துளசித் திருமணமும் சனிப் பிரதோஷமும்! || விசேஷ நாள் (5-11-2022)

 துளசித் திருமணமும் சனிப் பிரதோஷமும்! || விசேஷ நாள்  (5-11-2022)

நாளை துளசித் திருமணமும் சனிப் பிரதோஷமும் சேர்ந்து வரும் சிறப்பு தினம்.

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது கடலில் இருந்து கல்பக, காமதேனு விருட்சம், ஐராவதம் என்னும் யானை, உச்சைஸ்ரஸ் என்ற குதிரை, கவுஸ்துபம் என்னும் மணி, மகாலட்சுமி, சந்திரன், அமிர்தம் முதலிய பொருட்கள் வெளிவந்தன. அமிர்தம் வெளி வந்தவுடன் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அமிர்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் விளங்கும் துளசி தோன்றினாள். அவளிடம் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு அதிக பிரியம் ஏற்பட்டது. ஆதலால் ஐராவதம் முதலிய மற்ற பொருட்களை எல்லாம் மற்ற தேவர்களுக்குக் கொடுத்துவிட்டு துளசி, கவுஸ்துபம், மகாலட்சுமி ஆகிய மூன்றை மட்டும், தாமே எடுத்துக் கொண்டார்.

ஸ்ரீ மகாலட்சுமியையும் கவுஸ்துப மணியையும் மார்பில் அணிந்து கொண்டார். துளசியை பாதம் முதல் தலை வரை அணிந்து கொண்டார். அந்த நாள்தான் துளசி திருமண நாளாகக் கருதப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) துளசி திருமணத் திருநாளாகும். எனவே நாளை ஒவ்வொருவரும் இயன்றவரை துளசிச் செடியை பூஜை செய்து வணங்க வேண்டும். சுமங்கலிப் பெண்கள் வீட்டில் துளசி பூஜையை பக்தியுடன் வழிபாடு செய்து வந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். குடும்பமும், வீடும் சுபிட்சமாக இருக்கும். வீட்டில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும் இருக்கும். தம்பதிக்குள் பரஸ்பரம் ஒற்றுமை ஏற்படும்.

சனிப் பிரதோஷம்

திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனிப் பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்து வந்தால் மிகவும் நல்லது.

பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு சகல, சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேர பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

தான, தர்மங்களைச் செய்ய சனிப் பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது. இரட்டிப்புப் பலன்களைக் கொடுக்கும் இந்தச் சனிப் பிரதோஷத்தைத் தவறவிடாமல் சிவ வழிபாடு மேற்கொண்டு பயனடையுங்கள். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். பிரதோஷ அபிஷேகத்துக்குப் பொருட்கள் வழங்கினால் 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கிச் சிறப்பான பலன் கிடைக்கும்.

சனிப் பிரதோஷத்தை முறையாக வழிபட நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி காலகட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானின் கோபம் தணியும். எனவே துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனிப் பிரதோஷ வழிபாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு சனிப் பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...