அஞ்சாலை அம்மாள் || வாழ்வும் பணியும் || தியாகிகள் தினச் செய்தி

 அஞ்சாலை அம்மாள் || வாழ்வும் பணியும் || தியாகிகள் தினச் செய்தி

அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை புகுந்தவர்கள், பலராவர் அந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஆளுமை கடலூர் அஞ்சலை அம்மாள்.

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற பெண்களில் வேலு நாச்சியார் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவர்.  அந்த வரிசையில் வடநாட்டில் ஜான்ஸிராணி லட்சுமி பாய் போராட்டக் களத்தில் தன் குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார் என்று படித்திருக்கிறோம். ஆனால் அதற்கும் மேலாகக் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு இந்திய விடுதலைக்காகப் போராடியவர் அஞ்சலை அம்மாள்.

தமிழக வரலாற்றில் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய அஞ்சலை அம்மாள்  அந்த அளவிற்குக் கொண்டாடப்பட்டாரா என்றால்  இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திகளில் இடம் பெற்றார். ஆனால் அவரின் சுதந்திரச் சேவைக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் கொண்டாடப்படவில்லை.

நடுத்தர உயரம், பருத்த உடலமைப்பு, பார்த்தவர் பரவசத்தோடு கும்பிடும் தெய்வீக முகத்தோற்றம். கணீர் குரல், எதற்கும் அஞ்சாத நேர்மையின் கம்பீரம்… இதுதான் அஞ்சலை அம்மாள். கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பென்ஷனை மறுத்த தியாகத் தலைவி அஞ்சலை அம்மாள்.

அவரைப் பற்றி வரலாற்று ரீதியாக முழுமையான ஒரு நூல் இதுவரை வந்ததில்லை. அதனால் அஞ்சலை அம்மாளைப் பற்றிய முழுப் போராட்ட வரலாற்றை எழுத முடிவு செய்து பல ஆண்டுகள் பல்வேறு தகவல்களைத் திரட்டி இந்த நூலை எழுதியிருக்கிறேன். வாருங்கள். அஞ்சலை அம்மாளின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுவோம்.

பிறப்பும் வளர்ப்பும்

அஞ்சலை அம்மாள் அன்றைய தென்னாற்காடு மாவட்டம், கடலூர் பழைய நகர், சுண்ணம்புக்காரத் தெரு வீட்டில் 1890ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தாயார் அம்மாகண்ணு. தந்தை முத்துமாணிக்கம். முத்துமாணிக்கம் குதிரைக்கு லாடம் அடிப்பவர். நடுத்தர வசதி படைத்தவர். சொந்தமாகக் குதிரை வண்டிகளை வைத்திருந்தவர்.

அன்றைய காலம் வெள்ளைக்காரர்களை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலம் என்பதால் அஞ்சலை அம்மாள் வளரும் காலத்திலேயே அவருக்குச் சுதந்திர உணர்வும் சேர்ந்தே வளர்ந்தது. அவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள். இவர் இரண்டாவதாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்திருந்தாலும்கூட கேள்வி ஞானத்தோடும் புத்தி சாதுர்யமாகவும் திகழ்ந்தார். அவரிடம் வாய் கொடுத்துவிட்டு மீண்டு சென்றுவிட முடியாது. அந்தளவுக்குப் படு சுட்டியாகத் திகழ்ந்தார்.

பருவ வயது வந்ததும் அஞ்சலை அம்மாவுக்கும் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்புக்கு மேற்கே உள்ள பெரிய நற்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகப்பனுக்கும் அஞ்சலை அம்மாளுக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன், புவனகிரியில் நெசவு வேலை செய்துவந்த முருகப்பன், திருமணத்திற்குப் பிறகு சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள மாமனார் வீட்டில் தறி போட்டு நெசவு செய்துவந்தார். இவர்களுக்கு கரும்பு, சரசுவதி, அம்மாப்பொண்ணு, கல்யாணி ஆகிய நான்கு பெண்கள். காந்தி, ஜெயில் வீரன் என்று இரண்டு மகன்கள்.

தனது 30ஆவது வயதில் சுதந்திரப் போராட்டக்களத்தில் அடியெடுத்து வைத்தார் அஞ்சலையம்மாள். 20.8.1920இல் கடலூருக்கு காந்தியடிகள் வந்தபோது அவரைப் பொதுமக்கள் சென்று சந்திக்கக் கூடாது எனத் தடை விதித்திருந்தது அன்றைய வெள்ளைக்கார அரசாங்கம். சந்திக்கச் சென்றவர்களை போலீஸ் அடித்து உதைத்து விரட்டி அடித்தனர்.

போலீஸ் மிரட்டலுக்கும் அடி உதைக்கும் அஞ்சாத அஞ்சலையம்மாள் முஸ்லிம் பெண்ணைப்போல பர்தா உடை அணிந்து தன்னுடைய குதிரை வண்டியைத் தானே ஓட்டிக்கொண்டு சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். காந்தியடிகளைத் தன் குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள தனது எளிய வீட்டிற்கு அழைத்து வந்து உணவு அளித்து உபசரித்தார்.

போராட்டக் களத்தில் அஞ்சலை அம்மாள்

மு.அஞ்சலையம்மாள் 1920களில் தமிழ்நாட்டில் தன்னுடைய தேசியப் போராட்ட நடவடிக்கைகள் மூலம் ஒருங்கிணைந்த அன்றைய சென்னை மாகாணத்தில் அகரம் சுப்பராயலு ரெட்டியாரைத் தனது அரசியல் நடவடிக்கைகளால் கதிகலங்க வைத்த அரசியல்வாதி.

1921ஆம் ஆண்டு கடலூர் கெடிலம் நதிக்கரையில் காந்தியடிகள் வந்திருந்தார். மக்கள் வெள்ளம் கெடிலம் நதிக்கரையையே மறைத்திருந்தது. அந்தக் கூட்டத்தில் காந்தியடிகள் தனிமனித ஒழுக்கமும் சமுதாயத் தூய்மையும் நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய அடிப்படைகள் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

அந்தக் கூட்டத்தில் அஞ்சலை அம்மாளும் அவர் கணவர் முருகப்பாவும் கலந்துகொண்டனர். அன்று முதல் அவர்கள் இருவரும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து தீவிர சத்தியாக்கிரகப் போராளிகளாகச் செயல்படத் தொடங்கினர். இந்த நிகழ்வு அஞ்சலை அம்மாள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மகாகவி பாரதியும்  கடலூர் அஞ்சலையம்மாளும்

1921ம் ஆண்டு பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையிலிருந்து விலகி சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்தார். அப்போது சில  பிரசங்கங்களை நிகழ்த்தினார். ஜீவமுக்தி அடைவது பற்றி ஒரு ரூபாய் கட்டணத்தில் கூட்டம் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் சார்பாகக் கூட்டம் நடத்த பாரதியாரை, அஞ்சலை அம்மாளும், தேசபக்தன் பத்திரிகை ஆசிரியர் கே.எஸ். தண்டபாணிப் பிள்ளையும் அணுகினார்கள். பாரதியார் சம்மதிக்க, கடலூருக்கு பாரதியாரை அழைத்துவந்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். இதன் பிறகுதான் பாரதி கலந்துகொண்ட இறுதிக் கூட்டம் ஈரோட்டில் கருங்கல்பாளையத்தில் நடந்தது. அதன்பிறகு அவர் மறைந்துவிடுகிறார் பாரதியார்.

காங்கிரஸ் சார்பாக வெளியான தேசபக்தன், தேசோபகாரி பத்திரிகைகளை அஞ்சலை அம்மாள்தான் வாங்கி கடலூரில் விநியோகம் செய்தார். காங்கிரஸ் வெளியிடும் செய்திகளைக் கையாலேயே எழுதிய கைப்பிரதிகளை கடலூர் பூராவும் விநியோகித்தவர் தியாகி அஞ்சலையம்மாள்தான்.

அந்நாளில் வெளிவரும் செய்திகளைக் கையாலேயே எழுதி, அத்தகைய கைப்பிரதிகளை (ஜெராக்ஸ் கிடையாது என்பதால்), மேலே கறுப்பு மையை ஊற்றிவிட்டு ஒரு உருளையில் வைத்து உருட்டினால் கீழே கையாலேயே கூழாக்கிய காகிதத்தில் எழுத்து அச்சாகிவிடும். அதை ரோனியோ காப்பி எடுத்தல் என்பார்கள். ரோனியோ கைப்பிரதி என்பார்கள்.

பாரதியார் நினைவு நாள் கொண்டாடிய அஞ்சலை அம்மாள்

தமிழகத்தில் மகாகவி பாரதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முதன்முதலில் கடலூர் முதுநகரில் கொண்டாடிய பெருமை தியாகி அஞ்சலையம்மாள் அவர்களுக்கே வாய்த்தது.

1922ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி கடலூர் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த மதுரைத் தியாகிகள் 19 பேரையும் சந்தித்து அவர்களுடன் இணைந்து பாரதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை சிறை வளாகத்திற்குள்ளேயே சிறப்பாகக் கொண்டாடியவர் அஞ்சலையம்மாள். இவருடன் இணைந்து இந்த நினைவு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தவர் தொழிற்சங்கத் தலைவர் தியாகி சி. என். தண்டபாணிப் பிள்ளை.

