தலம்தோறும் தலைவன் | 21 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 21 | ஜி.ஏ.பிரபா

ஸ்ரீ கம்பகரேஸ்வரர், திருபுவனம்.

விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப்

பரவிய வன்புரை என்புருக்கும் பரம் பாண்டியனார்

புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார்

மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறியார் மறந்தே

திருவாசகம்

பயம் எதனால் வருகிறது?

பயம் என்பது பொதுவான விஷயம். அது ஏன், எப்படி வருகிறது என்பது தெரியாது. அதீத மன அழுத்தம், நினைத்தது நடக்காததன் தோல்வி உணர்வு எல்லாமே பயத்திற்குக் காரணம் ஆகிறது.

அழியும் இந்த உடலுக்குள் அளவற்ற ஆசைகள். ஒன்று நிறைவேறியதும் அடுத்தது என்று ஆசைகள் வரிசையாகப் படை எடுக்கின்றது. அது நிறைவேறவில்லை என்றால் உடனே ஒரு பயம், தவிப்பு, பதற்றம் உண்டாகிறது.

வாழ்வதற்கான போராட்டங்களே பயத்திற்குக் காரணம் ஆகின்றன. மற்றவர்களைவிட நாம் உயர்வாக வாழ வேண்டும், எதிலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர்த்து, யாருக்கும் தீங்கு நினைக்காமல் உதவி செய்து வாழ வேண்டும் என்று நினைப்பதில்லை. புராணங்களில் குறிப்படும் அசுரர்கள் நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள்தான்.

பயமே அனைத்து நோய்களுக்கும் காரணமாகிறது. மனமானது செம்மையானால் மயக்கம் தீரும் என்கிறார்கள் சித்தர்கள். மனதைச் செம்மைப்படுத்துவது இறைவனின் தியானம்தான்.

நடப்பது அனைத்தும் இறைவன் சித்தம். அவன் எண்ணப்படிதான் அனைத்தும் நடக்கிறது. சிவனே என்று இரு என்கிறது வேதங்கள். சிவம் என்பது ஒரு உணர்வு. நடக்கிறபடி அனைத்தும் செம்மையாக நடக்கும் என்பதே சிவம் கூறும் தத்துவம்.

சிவம் என்றிருந்தால் அது நம்மை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும். நம்மைச் சுற்றி ஆசை, பொறாமை, கோபம் என்ற இருள் சூழ்ந்து நிற்கிறது. அந்த இருளில் நாம் நிலை தடுமாறுகிறோம். உள்ளுக்குள் பயம் உருவாகிறது. ஒரு நடுக்கம், தவிப்பு நம்மைச் சுற்றிச் சூழ்ந்து கொள்கிறது.

அந்த நேரத்தில் நமக்குக் கவசமாக இருப்பது இறைவன் நாமங்களே. கோவில்கள், இறைவன் திரு உருவங்கள் எல்லாமே நம் பயத்தைப் போக்குகின்றன. நம் பயத்தைப் போக்கவே, இறைவன் கம்பகாறேஸ்வரராக திருபுவனத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

தன் போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது இக்கோவில். தீவினைகளை நீக்கும் ஆதி சரபேஸ்வரர் இங்கு உள்ளார்.

அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன், என்ற மூன்று அசுரர்கள் சிவபெருமான நோக்கித் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றார்கள். அந்த ஆணவத்தில் தேவர்கள், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். பொன், வெள்ளி, இரும்பு கோட்டை அமைத்து அனைவரையும் துன்புறுத்தி வந்தனர். இதனால் பயந்து நடுங்கிய தேவர்கள், முனிவர்கள் சிவனிடம் தஞ்சமடைந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தன் சிரிப்பினாலேயே அசுரர்களை வதம் செய்தார் சிவபெருமான்.

இதே போல் இரண்யனை அழித்த நரசிம்ம மூர்த்தியின் அசுரத்தன்மையைக் கண்டும் உலக உயிர்கள் நடுங்கின. அப்போது ஈசன் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரை சாந்தம் அடையச் செய்து, அமைதியை ஏற்படுத்தினார். வாழ்வில் நடுக்கத்தைச் சந்தித்த அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை அளித்தார் ஈசன். எனவேதான் ஈசன் ‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ என்றும் ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இது ஒரு தேவார வைப்புத் தலமாகும். பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. இதன் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் அமைந்துள்ளது. மிக அழகான சிற்ப வேலைப்பாடுகளுக்குச் சிறப்பு பெற்றது திருபுவனம் கோவில். தாராசுரம் கோவில் தூண்களைப் போன்றே இங்கும் உள்மண்டபத்தில் உள்ளது.

