நாமக்கல் ஆஞ்சனேயர் ஜெயந்தி விழா, சிறப்பு அபிஷேகம்
18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீரமாகவும் கனிவுடனும் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் நாமக்கல்லின் தெய்வீக அடையாளம். நாமக்கல்லில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று (23-12-2022) ஜெயந்தி. அதை முன்னிட்டு அவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
புராண வரலாறு
முன்னொரு காலத்தில் மகாலட்சுமி, பெருமாளைப் பிரிந்து நாமக்கல் கமலாலய குளம் அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கிக் கடும் தவம் இயற்றினாள். திரேதா யுகத்தில் ராம அவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும் ராமரும் மூர்ச்சையடைந்தனர்.
அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சனேயர் சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்திலிருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பினார். அவ்வாறு வருகையில் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் குளிக்கும்போது இரண்டு துளையுள்ள சாளக்கிராமம் கிடைக்கிறது. இறைவனின் அம்சமாக இருப்பதை எண்ணி அதனைத் தம்முடன் எடுத்துக்கொண்டு வான்வழியாக வந்து கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
அப்போது நாமக்கல் பகுதியில் வந்து கொண்டிருந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் தமது கையில் இருந்த சாளக்கிரமக் கல்லைக் கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை செய்து முடித்தார்.
மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.
“ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்” என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சனேயரும் சாளக்கிரமத்தை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பினார்.
ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சனேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சனேயர் விட்டுபோன சாளக்கிரமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.
அதனால்தான் இங்கே நாமக்கல் நகரில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கொண்ட நரசிம்ம சுவாமியை இருகரம் கூப்பி தரிசித்தவாறு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
கோயில் வரலாறு
நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமனுக்கு சன்னதியில் கோபுரம், மேற்கூரை கிடையாது. வானமே கூரையாகக் கொண்டு அருள்பாலிக்கிறார். சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் வாயு மைந்தன் என்பதால் காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.
நரசிம்மர் – நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. எதிரில் உள்ள நரசிம்மரைத் திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சனேயர் காட்சி தருகிறார். மலையின் மேற்குப் புறம் உள்ள மலைக்கோவிலில்தான் நரசிம்மர் – நாமகிரித் தாயார் கோவில் உள்ளது. நாமகிரித் தாயார் கோவிலுக்குப் பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில்.
நரசிம்மருக்குக் கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. அவருக்குக் கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சனேயர் கூறியதாக வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.
நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடவரைக் கோவில் ஆகும்.
பல்லவர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்குப் புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது. இங்கு ஐந்து தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்
ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய இந்த நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்குப் பகுதியில் பாறையைச் செதுக்கி சிறிய படிக்கட்டுகள் உள்ளன. உருவாக்கப்பட்டு உள்ளது.
ஆஞ்சனேயனுக்கு உகந்த துளசி வழிபாடு
ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த மூலிகை சஞ்சலம் போக்கும் துளசி. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்குத் துளசியை வைத்து வழிபாடு நடத்துங்கள். இது உங்கள் மனதின் சஞ்சலங்களைப் போக்கி அமைதியைத் தரும். வழிபட்ட பின் அந்த துளசியை நீங்கள் உண்ணவும் செய்யலாம்.