கள்ளுக்கடை மறியல்

1923ஆம் ஆண்டு மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற சுமார் 100 தொண்டர்களைக் கடலூர் சிறையில் அடைப்பதற்காகக் காவல்துறையினர் கொண்டுவந்தனர். இத்தகவலை மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலிருந்த தியாகி சோமயாஜுலு தந்தி மூலமாக முன்னரே அஞ்சலைக்குத் தெரிவித்திருந்தார்.

இரவு சுமார் ஒரு மணிக்கு ரயில் வருகிறது என்று தெரிந்தததால், அதற்கு முன்னதாக பாரத ஆசிரமவாசிகளும், தியாகி சுப்ரமணிய சிவாவும் உள்ளூர் தேசபக்தர் தேவநாகையா, தேச சேவகி அஞ்சலையம்மாளும் சுமார் நூறு தொண்டர்களுக்குச் சாப்பாடு தயார் செய்து கொண்டுபோய் ரயிலை எதிர்பார்த்து கடலூர் முதுநகர் ரயில்வே சந்திப்பில் காத்திருந்தனர்.

குறிப்பிட்ட நாளன்று மதுரைத் தியாகிகளை கடலூர் O.T. ரயில்வே சந்திப்பில் தியாகி எஸ்.ஏ.தெய்வநாயகம், தியாகி எம்.வி.சுந்தரவதன நாயுடு ஆகியோரை அழைத்துக்கொண்டு சென்றார். 100 பேர்களுக்குத் தேவையான, தன் வீட்டில் தயாரித்த உணவு மற்றும் குடிநீர், உடைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றார் அஞ்சலையம்மாள். கடலூர் முதுநகர் ரயில்வே சந்திப்பில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

சரியாக இரவு ஒரு மணிக்கு வண்டி வந்து நின்றது. ஆஸ்ரமவாசிகள் ‘ஜே ஜே’ கோஷம் போட்டு வரவேற்றனர். ஆச்சரியத்துடன் தொண்டர்களும் பதில் கொடுத்தனர். சுமார் நூறு தொண்டர்களையும் அழைத்துவந்த போலீஸாரும் சார்ஜண்டும் திகைத்து நின்றனர்.

இந்த நேரத்தில் பொதுமக்களும் அங்கு கூடிவிட்டனர். போலீஸார் மிரண்டுபோய் தொண்டர்களை பலவந்தமாக, தனியாக இருக்கச் சொல்லி உத்தரவிட்டனர். ஒருவரையும் பேசவிடவில்லை. அவர்களுக்கு வந்த கோபத்திற்கு எல்லையே இல்லை. சுப்ரமணிய சிவா, சார்ஜண்டிடம் போய் தொண்டர்களுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டுமென்று கேட்டார். முடியாது என்று பதில் தந்தனர் போலீஸார். தொண்டர்களுக்கு அளவு கடந்த கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. என்ன செய்வது என்று யோசித்தார் சிவா. தேசபக்தி நிறைந்த மதுரைத் தொண்டர்களைப் பார்த்தார். “சாப்பிடாமல் இடத்தைவிட்டு அகலாதீர்கள்” என்றார். மதுரைத் தொண்டர்கள் நூறு பேரும் சத்யாக்கிரகம் செய்தார்கள்.

போராட வந்த காங்கிரஸ் தொண்டர்களும் கடும் பனியிலும் அனைவரும் சமவெளியில் தரையில் அப்படியே படுத்தனர். அந்த நடுநிசியில் போலீஸார் இரண்டு மைல் தொலைவில் உள்ள கேப்பர் மலைச் சிறைக்குக் கொண்டு போய் விடலாமென்றுகூட யோசித்தனர். இதையறிந்துகொண்ட தொண்டர்கள் “அவர்களை அனுப்ப முடியாது, என்ன செய்தாலும் சரி” என்று மறித்து நின்றனர். போலீஸார் வாட்டர் டாங்கை கொண்டுவந்து போராட்டத் தொண்டர்கள் மீதும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். கம்பளியிலும் தண்ணீர் ஊற்றியும் நனைத்தனர். ஆனாலும் தொண்டர்கள் பிடிவாதமாக இருந்துவிட்டனர்.

அதிகாலையில் காங்கிரஸ் பக்தர் ஹோட்டல்காரர் வெங்கட்டராவ் தொண்டர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதாகச் சொன்னார். முதலில் போலீஸார் சம்மதிக்கவில்லை. தொண்டர்கள் பிடிவாதமாக இருந்தனர். சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த போலீஸார் தொண்டர்களுக்கு உணவு வழங்கச் சம்மதித்தனர்.

அஞ்சலையம்மாள் உடன் மற்றவர்களும் கோஷமிட, ரயிலில் வந்த தொண்டர்களும் ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிட்டனர். அஞ்சலையம்மாள் போலீஸிடம் சமாதானமாகப் பேசிய பின்னர் ரயில்வே நடைமேடையில் உணவு பரிமாற அனுமதித்தனர்.

பிறகு அவர்கள் ரயிலில் ஏற்றப்பட்டு சிறிது தூரம்வரை சிறைக்கு வழியனுப்பிய பிறகு ஆஸ்ரமவாசிகள் தங்கள் இடத்திற்குத் திரும்பினார்கள்.  தமிழ்நாட்டில் காந்தியடிகளின் சாத்வீக சத்தியாகிரகத்தில் காந்தியடிகளின் கட்டளைக்கேற்ப முதன்முதலில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் சிறை புகுந்த பெண் தியாகிகள் இருவர். ஒருவர் கடலூர் தியாகி அஞ்சலையம்மாள். இரண்டாவது தியாகி மதுரை பத்மாசினி அம்மாள்.

காஞ்சிபுரம் மாநாடு

தமிழ் மாநில காங்கிரசின் இரண்டாவது அரசியல் மாநாடு 1925, நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடந்தது. இம்மாநாட்டிற்கு திரு.வி.கலியாணசுந்தரம், மாநாட்டுத் தலைவர். ராஜாஜி, பெரியார் ராமசாமி, மயிலாப்பூர் வழக்கறிஞர் எஸ். சீனிவாச ஐயங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, வரதராஜ நாயுடு, அஞ்சலையம்மாள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த மேடையில் பெரியாருக்கும் சீனிவாச ஐயங்காருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சீனிவாச ஐயங்கார் சார்ந்திருந்த சுயராஜ்ய கட்சியின் தலைவர்களில் ஒருவரான எஸ்.வி.தம்பே என்பவர் காங்கிரசுக்குத் துரோகம் செய்துவிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்து பெரிய பதவியைப் பெற்றார். இதனைப் பெரியார் மிகவும் கிண்டலாக விமர்சித்தார். சுரேந்திரநாத் ஆரியாவும் பெரியாரை ஆதரித்தார். இறுதியில் சத்தியமூர்த்தி மேடைக்கு வந்து தாம்பே ஒருவரின் துரோகத்தால் சுயராஜ்யக் கட்சி மதிப்பில்லாமல் போய்விட்டதா என்று ஆவேசமாகப் பேசி சுயராஜ்ஜியக் கட்சியைத் தாக்கிப் பேசியவர்களைக் கூட்டத்தில் கண்டித்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக அஞ்சலையம்மாள் இயங்கினார். மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்தில் சத்தியமூர்த்தியை மேடையிலிருந்து கீழே தள்ளப் பார்த்தனர். அந்தத் தாக்குதலிலிருந்து அவரைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர் அஞ்சலையம்மாள்.

இந்தக் காலகட்டங்களில் அஞ்சலையம்மாள் காந்தியடிகளின் தேச நிர்மாணத் திட்டங்களான மதுவிலக்கு, கதர்த்துணி அபிவிருந்தி, தீண்டாமை ஒழிப்பு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மதுவுக்கு எதிராகக் கள்ளுக்கடைகளின் முன்பாகப் பெண்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்களைப் பல ஊர்களில் நடத்தியுள்ளார் அஞ்சலை அம்மாள்.

“பாழான கள்ளைக் குடிக்காதே

குடியால் பவிசை இழந்து துடிக்காதே

ஆசை மனைவியை அடிக்காதே

ஆண்மைத் திமிரில் திரியாதே

அடங்கா பிடாரியாய் அலையாதே

இடுப்பு வேட்டியை இழக்காதே

இழவுகளைக் குடிக்காதே”

என்று பாடிக்கொண்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இவர் கலந்துகொண்ட அடுத்த சத்தியாகிரகப் போராட்டம்  சென்னையில் நீல் சிலை அகற்றும் போராட்டம்.

நீலன் கொடிய காலன்

நீல் சிலை அகற்றும் போராட்டம் என்பது இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற ஓர் அறவழிப் போராட்டம். சென்னை நகரில் மவுண்ட்

சாலையில் (அண்ணா சாலை) அமைந்திருந்த கர்னல். ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக்கோரி 1927ஆம் ஆண்டு இப்போராட்டம் நடத்தப்பட்டது.

மெட்ராஸ் ஃபுசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் நீல் 1857ல் நடந்த முதல் சுதந்திரப்போர் என்று வர்ணிக்கப்பட்ட சிப்பாய்க் கலகத்தை அடக்கியதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவன் இந்தக் கொடுங்கோலன். அலகாபாத்தில் நீல் நிகழ்த்திய வன்செயல்களுக்காக அவனை ‘அலகாபாத்தின் கசாப்புக்காரன்’ என்று அழைத்தனர். பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு நீல் போற்றத்தக்க ஒரு படை வீரனாகவே இருந்தான். அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக கேனிங் பிரபு இருந்தார்.

