அதிர்ச்சித் தகவல் : 20 ஆயிரம் பள்ளிகள் மூடல்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட முழுமுடக்கம் காரணமாக கல்வி, பொருளாதாரம், சாதாரண வாழ்நிலை என அனைத்துத் தளங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்று வந்தனர். அதேநேரம் இணைய வசதி இல்லாத மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெறுவதில் சிக்கல் எழுந்தது.
கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் முழுமுடக்கம் காரணமாக, பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல மாணவர்கள் முன்னதாக படிப்பை நிறுத்தியதாகத் தகவல்கள் வெளியானது.
மாவட்ட மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக்கான ஒருங்கிணைந்த அளவிலான தகவல்கள் அறிக்கையாக மத்திய அரசுக்கு தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது மத்திய கல்வி அமைச்சகம் 2021-22 காலகட்டத்தில் பள்ளி கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 15,09,000 பள்ளிகள் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை 2021-22ல் 14,89,000 ஆக்க குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் கொரோனா முழுமுடக்கத்திற்குப் பின் செயல்படாமல் போயுள்ளன. இதில் தனியார் பள்ளிகளே அதிகம் எனவும் கூறப்படுகிறது.
ஆசிரியர்களின் எண்ணிக்கையும், 1.95 சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு, 14.89 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டன.
நாடு முழுதும், 44 சதவிகிதப் பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர்கள் உள்ளன. 34 சதவிகிதப் பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. 27 சதவிகிதப் பள்ளிகளில் மட்டுமே சிறப்புக் குழந்தைகளுக்கான கழிப்பறை வசதி உள்ளது.
கொரோனாவுக்குப் பிந்தைய காலம் என்பதால், மாணவர் சேர்க்கை வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. ஆரம்பப் பள்ளியில் இருந்து உயர் கல்விக்குச் சென்ற மாணவர்களின் சதவிகிதம், 25.57 சதவிகிதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வியின் தரம் உயர்வதுபோலவே மாணவர்களின் எண்ணிக்கையும் உயரவேண்டும். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கை.