முதியவர்களைக் கொல்லும் முறையைத் தடுக்கிறது ‘தலைக்கூத்தல்’ திரைப்படம்

 முதியவர்களைக் கொல்லும் முறையைத் தடுக்கிறது ‘தலைக்கூத்தல்’ திரைப்படம்

சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தலைக்கூத்தல்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

‘தமிழ்ப் படம்’ தொடங்கி, ‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வித்தியாசமான முயற்சிகள் கொண்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த எஸ். சஷிகாந்த் தலைமையிலான YNOT ஸ்டுடியோஸ், சிறந்த அறிமுக இயக்குநருக்காகத் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும் இந்திரா காந்தி விருது மற்றும் சிறந்த வசனத்திற்காக தேசிய விருது ஆகியவற்றை வென்ற ‘மண்டேலா’ திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் தேசிய கவனம் பெற்றது. ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘தலைக்கூத்தல்’ என்கிற புதிய படத்தை YNOT ஸ்டுடியோஸ் தற்போது தயாரித்துள்ளது.

தொடர்ந்து 14 வருடங்களாகக் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திறமையான இயக்குநர்களின் உருவாக்கத்தில் பல படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் அடுத்த நேர்மையான படைப்பாகத் ‘தலைக்கூத்தல்’ வெளியாகவுள்ளது.

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய ஜெயப்பிரகாஷ், அறிமுக இயக்குநர்களுக்கு வழங்கப்படும் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது பெற்ற ‘லென்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

எந்த இயக்குநரிடமும் உதவியாளராக இவர் பணியாற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

‘லென்ஸ்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘தி மஸ்கிடோ பிலாஸபி’ என்ற படத்தை இவர் இயக்கினார். பல்வேறு திரைப்பட விழாக்களில் இது திரையிடப் பெற்றது. அதற்குப் பிறகு தேசிய அளவிலான தொடர் திரைப்படம் (ஆந்தாலஜி) ஒன்றில் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். இது விரைவில் வெளியாகவுள்ளது.

இயக்குநருடன் சமுத்திரக்கனி

‘தலைக்கூத்தல்’ பற்றி ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “2018-ஆம் ஆண்டு இந்தப் படத்திற்கான யோசனை தோன்றியது. வயது முதிர்ந்தவர்களைச் சொந்த குடும்பத்தினரே கொல்லும் இது போன்ற ஒரு பழக்கம் தென் தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளில் நடைபெறுவது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதைப் பற்றிப் பல்வேறு தளங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டேன். இது சரியா, தவறா என்று விவாதிப்பதைவிட. எந்தச் சூழலில் குடும்பத்தினர் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதை யோசித்தபோது நிறைய கேள்விகள் தோன்றின. இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுவதே இந்தப் படத்தின் நோக்கம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நடுத்தர குடும்பம் ஒன்று இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்கிறது. அப்போது அந்தக் குடும்பத்தினர் என்ன முடிவு எடுக்கிறார்கள், எவ்வாறு அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படம் விவரிக்கும்,” என்றார்.

இந்தக் கதையைத் தயாரிக்க முன்வந்த YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் மற்றும் இதில் நடிக்க ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனிக்கு எனது நன்றி என்றார்.

வையாபுரி, கதிர், முருகதாஸ், வசுந்தரா, கதாநந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தலைக்கூத்தல் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

தமிழ்ப் படம் – 1 மற்றும் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த கண்ணன் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். யுகபாரதி இரண்டு பாடல்களுக்கு உணர்வுபூர்வமான வரிகள் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை மார்ட்டின் டான்ராஜும், படத்தொகுப்பை டேனி சார்லசும் மேற்கொண்டனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...