கங்கையில் ரம்போலா படகுகளின் மூலமாகவும் ஆங்கில ராணுவத்துடன் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டான் நீல்.  காசி நகரில் முகாம் இட்ட நீலின் கொடுங்கோன்மை மிகக் கொடூரமாகத் தொடங்கியது. காசியைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மக்கள் எரிந்து சாம்பலாயினர். அலகாபாத் நகருக்குச் சென்ற நீல் அங்கு குண்டு மழையால் துளைத்து உண்டாக்கிய நெருப்பு வானளாவியது. தாக்குங்கள், அழியுங்கள் என்று கட்டளையிட்டான். இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அலகாபாத்திலிருந்து கான்பூருக்குச் செல்ல இவனுக்கு உத்தரவிடப்பட்டது. கான்பூரில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

அடுத்து லக்னோ சென்ற நீலின் நிலை எல்லைமீறி உச்சத்தைத் தொட்டது. அப்பாவி மக்களை யானைகள் மீது நிற்கவைத்து முன்னரே மரங்களில் தொங்கவிடப்பட்டிருந்த தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டினார்கள். பிறகு, யானையின் பின்பகுதியில் தட்டி அவற்றை ஓடச் செய்தனர். மக்கள் தூக்குக் கயிற்றில் தொங்கி மடிந்தனர். இதேபோல் கட்டை வண்டிகளிலும் பீரங்கி வண்டிகளிலும் நிற்க வைக்கப்பட்டு மரங்களில் தூக்கிலிடப்பட்டனர். பீரங்கியில் முன்பகுதியில் கொத்துக் கொத்தாகக் கட்டி,  பீரங்கிக் குண்டுகளோடு சுட்டுச் சிதறடித்தான் கொடுங்கோலன் நீலன். மக்களின் கைகள், கண்கள் கட்டப்பட்டு குதிரைகளையும் யானைகளையும் ஏற்றிக் கதறக் கதறச் சாகடித்தான், மாபாதகன் நீலன். இறுதியில் 1857 செப்டம்பர் 25ஆம் நாள் லக்னோ நகரை நீல் சூறையாடியபோது வாசுதேவ நாயக் என்ற கிளர்ச்சிக்காரனால் தனது 47ஆவது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டு மாண்டான் நீல்.

பிரிட்டிஷ் பேரரசை இந்தியக் கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து காப்பாற்றிய கொடுங்கோலன் நீலை, வைஸ்ராய் கானிங்பிரபு வெகுவாகப் புகழ்ந்து கே.ஸி.பி.டி என்று கௌரவப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். இங்கிலாந்து ராணியும் இந்தியாவின் பேரரசியுமான விக்டோரியாவின் ஆணையின்பேரில் கொடுங்கோலன் நீலின் மனைவி இசபெல்லாவுக்கு ஆண்டுதோறும் 12,00 பவுண்ட் உபகார சம்பளமும் வழங்கியது பிரிட்டிஷ் அரசு.

1857 டிசம்பர் மாதத்தில் சென்னை மாநில கவர்னர் ஹாரிஸ் தலைமையில் தளபதி நீலுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்தான் நீலுக்கு நினைவுச் சின்னமாக ஒரு சிலை அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு நீல் நினைவு நிதி என்று ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் பணியாற்றிய ஆங்கில ராணுவத்தினரும் ஆட்சியாளர்களும் பெரும் தொகை நிதியாக அளித்தனர்.

1861 மார்ச் 19இல் இன்றைய அண்ணாசாலை (அன்றைய மௌன்ட் ரோடு ஸ்பென்ஸர் எதிர்புறத்தில்) நீல் சிலை நிறுவப்பட்டது. சிலையில் பீடத்தின் கீழ் பொது மக்கள் அளித்த நிதி மூலம் இச்சிலை அமைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது. மேலும், வடபுலத்தில் நீலும் இன்னும் கொடுங்கோல் புரிந்த ராணுவ வீரர்கள் பெயகளும் இடம் பெற்றுள்ளன. சிலையின்  பராமரிப்பு பொதுப் பணித்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவின் அவமானச் சின்னமான இந்த நீலனுக்குச் சிலை அமைத்தது, பல ஆண்டுகளாகவே இந்திய மக்களின் மனதில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்து பகை என்னும் தீ.

சென்னை மகாஜன சபையும், இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவும் நீல் சிலையை அகற்ற வேண்டி தீர்மானங்கள் இயற்றின. பின் அதற்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ்.என்.சோமையாஜுலு இதற்குத் தலைமை வகித்தார்.

மாகாணம் முழுவதும் இருந்துவந்த போராட்டக்காரர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சில வாரங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டன. சோமையாஜுலு, டி.என்.தீர்த்தகிரி முதலியார் மற்றும் குடியாத்தம் சாமிநாத முதலியார் போன்ற முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அச்சமயம் சென்னை வந்திருந்த மகாத்மா காந்தியும் போராட்டத்திற்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர், கொடூரன் நீல் இந்திய மக்களை மிகக் கொடுமையாகக் கொலை செய்த சம்பவங்களை விவரித்து ‘எரிமலை’ என்ற நூலாக எழுதியிருந்தார்.  அதை  வெள்ளை அரசாங்கம் தடை செய்திருந்தது.

நீலின் கொடுமைகளை மதுரகவி மதுரை பாஸ்கர தாஸ் உணர்ச்சிப் பொங்கக் கவியாகப் பாடினார். டி.வி.சுந்தரம் ஐயங்காரின் (டி.வி.எஸ்.) மகளான டாக்டர் டி.வி.எஸ்.சௌந்தரம் ராமச்சந்திரன் அம்மையார் சாவர்க்கரின் ‘எரிமலை’ நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார். இந்நூலைப் படித்த தமிழ் மக்கள் கொதித்தெழுந்தனர். மதுரை தியாகி சிதம்பரபாரதி, சீனிவாசவரதன், அவர் மனைவி பத்மாசினி அம்மாள் மற்றும் சௌந்தரம் ராமச்சந்திரன், மதுரகவி பாஸ்கரதாஸ் இவர்களின் தொடர்ந்த பிரசாரத்தால் நீலின் சிலையை அகற்ற வேண்டி ஒரு போராட்டம் தியாகி சோமையாஜுலு தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் முகம்மதுசாலியா சாகிபு, சிதம்பரபாரதி முதலியோர் 1927 ஆகஸ்டு 11 ஆம் நாள் நீலன் சிலையை சம்மட்டியாலும் கோடாரியாலும் அடித்து சிலையைச் சேதப்படுத்தினர். அதனால் சிலையில் இருந்த வாள் உறையின் ஒரு பகுதி நசுங்கியது. அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். நீல் சிலை செம்பாலும், பித்தளையாலும் வார்ப்படம் செய்யப்பட்டிருந்ததால் உடனடியாக உடைபடவில்லை. வெண்கலம் அல்லது பளிங்குச் சிலையாக இருந்திருந்தால் கோடாரித் தாக்குதலுக்குச் சற்றேனும் நொறுங்கிப்போயிருக்கும்.

மாநில முதன்மைக் குற்றவியல் நீதிபதியாக இருந்த பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் இருவருக்கும் மூன்று மாதக் கடுஞ்சிறைத் தண்டனையும் ரூ. 300 அபராதத் தொகையும் விதித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் சேவைப்படை என்ற அமைப்பு ஒன்று உருவாகி நீலன் சிலை அகற்ற வேண்டும் என்று போராடியது. திருமலைச்சாமி நாயுடு, ரகுநாதராவ், வேணுகோபால நாயுடு, இரத்தின சபாபதி, தியாகி சோமையாஜுலு போன்றோர் தொடர்ந்து போராடியதால் பெர்காம்பூர் (ஒரிஸ்ஸா) சிறைக்கு அனுப்பப்பட்டனர். போராளிகளுக்கு 15 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆகஸ்டில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து சென்னை மாநிலம் முழுவதிலும் எதிரொலித்தது.

6.9.1927 செப்டம்பர் 6ஆம் நாள் கடலூரைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் அவரது மகள் அம்மாபொண்ணு இருவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டதால் அஞ்சலையம்மாளுக்கு ஒருநாள் சிறைத் தண்டனையும் 25 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்த அஞ்சலையம்மாள் மறுத்ததால் மேலும் ஆறு மாதத் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அம்மாகண்ணு சென்னையில் சிறுமியர் சீர்திருத்த இல்லத்தில் நான்காண்டுகள் இருக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

7-9-1927 அன்று முருகப்பனும் தனிநபராகச் சென்று நீல் சிலையை உடைக்கும் செயலில் ஈடுபட்டார். இதைக் கண்ட காவலர்கள் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். முருகப்பனுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனையும் 50 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த மறுத்ததால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கடுத்த நாள் ஜமதக்னி நீல் சிலை உடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.

தமிழக வரலாற்றில் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில், கடலூர் தந்த சிம்மம் அஞ்சலையம்மாள்தான் கணவர், மகள், மருமகன் என குடும்பத்துடன் சிறைக்குச் சென்ற ஒரே வீரத் தியாகி.

சிலை அகற்றலுக்கு ஆதரவாக சென்னை சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால் போராட்டம் விரைவில் வலுவிழந்து அடுத்து நிகழவிருந்த சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் கைவிடப்பட்டது. நீலன் சிலை மவுண்ட் சாலையில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தது. பின் சில ஆண்டுகள் ரிப்பன் கட்டிட வளாகத்தில் பூட்டி வைக்கப்பட்டுக் கிடந்தது.

