், பாமா கோபாலனுடன் ஆன தன் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை, நினைவுகளைப் புத்தகமாகக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

திரு திருப்பூர் கிருஷ்ணன் பட்டுக்கத்தரித்தாற்போன்ற சிறப்பான உரையாற்றினார். பா.கோ. வும் வேதா கோபாலனும், தன் மகன் மறைந்த போது, தன் வீட்டிற்கே வந்து ஆறுதல் கூறியதை மறக்க முடியாது என்றார். புதுச்சேரி அன்னை பற்றிய ஒரு தகவலைக் கூறி, அதுபோல பா.கோ. விட்டுச்சென்ற இலக்கிய, பத்திரிகைப் பணியினை, வேதா அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

பட்டுக்கோட்டை பிரபாகர், தனது பரிசுச் சிறுகதையைப் பாராட்டி, பா.கோ. எழுதிய தபால் கார்டை நினைவுகூர்ந்தார். அவர்கள் நட்பு எப்படி கடிதங்கள் மூலமாக வளர்ந்தது என்று சொன்னார். மனதில் ஒரு துளி பொறாமையோ, வஞ்சமோ இல்லாத அற்புதமான மனசு, பேச்சுக்கு நடுவில் எல்லாம் ஆசீர்வதிக்கும் வார்த்தைகள் அன்பு மழையாகக் கொட்டும் என்றார். இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு உதவியவர்கள், உடனே ஒப்புக்கொண்டு பேச வந்தவர்கள் என எல்லோரையும் கவுரவித்துப் பாராட்டினார்.

“இது ஏற்புரையல்ல, நன்றியுரை” என்று தொடங்கிய வேதா கோபாலன், மிகவும் நெகிழ்ந்திருந்தார். பேசியவர்கள், அரங்கில் இருந்தவர்கள் என எல்லோர் பெயரையும் கூறி நன்றி சொன்னார். வாழ்க்கையை நகைச்சுவையுடன் வாழ்க் கற்றுக்கொடுத்தவர் பா.கோ. என்றார். கனத்திருந்த இதயங்களை இலேசாக்க, பா.கோ. சொல்லும் சில ‘ஜோக்கு’களைச் சொல்லி அரங்கைக் கலகலப்பாக்கினார்.

விடைபெற்றுக்கொள்ளும் போது, மிகவும் நெகிழ்ந்து மகிழ்ந்தார் வேதா கோபாலன். இரண்டு முறை என் வீட்டிற்கு வர நினைத்து, வர முடியாமல் போனதிற்கு நான் வருந்தினேன். உண்மையான வருத்தம் அது. போனில் பேசும்போதே, அன்பும் வாத்ஸல்யமும் பெருகப் பேசுவார் பாமா கோபாலன். ஆரம்ப எழுத்தாளனான என்னையும் ஊக்குவித்துப் பாராட்டி மகிழ்வார். என் புத்தகங்களை வாசித்துப் பாராட்டி, வாழ்த்தியிருக்கிறார். எல்லோரும் சொன்னதைப் போல, பாமா கோபாலன் என்றால்.. “அன்பு”.

“எதிர்பார்ப்புகள் அற்ற மனிதர். சமயோசித நகைச்சுவை என்பார்களே, அதில் விற்பன்னர். ‘எனக்கு இது வேண்டும், இது பிடிக்காது’ என்று எதுவுமே சொன்னதில்லை. எது கிடைத்தாலும் அபரிமிதமாய்ப் பாராட்டி மகிழ்வார்” – வேதா கோபாலன்.

இதனை நினைவேந்தலில் பேசிய அனைவரும் கூறினர். உண்மைதானே!

ஜெ.பாஸ்கரன்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...