நாட்டுடைமையானது எட்டு எழுத்தாளர்களின் நூல்கள்
தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்களின் நூல்கள், பொதுவுடைமை ஆக்கப்பட்டு, அவர் தம் வாரிசுகளுக்குத் தமிழக அரசு பரிவுத்தொகை வழங்கும் திட்டம் நூல்களை நாட்டுடைமை ஆக்குதல்.
இந்த நூல்களைத் தமிழ்நாடு அரசின்கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வழியே மின்னூல்களாக மாற்றி வருகிறது. அந்நூல்களை தமிழ் இணையக் கல்விக் கழகம் இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கிக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களும் அவற்றின் ஆசிரியர்களின் பெயர்களும் இணையத்தில் பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக் கழகத்தினரால் இதுவரை நாட்டுடைமையாக்கப்பட்ட 2,178 தமிழ் நூல்களில் பெரும்பாலான நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டுள்ளது. அதைக் கட்டணமின்றிப் படிக்க வகை செய்துள்ளது.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சை பிரகாஷ், நெல்லை கண்ணன் உட்பட தமிழறிஞர்கள் எட்டு பேரின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட, மறைந்த தமிழறிஞர்கள் ஐந்து பேர் மற்றும் வாழும் தமிழறிஞர்கள் மூன்று பேர் என எட்டு பேரின் நூல்கள் இந்தாண்டு (2022) நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மறைந்த நெல்லை கண்ணனின் வாரிசுகளுக்கு, 15 லட்சம் ரூபாய்; கந்தர்வன், சோமலே, ராசய்யா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் வாரிசுகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் என மொத்தம், 55 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
வாழும் எழுத்தாளர்களான நெல்லை செ.திவான், விடுதலை ராசேந்திரன், நா.மம்மது ஆகியோருக்கு தலா, 15 லட்சம் ரூபாய் என, 45 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இதன்படி, தமிழக அரசு இந்த ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களுக்கான பரிவுத் தொகையாக ஒரு கோடி ரூபாயை வழங்க உள்ளது.