இந்திய அரசுச் சட்டம், 1935ல் இயற்றப்பட்டு 1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சி. ராஜகோபாலச்சாரி சென்னை மாகாண முதல்வரானார். அவரது ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் சிலையை அகற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வரான ராஜகோபாலச்சாரி சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிட்டார். இன்று வரை நீலின் சிலை சென்னை அருங்காட்சியகத்தின் மானுடவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

1937 பொதுத் தேர்லில் அஞ்சலை அம்மாள் வெற்றி

1937ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பொதுத்தேர்தல் நடைபெற்றது.

கடலூர் பெண்கள் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தியாகி அஞ்சலையம்மாள் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நீதிக்கட்சி  வேட்பாளரை நிறுத்தவில்லை. அந்தத் தேர்தலில் இவரை எதிர்த்து நின்று போட்டியிட்டவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  திருமதி ஆண்டாள்.

தேர்தலின்போது “மஞ்சள் பொட்டியில மண்ணைப்போடு வெள்ளைப் பொட்டியில வோட்டைப் போடு” என்ற அரசியல் கோஷம் கடலூர் தொகுதி முழுவதிலும் ஓங்கி ஒலித்தது. நீதிக்கட்சியின் அன்றைய பெருந் தலைவர்களான  கு.முத்தையா முதலியார், திருக்கண்டீஸ்வரம் நிலப்பிரபு ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார்  ஆகியோர் இத்தொகுதியில்  முகாமிட்டு போட்டியிட்ட  அஞ்சலையம்மாளை எதிர்த்துப் பிரசாரம் செய்தார்கள். (இதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சியின் தலைவர்களாக விளங்கிய கு.முத்தையா முதலியாரும் ஜம்புலிங்க முதலியாரும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பெப்பிலி அரசரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களிடம் தோற்றுப் போனார்கள் என்பது தனிச்செய்தி.) 

அதற்குமுன் சுமார் 17 வருடங்களாகத் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்த கட்சியின் சார்பில் இத்தொகுதியில் பணம் தாராளமாக வாக்காளப் பெருங்குடிகளுக்குத் தண்ணீர் போலச் செலவழிக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியால் விநியோகிக்கப்பட்ட பணம் தொகுதி முழுக்க இறைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் எல்லா கள்ளு, சாராயக் கடைகளிலும் கனஜோராக வியாபாரம் நடந்தது.

ஜனநாயகக் கட்சியின் புண்ணியத்தில் ஓசியில் கிடைத்த பனங்கள்ளை மூக்குமுட்ட குடித்துவிட்ட சில குடியர்கள் போட்ட கும்மாளங்களும் தேர்தல் கோஷங்களும் தொகுதி முழுக்கத் தினந்தோறும் வெகுசனங்களின் காதுகளை ஈட்டிபோலத் துளைத்தன. மொடாக் குடியர்களில் சிலர் குடிவெறியில் தொகுதி முழுக்கப் பயணித்து, “மஞ்சப் பொட்டிக்கு வேட்டு வைப்போம், வெள்ளைப் பொட்டிக்கு வோட்டு வைப்போம்” என்று போதையில் உதார் விட்டுக்கொண்டே ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்குஆதரவாகப் பிரசாரம் செய்தார்கள்.

இவர்கள் உளறல் சுமார் ஒரு மாதம் காலம் தொகுதி முழுக்க ரீங்கரித்துக் கொண்டிருந்தது.   கள்ளுக்கடை முதலாளிகள் அஞ்சலையம்மாளைத் தேர்தலில் எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டுமென்று விரதம் பூண்டு கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். இதன் பொருட்டு தங்கள்  கடைகளில் வாக்காளர்களுக்கு இலவசமாகக் கள், சாராயம் விநியோகிக்கும் பணியைத் தாராளமாய்ச் செய்தார்கள்.

சுமார் ஒரு மாத காலம் கள்ளும் சாராயமும் கடலூர் தொகுதியின் சில பல வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. உபயம் ஆளுங்கட்சியைச் சார்ந்த உள்ளூர் பணக்கார அரசியல் பிரமுகர்கள்.

கதர்த்துணியில் தயாரிக்கப்பட்டு பல சத்யாகிரகப் போராட்டங்களில்  ஏற்கெனவே பலமுறை ஓய்வு ஒழிவு இல்லாமால் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, சற்று இளைத்து நைந்து போயிருந்த காந்தி குல்லாய்களை  எப்படியோ சிரமப்பட்டு தங்கள் கபாலங்களில்  ஒட்டவைத்துக்கொண்டு, (அணிந்துகொண்டு) அஞ்சலையம்மாளுக்கு ஆதரவாகத் தேச சேவகர்கள் சிலர் காந்தி புராணம் பாடியபடியே தொகுதி முழுக்கச் சுற்றி அலைந்து விறுவிறுப்பாகப் பிரசாரம்  செய்தார்கள்.

சுமார் ஒரு மாத காலம் தேர்தல் திருவிழா விநோதங்கள் கடலூர் தொகுதியில் விறுவிறுப்பாக அரங்கேற்றம் செய்யப் பெற்றது.

தேர்தல் கால வேடிக்கை விநோதங்களை வாக்காளர்களும் வெகுவாகக்  கண்டுகளித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.  இதுவரை தொகுதியில் நடந்து முடிந்த அரசியல் விநோதங்கள் பற்றிய நினைவுகள் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்துவிட்டு அதைப் பற்றிச் சிறிதும் கவனங்கொள்ளாமல்  தேர்தல் நாளன்று வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து சேர்ந்து வோட்டு போடத் தொடங்கியிருந்தார்கள்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட மஞ்சள் பெட்டி வேட்பாளர் தியாகி அஞ்சலையம்மாள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதை முன்னிட்டு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு  காந்தி குல்லாய் அணிந்த நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ‘உத்தமர் காந்தி வென்று விட்டார், சத்திய காந்தி இங்கு தோன்றிவிட்டார்’ என்று உணர்ச்சிப் பொங்கப் பாட்டுப் பாடி தொகுதி முழுக்கப் பயணித்து தங்கள் நன்றியைத் தெரிவித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கடலூர் பெண்கள் (பொது) தொகுதியில் அஞ்சலையம்மாள் பெற்ற வெற்றியை காந்தியின் வெற்றியாக  காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ச்சியுடன்  உருவகித்து பாடிய பஜனை பொது மக்களை வெகுவாக  அன்று கவர்ந்தது. பாட்டு உபயம் தேசபக்த சிந்தாமணி கடலூர் தமிழ்ப் பண்டிதை திருமதி.  அசலாம்பிகையம்மாள்.

அஞ்சலையம்மாள் தேர்தலில் வெற்றி பெற்ற பின் கடலூர் கள், சாராயக் கடைகளில் தாராளமாக நடந்து வந்த இலவச மதுபான விநியோகம் அடுத்த பொதுத் தேர்தல் வரை ஒத்திவைக்கப்பட்ட வேதனையான செய்தியறிந்த மொடாக் குடியர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்தனர்.

தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோது சுமார் ஒரு மாதம் காலம்  ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை எப்படியாவது வெற்றி வேட்பாளராக மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் படாத பாடுபட்ட கள், சாராயக்கடை உரிமையாளர்கள் தாங்கள் ஆதரித்த கட்சித் தேர்தலில் தோற்றுவிட்டது அறிந்து சோகமாகி  தொகுதியின் வோட்டர்களுக்கு இலவசமாக இனி கள், சாராயம் தங்கள் கடைகளில் விநியோகம் செய்யப்படமாட்டது என்றும், இலவசக் கள், சாராய உபயம் அடுத்த தேர்தல் திருவிழா வரை   தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதாகவும் அறிவிப்பு வாசகம் தாங்கிய போர்டுகளை தங்கள் கடைகளில் தொங்கவிடுமாறு கடை மானேஜர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

சில விடுதலைப் போராட்ட சத்தியாகிரகிகள் தங்கள் கைகளில் கதர்க் கொடி தாங்கி ‘வேண்டும் வேண்டும் விடுதலை வேண்டும்’ என்று தெருவிலே பாடிக்கொண்டிருந்த வரிகள் அவ்வழியாகப் பயணித்த வெகுசனங்கள் காதில் லேசாக விழுந்து கரைந்து கொண்டிருந்தது.

பிப்ரவரி மாதம் நடுவில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் அஞ்சாலையம்மாளும் வாக்காளர்களுக்கு நன்றி  தெரிவித்து தெருமுனைப் பிரசங்கம் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

1937ல் இவருடன் சட்டமன்றத்தில் பணியாற்றியவர்கள் சுவாமி சகஜானந்தர் சிதம்பரம்-சேலம் சுப்பிரமணியம் சென்னை பு.ம.ஆதிகேசவலு நாயக்கர் போன்ற அரசியல் ஜாம்பவான்கள்.

1940 யுத்த எதிர்ப்புப் பிரசாரம்

பிரிட்டன் இந்தியாவைக் கலந்தாலோசிக்காமல் வைஸ்ராய் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான், ஜெர்மனுக்கு எதிராகப் போரில் நுழைந்தது தவறு என்று பதவியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் ராஜினாமா செய்கிறார்கள்.

