தாராளமாகத் தாய்ப்பால் வழங்கிய தாய்
கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்துள்ளார் கோயம்புத்தூர் மாவட்டம், பி.என்.புதூரைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யா 27.
தனது 2வது குழந்தை பிறந்து 5 நாட்களே ஆன நாள் முதல் தாய் பால் வழங்குவதை தொண்டாகச் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா.
ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவரது சாதனைக்குத் தன் கணவரும் குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளதாகவும் ஸ்ரீவித்யா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் – ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவித்யா தனக்கு முதல் குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, இது குறித்து தனது கணவர் பைரவிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஆர்வம் காட்டியதால், தாய்பால் தானம் குறித்து அறிய இணையதளத்தில் தேடி உள்ளனர்.
பின்னர் மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தனது இரண்டாவது பெண் குழந்தை பிறந்த ஐந்தாவது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவர் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசியா புக் ஆப் சாதனையும் படைத்துள்ளார்.
இப்படி ஊட்டச்சத்து குறைபாட்டுடன் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் மூலம் மறுவாழ்வு கிடைக்க உதவி வருகிறார்.
ஸ்ரீவித்யாவின் தாய்ப்பால் தானத்துக்காக ‘இந்தியன் புக் ஆப் அன்ட் ஆசியன் புக் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் பாராட்டி, சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவித்யா கூறுகையில், “பிறந்த குழந்தைகளின் ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. இதன்மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. எனவே, என் கணவர் பைரவ்வின் ஆதரவுடன், தாய்ப்பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை தானம் செய்யத் தொடங்கினேன். எங்களுக்கு அசிந்த்யா என்ற 4 வயது மகனும் ப்ரக்ருதி என்ற பத்து மாத மகளும் உள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்திவரும் அமிர்தம் அறக்கட்டளை மூலம், தாய்ப்பால் தானத்தை சமூகச் சேவை அடிப்படையில் அளித்து வருகிறேன்.
தினமும் குழந்தைக்கு அளித்ததுபோக, மீதமுள்ள தாய்ப்பாலை அதற்கென பிரத்தியேகமாக உள்ள பாக்கெட்டில் சேகரித்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவோம். குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை தன்னார்வலர்கள் அரசு மருத்துவமனைக்கு அவற்றைப் பெற்றுச் செல்வர். இப்படி தானம் செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படும், கண்பட்டுவிடும், நம் குழந்தைக்குப் பற்றாமல் போய்விடும் என்றெல்லாம் சில பெரியவர்கள் சொல்வர். அப்படி எதுவும் இல்லை,” என்றார் ஸ்ரீவித்யா. அதிக அளவிலான தாய்மார்கள் இதில் அக்கறை காட்டும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீப காலமாக இதுகுறித்தான விழிப்புணர்வு இளம் பெண்கள் மத்தியிலும் ஏற்படுவதால், தாய்ப்பால் தானம் செய்ய முன் வருவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.