கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவலை பாரதிராஜா வெளியிட்டார்

ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு நூல் ஆகோள் இந்த நாவலை எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் எழுதினார். அதை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார்.

இந்த நாவல் குறித்து கபிலன் வைரமுத்து பேசும்போது,

“இந்த நாவல் சில உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட ஒரு அமுதப் புனைவு என்றும் சொல்லலாம். இந்தக் கதையில் இரு வேறு உலகங்கள் இருக்கின்றன. இந்த இரு உலகங்களுக்கும் பொதுவான சில கேள்விகள் இருக்கின்றன. கடந்த இரண்டாண்டு கால உழைப்புக்குப்பின் இந்த நாவல் வெளியாகியிருக்கிறது. இந்த நூலைத் தமிழில் பெருமைமிகு இயக்குநர் பாராதிராஜா வெளியிட்டிருக்கிறார்.

“கலிப்பேடு தீயன் அந்தவன் கூடலூர் ஆகோள்’’ என்ற இந்த வரி இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. இந்த கல்வெட்டி வரியிலிருந்துதான் ஆகோள் என்கிற சொல் நமக்குக் கிடைக்கிறது. ஒரு அசாதாரணமான களவுச்செயல் என்கின்ற பொருளில்தான் இந்தப் புத்தகத்திற்கு ஆகோள் என்கின்ற தலைப்பை வைத்திருக்கிறேன்.

இங்கு எது களவாடப்படுகிறது, யார் களவாடப்படுகிறார்கள் என்பதுதான் கதை. இந்தக் களத்தில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. இதை ஒரு நாவலாக மட்டும் எண்ணி எழுதி முடித்துவிடாமல் இந்தக் கதையைத் தொடர் நாவல்களாக அடுத்தடுத்த பாகங்களாக எழுதவேண்டும் என்கிறது என்னுடைய விருப்பம்” என்றார்.

‘ஆகோள்’ என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன்வைக்கிறது. இந்த நாவல் நிகழ்காலத் தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

1920ஆம் ஆண்டு கைரேகை சட்டத்திற்கு எதிராகப் பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது.

இந்த நூலை இயக்குநர் பாரதிராஜா அறிமுகம் செய்யும் சிறப்புக் காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஆகோள்’ குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில்:

சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு, மாடுகளைக் களவாடி வரும் செயலுக்கு ‘ஆகோள்’ என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பிட்டிருக்கிறேன். இந்தக் கதையில் இடம்பெறும் தொழில்நுட்பக் களம் குறித்தும், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நூலின் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் கூறுகையில்:

“கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், சிறுகதை, கவிதை, நாவல் என மொழியின் அனைத்துத் தளங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் கபிலன் வைரமுத்துவின் புதிய வரவு ஆகோள். இந்த நாவலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். இதுவரை தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு முழுமுதற் தொழில்நுட்ப உலகை கபிலன் வைரமுத்து அறிமுகப்படுத்துகிறார். குற்ற இனச் சட்டம் குறித்த ஒரு புதிய பார்வையை இந்த நாவல் வழி விவாதித்திருக்கிறார்” என்றார்.

ஆகோள் கபிலன் வைரமுத்துவின் நான்காவது நாவல். கபிலனின் முந்தைய நாவலான ‘மெய்நிகரி’ கவண் என்ற பெயரில் திரைப்படமானது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து கபிலன் வைரமுத்து எழுதிய நாவலை 2012-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட்டார். ‘மெய்நிகரி’ என்ற நாவலை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுதியான ‘அம்பறாத்தூணி’ என்ற நூலை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

தற்போது இயக்குநர் பாரதிராஜா கபிலன் வைரமுத்துவின் நான்காவது நாவலை வெளியிட்டிருக்கிறார். “தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த இயக்குநர்களின் கரங்களால் தன் படைப்புகள் வெளிவந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக” கபிலன் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!