தனிநபர் சத்தியாகிரகம்

‘செய் அல்லது செத்து மடி’ என்கிற காந்திஜியின் கூற்றுப்படி தனிநபர் சத்தியகிரகம்  நாடெங்கும் தீவிரமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக  30-11-1940 அன்று கடலூர் அஞ்சலை அம்மாள் கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் இவருக்கு  ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இவருடன் ஏ.சுப்பிரமணியத்துக்கு 29-11-40 ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை மற்றும் ஐந்நூறு ரூபாய் அபராதம். 5-12-1940 அன்று சென்னையில் போராட்டம் நடத்திய ஆதிகேவசலு நாயக்கருக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அஞ்சலை அம்மாள் நடத்திய முதல் உப்பு சத்தியாகிரகம்

அன்றைய சென்னை மாகாணத்தில் முதன்முதலாக  உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்ற ஊர் எது? வேதாரண்யமா? சென்னை மெரினா கடற்கரையா?

வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் 30.4.1930ஆம் தேதி நடந்த உப்பு சத்தியாகிரகம்தான் சென்னை மாகாணத்தில் முதன்முதலில் நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டமா? இது உண்மையா?

வேதாரண்யம்  சத்தியாகிரகப் போராட்டத்தில் அகத்தியம்பள்ளியில் தியாகி திரு. வேதரத்தினம் பிள்ளையின் உப்பளத்தில்  ராஜாஜி உப்பு எடுத்தது 30.4.1930ஆம்தேதி.

இந்த நாளுக்கு முன்  (30.4.1930), சென்னை மெரினா கடற்கரையில் ஆந்திரகேசரி பிரகாசம், ஆந்திர பத்திரிகா இதழின் ஆசிரியரான அமிர்தாஞ்சனம் நாகேஸ்வர பந்துலு ஆகியோர் தலைமையில் 13.4.1930ஆம் நாள் சத்தியாகிரகிகள் உப்புக் காய்ச்சி  உப்புச் சட்டத்தை மீறினார்களா இல்லையா?               .

15.4.1930ஆம் தேதி கடலூர் அஞ்சலையம்மாள் தலைமையில் பல பெண் சத்தியாகிரகிகள் சென்னை மெரினா கடற்கரையில் உப்பு காய்ச்சி கைதானார்களே… இது உண்மையில்லையா?

இந்த உப்புச் சத்தியாகிரகத்தில் அஞ்சலை அம்மாளுடன்  வெங்கட்ட ரமணம்மா, காமாட்சி அம்மாள், சரஸ்வதி அம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஒவ்வொருவருக்கும் தலா  ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை விளக்கி  16.4.1930 தேதியிட்ட சென்னை இந்து பத்திரிகை தனது பதிப்பில் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்படியானால் சென்னை மெரினா கடற்கரையில்  13.4.1930ல் நடந்த உப்புச் சத்தியாகிரகத்தைதானே  காந்திய வழியில் சென்னை ராஜதானியில் முதலில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டமாக நாம் கருத வேண்டும்.? உண்மை இப்படி இருக்க 30.4.1930ல் வேதாரண்யத்தில் நடந்த போராட்டத்தை முதல் உப்புச் சத்தியகிரகப் போராட்டமாக எப்படி, எந்த அடிப்படையில் நாம் கருத இயலும்?

31.12.1929ஆம் நாள் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பூரண ஸ்வராஜ்யம் அல்லது முழு விடுதலையே தனது இறுதி லட்சியம் என காங்கிரஸ் கட்சி பிரகடனம் செய்தது. 26.1.1930ஆம் நாளை இந்திய விடுதலை தினமாக அனுஷ்டிக்க தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கியது.

காந்தியும் தனது ஆஸ்ரமத்திலிருந்து மார்ச் 12ஆம் தேதி 98 தொண்டர்களுடன்  தண்டி யாத்திரை புறப்பட்டார். அவர் 240 மைல்கள் நடந்து 23 நாட்கள் வழியெல்லம் பிரச்சாரம் செய்து கொண்டே தர்சனா வந்து சேர்ந்தார்.

அரசு தடை உத்தரவை மீறி கடற்கரையில் 6.4.1930ஆம் நாள் உப்புக் காய்ச்சி உப்புச் சட்டத்தை மீறினார். அன்றே  காந்தி கைது செய்யப்பட்டார். இந்தியா கொந்தளித்தது. அந்தச் சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்த மாதம் சென்னை மெரினா கடற்கரையில் உப்பு காய்ச்ச அடுப்பு மூட்டப்பட்டது.

உப்பு காய்ச்ச அடுப்பு மூட்டிய முதல் பெண் சத்தியாகிரகி கடலூர் மு.அஞ்சலை அம்மாள் என்பதுதான் நீங்கள் இங்கே  அறியவேண்டிய முக்கிய தகவல்.

சென்னையில் ஆந்திரகேசரி பிரகாசம் தலைமையில் நடந்த  சத்தியாக்கிரகத்தில்  தடியடிபட்டு பலத்த காயமடைந்த  சேலம்  அ.சுப்பிரமணியம், ரா.ஜமதக்னி மற்றும் அனந்தாச்சாரி, அண்ணல் தங்கோ, வேலூர் வி.எம்.உபையதுல்லா சாயுபு, துர்காபாய் தேஷ்முக் ராணிபேட்டை கல்யாணராமய்யர், சென்னை திருவேங்கட நாயக்கர் ஆகியோரின் உன்னதத் தியாகத்தையும் மனமாரப் போற்றுவோம்.

சென்னையில் முதலில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டம்தான் தென்னகத்தில் நடந்த முதல் உப்புசத்தியாகிரகப் போராட்டம். இது விஷயத்தில் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

1946 பொதுத் தேர்தல்

1946ல் நடந்த சென்னை சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அஞ்சலையம்மாள் கடலூர் பெண்கள் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சென்னை ராஜதானியில் மிகவும் செல்வாக்குடன் நீதிக்கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. நீதிக் கட்சியில் தென்னாற்காடு மாவட்ட இரும்புத் தலைவரான ஜம்புலிங்க முதலியாரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் திறமையுடன் செயல்பட்டவர் அரிமா அஞ்சலையம்மாள். அன்றைய காலகட்டத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் வசித்தவர்களில் பெரும்பான்மையினர் வன்னியர். சிறுபான்மையினரான சிலவுடைமையைச் சேர்ந்த பலரும் அந்தணர், ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே மாவட்ட காங்கிரஸில் மேல் மாவட்ட நிலையில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்.

நீதிக் கட்சியைச்  சார்ந்த  ஜம்புலிங்க  முதலியாரின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுகொடுக்கும் வகையில் அரசியல் களத்தில் காங்கிரஸால் இறக்கிவிடப் பட்டவர்கள், ஆர்.சீனிவாச ஐயங்காரும் அஞ்சலை அம்மாளும். தென்னாற்காடு மாவட்டத்தில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களான கே.சீதாராம ரெட்டியார், பண்டித அசலாம்பிகை அம்மாள், வெங்கடகிருஷ்ண ரெட்டி ஆகியோர். காங்கிரஸ் இயக்கத்தில் அரசியல் செய்தபோது அவர்களுக்கு எதிர் அரசியல் நடத்தியவர் தியாகி அஞ்சலையம்மாள்.

சட்டசபையில் அஞ்சலை அம்மாள் ஆற்றிய உரைகள்

1946-47 பட்ஜெட் பற்றிய பொது விவாதத்தின்போது அஞ்சலை அம்மாள்  (1946 ஆகஸ்ட் 5ம் தேதி) சட்டசபையில் ஆற்றிய உரைகள் :

“கனம் தலைவரவர்களே, இப்போது கள் குடியை ஒழிப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கள் குடியை ஒழிப்பதில் தஞ்சாவூர், தென்னாற்காடு, திருநெல்வேலி, ராமநாதபுரம்  ஜில்லாக்களையும் சேர்க்கும்படியாக நான் கனம் பிரதம மந்திரியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளுக்கடைகள் அடியோடு தொலைந்தால்தான் நம்முடைய ஜனங்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

முக்கியமாகக் குடியானவர்கள் தங்களுடைய வேலையைச் செய்து விட்டு சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கள்ளுக் கடைகளில் கொட்டி விடுகிறார்கள். வீட்டுக்கு வந்து பெண்களையும் பிள்ளைகளையும் அடித்து தொந்தரவு செய்கிறார்கள். அதோடு குடிக்கிறவர்களுக்குப் பணக்காரர்கள் பணத்தைக் கொடுத்து தங்களுக்கு யார் வேண்டாதவர்களோ அவர்களை அடிக்கும்படியாகவும் துன்பம் செய்யும்படியாகவும் செய்துவிடுகிறார்கள்.”

“வெள்ளையர் ஆட்சியில் சில ஜனங்களைக் குற்றப்பரம்பரை ஜாதியினராகக் குறிப்பிட்டிருந்தாலும் நம்முடைய ஆட்சியிலே அந்த மாதிரி இருக்கக் கூடாதென்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன். அந்த ஜாதியினருக்கும் சம்பளம் இல்லாமல் படிப்பு வசதி செய்துதர வேண்டும். குழந்தைகள் 4, 5 மைல் தூரத்திலிருந்து படிப்பதற்காகப் பள்ளிக்கூடங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு அங்கேயே சாப்பிடுவதற்கு வசதி செய்து கொடுத்தால் நன்றாயிருக்கும்.”

