‘உரத்த சிந்தனை’ நடத்திய ‘பாரதி உலா – 2022’ கோலாகலம்
‘உரத்த சிந்தனை’ வாசக எழுத்தாளர்கள் சங்கமும் ‘நம் உரத்த சிந்தனை’ தமிழ் மாத இதழும் இணைந்து நடத்திய ‘பாரதி உலா – 2022’ இரண்டாவது நிகழ்ச்சி 6-12-2022 அன்று சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி மாணவி ரம்யா அனைவரையும் வரவேற்றார்.
‘உரத்த சிந்தனை’ பொதுச்செயலாளர் உதயம் ராம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தலைவரையும், வாழ்த்துரை வழங்குவோரையும் அறிமுகப்படுத்தினார்.
‘பாரதி பேச்சு பாரதத்தின் மூச்சு’ என்ற பேச்சரங்கத்தில் மாணவிகள் காவியா, ஸ்ரீஜா, விகாஷினி, தெபோராள், ஹேமாவதி வினோதினி ஆகியோர் பேச்சுகள் அரங்கத்தில் உள்ளவர்களின் மனதைக் கவர்ந்தனர்.
சிறப்பாகப் பேசிய மாணவியான காவியாவுக்கு முதல் பரிசாக ரூ.1000, இரண்டாவது பரிசாக ரூ.500 விகாஷினி என்ற மாணவிக்கு வழங்கப்பட்டது. அனைத்து மாணவிகளுக்கும் எழுத்தாளர் லதா சரவணன் தலா ரூ.500 வழங்கினார்.
விகாஷினி, டினா டிலைலா பிரட், ஸ்ரீஜா, தெபோராள், சோபியா, சுபாஷினி, ஆகியோர் இனிமையாகப் பாடல்கள் பாடியதோடு, மேடையில் அற்புதமாக ஓடியாடி, நடனமாடி மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கலைமாமணி J.பாலசுப்பிரமணியன், தனது உரையில் “தேசபக்தி, தெய்வபக்தி ஆகியவற்றைப் பின்பற்றி நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என்றார்.
‘உரத்த சிந்தனை’யின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் வாழ்த்துரை வழங்கினார்.
விஞ்ஞானி நெல்லை முத்து, லதா சரவணன், முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், ராஜேஸ்வரி பாலகிருஷ்ணன், தாளாளர் கிறிஸ்டிஜேம்ஸ் ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டியில் பங்குபெற்ற மாணவிகளின் பேச்சிலிருந்து சில முக்கியமான கருத்துக்களை எடுத்துரைத்துப் பாராட்டினார். நிகழ்ச்சியை ராஜாராம் ஒளிப்பதிவு செய்தார். இணைச்செயலாளர் தொலைபேசி மீரான் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நன்றி கூறினார்.