தமிழக இளம் பெண் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வு

 தமிழக இளம் பெண் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வு

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி ஆர்த்தி இங்கிலாந்தின் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி பலரையும் மகிழ்ச்சியில் ஆர்த்தியிருக்கிறது.

இங்கிலாந்து Chelmsford மற்றும் Maldon Council சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ஆர்த்தி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட குக்கிராமமான சித்தாலிக்குப்பம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

அண்ணல் காந்தியடிகளின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் வாயால் ‘தென்னாட்டு ஜான்சிராணி’ என்று போற்றப்பட்டவர் சுதந்திரப் போராட்டத் தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள். இவரின் பேரப்பிள்ளைகள் கோ.சூரியமூர்த்தி-தாரா ஆகியோரின் மகன் விஜயமுருகன்- உமாமகேஸ்வரியின் ஒரே மகள் செல்வி ஆர்த்தி. இவர் லண்டனில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வருகிறார். அவரது தனித்திறனாலும் சிறப்பான சேவைப் பணிகளாலும் செம்ஸ்போர்டு-மால்டன் ஆகிய இரண்டு கவுன்சில்களிலும் அதிகமான வாக்குகள் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கடலூர் அஞ்சலை அம்மாள் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (1937, 1946). சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வை சிறையிலேயே கழித்தவர். இவர் சிறையில் இருந்தபோது கர்ப்பமாக இருந்தார். இதனால் பரோலில் வெளிவந்து குழந்தையைப் பெற்று சிறையிலேயே வளர்த்தார். அந்த மகனின் பெயர்தான் ஜெயில் வீரன். இவரது குடும்பத்தில் கணவர் முருகப்பா, மகள் அம்மாபொண்ணு, மருமகன் ஜமதக்னி அனைவரும் சுதந்திரப் போரில் பங்களித்து சிறை சென்றவர்கள். அந்தக் குடும்பத்தில் இருந்து தற்போது, இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் இளைஞர் குழுவின் சார்பாக செம்ஸ்போர்டு- மால்டன் நகரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 17 வயது செல்வி ஆர்த்தி என்பது பெருமைப்படத்தக்க விஷயம்.

UK Youth Parliament Member (இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆன ஆர்த்தி, நாடாளுமன்ற விவாதங்களில் நேரிலும் ஆன்லைனிலும் பங்கேற்பார்.  அங்கு இளம் வயதினரின் குரலாகச் செயல்படுவார்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் எம்.பி.க்களையும் சந்தித்து இளம் வயதினர் சம்பந்தப்பட்ட அரசாங்கக் கொள்கைகளை வடிவமைப்பதில் பங்களித்து கருத்துக் கூறவேண்டியது இவரது கடமை.

இளைஞர்களின் வாழ்க்கையை பாதிக்கும் அரசாங்கக் கொள்கையில் இளைஞர்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழிகாட்டுவார்.

செல்வி ஆர்த்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையான விஷயம். இவருக்கு தமிழகம் மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றன.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...