“கள்ள மார்க்கெட்டுகளை நாம் கட்டாயம் ஒழிக்கவேண்டும். ஆனால் இப்போது கள்ள மார்க்கெட்டுகளை நடத்துகிறவர்களையே கமிட்டியிலே மெம்பர்களாகப் போடுகிறார்கள். இப்போது கடைகளிலே 5 பலம் சர்க்கரை கேட்டால்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் ராத்திரியிலே மூட்டை மூட்டையாகச் சர்க்கரை கொண்டு போகப்படுகிறது. ஹோட்டல்களிலே எல்லாம் பட்சணங்கள் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு கமிட்டியிலும் உண்மையான ஊழியர்களைப் போட்டால்தான் ஏழை ஜனங்கள் சுகமாக வாழமுடியும்.  இப்போது நமக்குக் கொடுக்கப்படும் அரிசி மிகவும் கேவலமாக இருக்கிறது. அதைக் கையிலே எடுத்தால் மாவாகப் போய்விடுகிறது. அதை மாடுகளுக்குப் போடுவதற்குத்தான் உபயோகப்படும்படியாக இருக்கிறது.”

“நேற்று நான் கோஷா ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன் அங்கே சரஸ்வதி பாண்டுரங்கம் அவர்களுக்கு வயிற்று ஆபரேஷன் செய்தார்கள். நோயாளியின் பக்கத்திலே யாரும் வரக்கூடாதென்று அங்குள்ள டாக்டர்கள் விரட்டிவிடுகிறார்கள். சொந்தக்காரர்கள் யாராவது இருந்தால்தானே நோயாளிகளுக்குச் சோறு. தண்ணீர் கொடுக்கமுடியும். அது செய்வதில்லை. பணத்தைக் கொடுத்தால் உள்ளேயிருக்க அனுமதிக்கிறார்கள். இதையெல்லாம் நீங்கள் சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன்.”

“கடைசியாக என்ஜினியரிங் கலாசாலைகளைப் பற்றி ஒரு விஷயம் கூற விரும்புகிறேன். வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக ஆந்திர ஜில்லாக்களுக்காக ஒரு என்ஜினியரிங் கலாசாலையை ஏற்படுத்துவதற்குப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதே விதமாகத் தமிழ் ஜில்லாக்களுக்காக ஒரு என்ஜினியரிங் கலாசாலை தமிழ் ஜில்லாக்களில் ஏதாவதொன்றில் ஏற்படுத்தும் படியாக நான் கேட்டுக்கொள்ளுகிறேன்.”

“பொது ஜனங்களுக்கு இப்போது இருக்கிற கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும் நம்முடைய அரிசி சாப்பாடு விஷயத்தில் அவர்களுக்கு என்ன ஏற்படுகிறது என்றால், நமக்கு 12 அவுன்ஸ் இல்லை, 10 அவுன்ஸ்தான் என்று எண்ணக்கூடிய நிலையில் உள்ளது. எனவே, அந்த இரண்டு அவுன்ஸ் பிடிக்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். கிராமங்களில் நூல் நூற்றால், ஒரு சிட்டா நூல் இரண்டரை அணாவுக்கு விற்கிறது. இதைப் பலப்படுத்திட பஞ்சு, வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டும் என்று கவர்ன்மெண்டில் சட்டம் பாஸ் பண்ணிவிட்டால் துணிப் பஞ்சம் இல்லாமல் கௌரவமாய் இருப்போம். நாம் மூணு வேளை சாப்பிட்டுவிட்டு டாக்டரிடம் செல்கிறோம். கிராமங்களில் உள்ளவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு, இரண்டு கோட்டு போட்டுக்கொண்டு இருக்கிறோம். டவுன்லே பஞ்சமில்லை, கிராமத்தில் கோவணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

கிராமங்களில் அவர்கள் வருவாய்க்குக் காரணமாக சிட்டா நூல் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார் அஞ்சலை அம்மாள். “நகர்ப்புறங்களில் மக்கள் வசதியாக வாழ்கின்றார்கள். தம்முடைய கிராமங்களில் மக்கள் துணியில்லாமல் கோவணம் கட்டி வாழ்கின்றார்கள்” என்று பேசியிருக்கிறார் அஞ்சலை.

அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்த கிராம மக்கள் கொண்டுவரும் புளி, மாம்பழம் மற்றும் தின்பண்டங்களை எல்லாம் அவர்களிடமே தந்து திருப்பி அனுப்பிவிடுவார். கேப்பைக் களியும் கீரைக் கூட்டும்தான் அவருக்கு விருப்பமான உணவு. நான்கு கதர் புடைவைகள்தான் அவரது சொத்து. கையூட்டு என்பதைக் கனவிலும் நினையாதவர் அஞ்சுலை அம்மாள்.

கதர்த் துணிப் பிரச்சாரம்

கதர்த் துணியைத் தலையில்  தூக்கிச் சுமந்து கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் விற்றார். தேவனாம்பட்டினம் கடற்கரை கடலூர் பகுதியில் உள்ள கள்ளுக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தபோது பலர் ஒன்று சேர்ந்து அடிக்கச் செய்தார்கள்.

மறுநாள் பல பெண்களை அழைத்துக்கொண்டு தன் கணவனையும் அழைத்துக்கொண்டு கையில் காங்கிரஸ் கொடியுடன் சென்று கடையின் முன் மறியல் போராட்டம் செய்தார் அஞ்சலை அம்மாள். அதற்குப் பின் கள் குடிப்போர் எண்ணிக்கை குறைந்தது. தாக்குதலுக்குள்ளான அஞ்சலையம்மாள் கீழே விழுந்து மூர்ச்சையானார். கீழே விழுந்தபோதுகூட காங்கிரஸ் கொடியைக் கையிலிருந்து விடாமல் பிடித்திருந்தார். மூர்ச்சை தெளிந்து கையிலிருந்த கொடியுடன் மீண்டும் எழுந்து போராடினார்.

உப்பு சத்தியாகிரகம்

1930ல் வேதாரண்யத்தில் ராஜாஜி தமைமையில் 93 பேர் கலந்துகொண்ட உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. ஏப்ரல் 13 (தமிழ் வருடப் பிறப்பு) அன்று திருச்சியிலிருந்து வேதாரண்யம் புறப்பட்ட அதே நாளில் சென்னையிலிருந்து உப்புச் சத்தியாகிரக யாத்திரை புறப்பட்டது.

ஒத்துழையாமை இயக்கத்தின்போது சோழிங்கநல்லூரில் (செம்மஞ்சேரி)  நடந்த சம்பவங்களை விவரித்து சைதாப்பேட்டையில்  உள்ள செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி 25.4.1930இல் ஒரு ரகசியத் தகவல் அறிக்கையைச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு  அனுப்பி வைத்தார். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தலைமை நீதிபதிக்கு அனுப்பவேண்டிய முறை அந்நாளில் அமலில் இருந்தது.

அந்த அறிக்கையில் சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரியில் அஞ்சலையம்மாள் தலைமையில் சுமார் 40 தொண்டர்கள் உப்பளங்களைத் தயாரித்தனர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உப்பளங்களை உடைத்து விட்டனர். இதனை எதிர்த்த அஞ்சலையம்மாள், காவல் துறை உதவி ஆய்வாளரைப் பார்த்து (இந்தியர்) அவருடன் வந்த காவலர்களைப் பார்த்து, “ஏ பேடிகளே”, என்று கடுமையான வார்த்தைகளை உபயோகித்து, “நாட்டுப்பற்று இல்லாமல் எங்களை அடித்து உதைக்கிறீர்களே” எனக் கூச்சலிட்டார். இதைப் பார்த்த சாது சண்முகானந்த அடிகள் என்பவர்  சத்தியாக்கிரகிகளைப் பார்த்துப் ‘போராட்டத்தைத் தொடங்குங்கள்’ என்று உத்தரவிட்டார்.

உப்பு சத்தியாக்கிரகப் போரில் மூன்று பெண் சத்தியாக்கிரகிகளின் பங்கு குறிப்பிட்டத்தக்கது. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் ருக்குமணி லட்சுமிபதி ராஜாஜியுடன் இணைந்து களப்பணி செய்தார். ஆந்திரகேசரி பிரகாசம் தலைமையில் சென்னையில் நடந்த உப்புச் சத்தியாக்கிரகத்தில் துர்க்காபாய் தேஷ்முக் பங்கு பெற்றார். அதேநேரத்தில் சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரியில் கடலூர் அஞ்சலையம்மாள் தனியாக நின்று மக்களைத் திரட்டிப் போராடினார்.

காந்தியின் பெயரில் சென்னையில் நடந்த மோசடியைத் தடுத்து நிறுத்திய கடலூர் அஞ்சலையம்மாள்

1931ஆம் ஆண்டுவரை  சென்னை கிடங்குத் தெருவிலுள்ள துணிக் கடைகளில் அயல்நாடுகளிலிருந்து அதிக அளவில் பளபளப்பான புதிய நைஸ்ரக துணிகள் வெகு விமர்சையாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. உள்நாட்டில் உற்பத்தியான கைத்தறி ரகங்களையோ கைராட்டையால் நூற்கப்பட்டுத் தயாரான கதர்த் துணி ரகங்களையோ இவர்கள் தங்கள் கடைகளில் விற்பதில்லை. அதற்கு மாறாக அன்னிய நாட்டுத் துணி வகைகளை விற்று அமோக லாபம் சம்பாதித்து  பெரும் தனவந்தர்களாக மாறியிருந்தார்கள்.

கதர் என்ற சொல்லைக் காதால் கேட்பதே பாவம் என்று ஏளனம் செய்து இறுமாப்படைந்திருந்தார்கள் அந்தப் புது தனவான்கள். இவர்களின் கைங்கரியத்தில்  ஜப்பானிலிருந்து ‘டைவெட்டா’ என்ற பளபளப்பான ஃபைபர் பட்டு ரகத் துணிகள் மில்லியன் கெஜங்களில் இறக்குமதி செய்யப்பட்டு கெஜம் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் என்ற விலையில் அமோகமாக  விற்பனையாகிக் கொண்டிருந்தது.

இவ்வாறு வியாபாரம் செய்த கடைகள் பாரிஸ் கார்னர் கிடங்கு செட்டித் தெருவில் அதிக அளவில் அன்று அமைந்திருந்தன. மேலும் சில துணிக் கடைக்காரர்கள்  ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப் பெற்ற காடாத் துணியை சென்னை சைதாப்பேட்டைக்கு அனுப்பி புதிய புதிய நிறங்களில் சாயம் தோய்த்து அந்தத் துணி பேல்களைப் பயன்படுத்தி  நவீன நிறங்களில் சேலைகள்  தயாரித்தார்கள்.

அவ்வாறு புதிய புதிய  நிறத்தில் உருவான சேலைகளில் ‘காந்தி’ படத்தை அச்சிட்டு இந்தியாவில் தயாரான பருத்தி ஆடைபோல் அதை உருமாற்றி மக்களை ஏமாற்றி  மார்க்கெட்டில் தில்லுமுல்லு செய்து விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்.

காந்தி மகான் படம் போட்டு அச்சாகி மார்க்கெட்டுக்கு வந்திருந்த அந்தச் சேலைகளை உள்நாட்டில் தயாரானவை என்று தவறாகப் புரிந்துகொண்ட பெண்களும் உண்மையறியாது பளபளப்பான சேலைகளை வாங்கி உடுத்தி மகிழ்ந்தனர். இதனால் அந்நியத் துணி வியாபாரம் சென்னையில் கொடிகட்டிப் பறந்தது. சுதேசி ரகத் துணி வகைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன. கதர் விற்பனையும் மந்தமாகவே இருந்தது.

இந்தக் கடைக்காரர்களின் தில்லுமுல்லை அறிந்துகொண்ட தியாகி அஞ்சலை அம்மாள் இதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பினார். காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டி இக்கடைகள் முன் சாத்வீக பகிஷ்காரம் செய்தார்.

அந்நியத் துணி வியாபாரம் படுத்துவிட்டது. ஜப்பானிலிருந்து  இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்ட துணிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. சுமார்  2000 பாக்ஸ்கள்  நிறைய  அன்னியத் துணி வகைகள் சென்னையில் அன்று விற்பனையாகாமல் மூலையில் முடங்கிக் கிடந்தன. வேறு வழியில்லாமல்  இந்தியத் தயாரிப்புகளையே துணிக்கடைக்காரர்கள் விற்கத் தொடங்கினர்.

சத்யாக்கிரகப் போராட்டங்களால் இந்த மாற்றத்தை அன்று சென்னையில் நிகழ்த்தியவர் தியாகி அஞ்சலை அம்மாள் என்பதுதான் இங்கு அறியப்படும் செய்தி.

களப் போராட்டத்தில் அஞ்சலை அம்மாள்

குறிப்பாக சென்னை கிடங்குத் தெருவிலிருந்த அய்யண்ணன் செட்டியார் துணிக்கடை அன்னிய நாடுகளிலிருந்து, குறிப்பாக லண்டனிலிருந்து இறக்குமதி செய்த விதேசித் துணி வகைகளை விற்பனை  செய்துகொண்டிருந்த மொத்த வியாபாரத் துணிக் கடையாகும்.

செட்டியார் தன் கடையில் கதர்த் துணிகளை விற்பனை செய்வதில்லை. அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜவுளித் துணி ரகங்களின் விற்பனையில் கிடங்குத்தெரு அய்யண்ண செட்டியார் துணிக்கடை அன்று  மிகப் பிரபலம். அங்கு, இங்கிலாந்து, பாரிஸ், சைனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலிருந்து நேரிடையாக உயர்ந்த ஜவுளிகளை மொத்தமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டன.

கிடங்குத் தெருவில் சீமை ஜவுளிகள் விற்பனை நடக்கும் கடைகளில் தியாகி கடலூர் அஞ்சலையம்மாள் தியாகி சின்னசாமி ஆகிய காங்கிரஸ் தொண்டர்களுடன் தாம் மறியல் செய்யப் போவதாக தீரர் சத்தியமூர்த்தி  08.1.1931.ம் தேதியிட்ட இந்து பத்திரிகையில் ஒரு விளம்பரமும் வெளியிட்டிருந்தார்.

9.1.1931ஆம் நாள் வெள்ளிக்கிழமை விடியற்காலையிலிருந்தே கிடங்குத் தெரு பக்கம் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் சேரத் தொடங்கிவிட்டது. தெருக்களில் ‘சீமைத்துணியை வாங்காதீர்கள்’ ‘சீமைத்துணியை பகிஷ்கரியுங்கள்’ என்றெழுதிய தட்டிகள் ஜார்ஜ்டவுன் முழுவதும் ஆங்காங்கு தொங்கின.

9.1.1931ல் அய்யண்ண செட்டியார் துணிக் கடை முன்பு அன்னியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் சத்தியமூர்த்தி தலைமையில் காலை 10 மணிக்கு  சத்யாக்கிரகிகளால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.  இந்தப் போராட்டத்தில் வலது கையில் கதர் கொடியை ஏந்திக்கொண்டு இடது கையால் தன் மூன்று மாதக் கைக்குழந்தையை இடுப்பிலே சுமந்துகொண்டே, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியுடன் சாத்வீக பகிஷ்காரம் செய்தார் தென்னாட்டு ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாள்.

விதேசிப் பொருள்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்திற்குத் தலைமை வகித்த சத்தியமூர்த்தி காரில் பிரயாணம் செய்து போராட்டம் தொடங்குவதற்குச் சற்று நேரத்திற்கு  முன்னமேயே  செட்டியார் கடைக்கு வந்து சேர்ந்து விட்டார். பகிஷ்கரிப்பு கோஷமிட்டுக் கொண்டு அஞ்சலையம்மாள் கடையை நோக்கி ஊர்வலமாக அப்போது வந்து கொண்டிருந்தார்.

சத்தியமூர்த்தியைத் தன் கடையில் வரவேற்று சோடா கொடுத்து உபசரித்தார் கடை உரிமையாளர். கடை உரிமையாளர் கொடுத்த நாற்காலியில் அப்போது அமர்ந்தபடியே அஞ்சலையம்மாளின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சத்தியமூர்த்தி.

துணிக்கடை முன்பு மறியல் ஆர்ப்பாட்டம் செய்ய காங்கிரஸ் தொண்டர்கள் எட்டு பேரை தன்னுடன் அழைத்துக்கொண்டு, ‘மகாத்மா காந்திக்கு ஜெ’, ‘வாங்காதே வாங்காதே, அன்னிய துணியை வாங்காதே’, ‘உடுத்தாதே உடுத்தாதே’, அந்நியத் துணியை உடுத்தாதே’, ‘கதரை வாங்கி உடுத்துங்க’ ‘காந்தி மகான் சொல்லைக் கேளுங்க’  ‘கதரை வாங்கி உடுத்துங்க’, ‘கதரே கதிமோட்சம்’ என்று உரக்க கோஷமிட்டவாறே  கிடங்குத் தெருவிலுள்ள  அய்யணன்ன செட்டியார் கடை வாசலை அடைந்து மறியல் செய்தார் அஞ்சலையம்மாள்.

சத்தியமூர்த்தி தலைமையில் கடையின் முன் திரண்ட அஞ்சலையம்மாள் உட்பட சுமார் 10 காங்கிரஸ் தொண்டர்கள்  அன்னியத் துணி பகிஷ்கரிப்பை  வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

திடீரென கடையின் வாயில்படிக்கு வந்து நின்ற சென்னை மாநகர் உதவி போலீஸ் கமிஷனர்  அனந்தச்சாரி,  மறியல் செய்துகொண்டிருந்த காங்கிரஸ் சத்யாக்கிரகிகளை  ஏளனத்தோடு பார்த்துவிட்டு மிகவும் கடுமையான குரலில்  கலைந்து போகச் சொல்லி, போலீஸ் அதிகாரத் தோரணையில் உத்தரவு போட்டார்.

சத்தியமூர்த்தி, அஞ்சலையம்மாள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மறியல் போராட்ட வீரர்களையும் கைது செய்திருப்பதாக அறிவித்து  தனது போலீஸ் வாகனத்தில் ஏற்றி எழும்பூர் மாஜிஸ்ட்ரேட்டு ஹரிராவ்  கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

வழக்கு விசாரணை முடிந்தது. போராட்டம் நடத்தியதற்காக   அஞ்சலையம்மாளுக்கு  ஆறு மாத சிறைத் தண்டனை விசாரணை கோர்ட்டால் வழங்கப்பட்டது. ‘சி’ வகுப்பு கைதியாக அஞ்சலையம்மாள் சிறை புகுந்தார்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அஞ்சலையம்மாள் கணவர் முருகப் படையாட்சியை கூட்டத்தை கலைப்பதாகக் கூறிக்கொண்டு போலீஸார் கடுமையாகத் தாக்கினர். போலீஸ் தாக்குதலுக்கு உள்ளான  முருகப் படையாட்சி ரத்தம் சிந்தியவாறே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துவிட்டதால் போலீஸார் முருகப் படையாட்சியை கைது செய்யமால் அப்படியே விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் கைது செய்து போலீஸ் லாரிகளில் ஏற்றி எழும்பூர் கோர்ட்டுக்குக் கொண்டு சென்றனர்.

போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த  முருகப் படையாட்சி, விலா எலும்பு முறிந்து மூர்ச்சையாகி சாலையில் வீழ்ந்து கிடந்தார்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் அபிமானி ஒருவர் மனமிரங்கி இவரை ஒரு ஐட்கா வண்டியிலேற்றி  டாக்டர் நடராஜன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ முதலுதவிசெய்து உயிர் பிழைக்க வைத்தார்.

போலீஸ் தடியடியில் ஏற்கெனவே பலத்த காயமடைந்து உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த முருகப் படையாட்சியைத் தீவிர மருத்துவ சிகிச்சைக்காக வேண்டி அன்றிரவே போட்மெயிலில் ஏற்றி திருச்சி டாக்டர் ராஜன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் கட்சி அபிமானமுள்ள சில தொண்டர்கள்.

முருகப் படையாட்சியும் திருச்சி மருத்துவமனையில் சுமார் இரண்டு மாதம் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினார்.

அஞ்சலை அம்மாள் சேவை

நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் தண்டனை பெற்று அஞ்சலையம்மாள் மற்றும் அவரது கணவர் முருகப்பன் இருவரும் விடுதலை அடைந்தனர். ஆனால் அவர்களது மகள் லீலாவதி விடுதலை ஆகவில்லை. மகளை அடிக்கடி சென்று பார்க்க வேண்டிய காரணத்தால் அஞ்சலையம்மாள் சைதாப்பேட்டையில் குடியேறினார். குடும்ப வருவாய்க்காகத் தன் வீட்டிலேயே தறி அமைத்துக்கொண்டு கதர்த் துணி நெய்து விற்பனை செய்து குடும்பம் நடத்தினர். நூல் நூற்றல், கதராடை நெய்தல், சிறையிலுள்ள மகளைப் போய்ப் பார்த்து வருதல் இவற்றோடு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்களில் இத் தம்பதி பங்கேற்றனர்.

அக்காலகட்டத்தில் இவர்கள் சென்னையில் இருப்பதை அறிந்த ஆக்கூர்  அனந்தாச்சாரியார்,  ஜமதக்னி  இருவரும் வீரப்பெண் அஞ்சலையம்மாள் அவர்களை  வீட்டிற்குச் சென்று பார்த்து நலம் விசாரித்து வருவது வழக்கம். அஞ்சலையம்மாள் இருவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து அனுப்புவார்.

ஜமதக்னியின் சிறைவாசத்தின்போது அவருக்கு தோல் நோய் ஏற்பட்டது. நீண்ட நாட்கள் அந்நோயால் வாடினார். ஜமதக்னியின்  தோல் நோய்க்கு அஞ்சலையம்மாள் தாய் உள்ளத்தோடு  மூலிகை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி மகிழ்வார்.

ஜமதக்னியின் அழுக்கு ஆடைகளையும் துவைத்து உலர்த்தித் தருவார். பகல் உணவு அளித்து மகிழ்வார். ஏழ்மை நிலையிலும் சென்னைக்கு வரும் சத்தியாக்கிரகிகளை உபசரித்து அனுப்புவது அஞ்சலையம்மாளின் வழக்கம்.  அப்போது அஞ்சலையம்மாள் சோழிங்கநல்லூரில் மக்களோடு தொண்டு புரிந்து வாழ்ந்துகொண்டிருந்தார். எப்போதும் அவர் வீட்டில் கட்சிக் கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருக்கும்.

உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்கச் சென்றவர்களை அஞ்சலையம்மாளும் முருகப் படையாட்சியும் தினந்தோறும் வழி அனுப்பி வைக்கும் பணியைச் செம்மையாகச் செய்து வந்தனர்.

சைதாப்பேட்டையில் அஞ்சலையம்மாள் வீட்டில் இருந்துகொண்டே ஜமதக்னியும் அனந்தாச்சாரியும் சென்னையில் நடைபெற இருக்கிற சத்தியாக்கிரகப் போராட்டத்தை விளக்கிப் பேசுவார்கள். போலீஸாரின் அடக்குமுறையைக் கண்டித்துப் பேசியதால் இவர்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்தத் தடை உத்தரவையும் மீறி கூட்டங்களில் பேசியதால் ஜமதக்னி மீது வழக்குத் தொடரப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு வருடம் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.அனந்தாச்சாரி, துர்க்காபாய் அம்மாவுடன் வடஆற்காடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தேச பக்தியைத் தூண்டினார்.

சென்னையில் உப்புச் சத்தியாகிரகத்துக்காகப் பிரகாசம் அமைத்த உதயவனத்தில் இ.கிருஷ்ணய்யர் சர்வாதிகாரியாக இருந்தார். உப்புச் சத்தியாகிரகத்தை முறியடிக்க போலீஸ் அந்த முகாமிற்கு சீல் வைத்துப் பூட்டிவிட்டு மேலாளராக இருந்த கிருஷ்ணய்யருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அளித்தது. உப்புச் சத்தியாகிரகத்தில் ஆக்கூர் அனந்தாச்சாரிக்கும் சென்னையில் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. இருவரையும்  சிறைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறிவரும் பணியை அஞ்சலையம்மாள் மேற்கொண்டார்.

இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் சென்னை ராஜதானியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இருமுறை அஞ்சலையம்மாள் வெற்றி பெற்றார்.

1946இல் இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய சீரழிவில் சென்னை மாகாணம் சிக்கித் தவித்தது. உணவு தானிய உற்பத்திப் பற்றாக்குறையால் மாகாணம் முழுவதும் வரலாறு காணாத உணவுப் பஞ்சம் வாட்டி வதைத்தது. ஏழை, எளிய மக்கள் ஒரு வேளை உணவுகூட கிடைக்காமல் வாடித் திரிந்தனர்.

பசிப்பிணி தீர்க்க, காங்கிரஸ் பேரியக்கம் மாகாணம் முழுவதும் பஞ்ச நிவாரணமாக கஞ்சித்தொட்டி திறந்து ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்தது. இந்தியாவின் உடைத் தேவைகளை பூர்த்தி செய்யுமளவுக்கு சென்னை மாகாணத்தின் தென்னக மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிற கோயம்புத்தூர் ஜில்லாவில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டாலும், சென்னை மாகாணத்தில் கடும் துணிப் பஞ்சம் நிலவியது.

இம்மாதிரியான சூழலில் டி.பிரகாசம் தலைமையிலான காங்கிரஸ் அரசு ரேஷன் உணவுப் பொருட்களான அரிசியை 12 அவுன்ஸிலிருந்து 10 அவுன்ஸாகக் குறைத்தது. மேற்குறித்த சிக்கலை நீக்குவது தொடர்பான ஆலோசனைகளை சட்டமன்றத்தில் அஞ்சலையம்மாள் துல்லியமாக எடுத்துரைத்தார்.

அஞ்சலை அம்மாள் கால்வாய்

பி.முட்லூர் அருகில் தீர்த்தாம்பாளையம் என்ற இடத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நிலங்களுக்குப் பாசன வசதி இல்லாமல் இருந்தது. அந்த ஊர்ப் பெரிய மனிதர்களின் நிலங்கள் வழியாக கால்வாய் வெட்ட சிலர் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அஞ்சலையம்மாள் எம்.எல்.ஏ. இந்தப் பிரச்னையில் தீவிரமாக ஈடுபட்டு சிலரோடு சமாதானம் பேசியும் கட்டப்படாத சிலர் நிலத்தில் காவல்துறை உதவியோடும் அஞ்சலையம்மாள் முன்னின்று கால்வாய் வெட்டி பாசன வசதி செய்து கொடுத்தார்.

எனவே அந்தக் கால்வாய்க்கு அஞ்சலையம்மாள் கால்வாய் என்று பெயர் ஏற்பட்டது. அந்தக் கால்வாய் இன்றும் உள்ளது தீர்த்தனாம்பாளையத்தில்.

ஓல்டு டவுன கடலூர் காந்தி பூங்காவில் நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது. அதில் அஞ்சலை அம்மாள், முருகப்பன், லீலாவதி, ஜெயவீரன் மற்றும் சிலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

காந்திஜி நினைவில் அஞ்சலை அம்மாள்

1946ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை கலைக்கப்பட்டது. அதன் பிறகு 1948ல் அண்ணல் காந்தி சுடப்பட்டார். இதைக் கேள்விப்பட்டதிலிருந்து அஞ்சலை அம்மாள் அரசியலிலிருந்து விலகிக்கொண்டார்.

1961ஆம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதியன்று தனது 71வது வயதில் அஞ்சலை அம்மாள் காலமானார். தமிழ்நாடு சட்டமன்றம், 2-3-1961 அன்று அஞ்சலையம்மாள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...