ஸ்ரீகம்பகாறேஸ்வரர் மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கிறார். இத்தலத்து அம்பாள் அறம்வளர்த்த நாயகி என்று அழைக்கப்படுகிறாள். சரபேஸ்வரர் தனிச் சன்னதியில் காட்சி அளிக்கிறார். இக்கோவில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாகக் கூறப்படுகிறது. தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம், போன்றவற்றையும் இக்கோவிலுடன் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இங்கு வில்வம் தல மரமாகவும், சரப தீர்த்தம் தீர்த்தமாகவும் உள்ளது. சரபேஸ்வரர் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார். அறுபத்து நான்கு சிவ உருவத் திருமேனிகளில் ஒன்றாக இவ்வடிவம் கொண்டாடப்படுகிறது. இவ்வடிவத்திற்கு முப்பத்தி இரண்டு கைகள் இருப்பதாக தத்வ நீதி சிற்ப நூல் கூறுகிறது.

வியாசர், இந்த மூர்த்தியை நெடிய துன்பத்திற்கும் நோய்களுக்கும், விஷம், மற்றும், பூத பிரேத உபாதைகளுக்கும் வணங்கலாம் என்கிறார். சரபேஸ்வரரே இங்கு திருபுவனத்தில் ‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ என்று அழைக்கப்படுகிறார்.

சரபேஸ்வரர் எட்டுக் கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக் கூர்மையான நகங்களும், உடலின் இரு புறத்திலும், இறக்கைகள், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போல் மூக்கு, யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராகக் காட்சி அளிக்கிறார்.

இரண்யனின் மகன் பிரகலாதன். அந்தச் சிறுவனை நாராயண நாமம் சொல்லக் கூடாது என்று கொடுமைப்படுத்தினான் அசுரன் இரணியன். அவன் வாங்கிய வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத, காலையும் இல்லாத மாலையும் இல்லாத நேரத்தில் ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் வதம் செய்யப்பட வேண்டும். எனவே மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனைக் கைகளாலேயே வதம் செய்தார்.

உக்ர ரூபமாய் இருந்த அவரைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் நடுங்க, அவரின் கோபத்தைத் தணிக்க, ஈசன் எடுத்த உருவமே சரபேஸ்வரர். திருபுவனம் கோவிலின் முதன்மையான மூர்த்தி இவரே. குலோத்துங்கன் கட்டிய சிதம்பரம் கோவிலிலும், இராசராசன் தேவி கட்டிய, திரைலோக்கிய சுந்தரர் கோவிலிலும் சரபேஸ்வரர் உள்ளார்.

திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரரை வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கி, வாழ்வின் பயம் நீங்கும் என்கிறது புராணங்கள். கடன், நோய், செய்வினை கோளாறுகள் நீங்க, பதினோரு வாரங்கள் தொடர்ச்சியாகச் சென்று பதினோரு தீபங்கள் ஏற்றி, பதினோரு சுற்றுகள் வலம் வந்து வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த யுகத்தில் நாம் வணங்கித் தொழ வேண்டிய உருவம் ஸ்ரீ சரபமூர்த்தி என்றால் அது மிகை இல்லை.

வேதம் என்பது நம்மை உயர்த்தக் கூடிய ஒரு புனிதமான விஷயமாகும். அதைக் கற்றறிந்து அதன்படி நடக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆனால் முறையாக வேதம் ஓதும் சக்தி இப்போது இல்லை. வாழ்வின் கடமைகளில் மூழ்கி வேதம் படிப்பதை மறந்து வருகிறோம். ஆனால் திருபுவனம் தலத்தில் அமைந்துள்ள குடமுழுக்குத் தூண்கள் என்ற சரபவேதத் தூண்களை தொட்டு வணங்கினாலே பல நூறு கோவில்களில் கும்பாபிஷேகம் செய்த பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.

சரபேஸ்வரரின் வடிவம், சிவன், காளி, துர்க்கை, மற்றும் விஷ்ணு எனும் நான்கு ரூபங்கள் அடங்கிய ரூபம் என்கிறார்கள். சூலினி, பிரத்யங்கரா என்னும் இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரர் அனைத்துத் துன்பங்களையும் நீக்குகிறார்.

இவரின் காயத்ரி மந்திரம் தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்கிறது.

ஓம் சாலுவேசாய வித்மஹே பஷீ ராஜாய தீமஹீ

தன்னோ சரப பிரசோதயாத்”

என்கிற காயத்ரி மந்திரத்தை நூற்றி எட்டு முறை சொல்லி வர, தீர்க்க முடியாத பிரச்சினைகள் உடனே தீரும் என்பது உறுதியான நம்பிக்கை. சரபேஸ்வரர் வழிபாடு நம் வாழ்வின் இருளை நீக்கி, வாழ்வதில் ஒரு புத்துணர்ச்சியைத் தரும்.

இன்னா நல்கும் இருவினைகள் எல்லாம் தீர்த்தின்னருள் புரியாய்

உன்னால் செய்ய இயலாத ஒன்றும் உண்டோ என்றென்று

பன்னாள் பரவிப் பணி செய்யும் பக்தர்க்கென்றும் துணையாவான்

நன்னீர் வயல்சூழ் புவனத்தில் நடுக்கும் தீர்க்கும் பெருமாளே”

என்கிறது அப்பர் தேவாரம்.

ஈசனிடம் வரம் பெற்ற ஒருவனை அழிக்க வேண்டுமென்றால் அவரைவிட சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்றே மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார். அந்த உக்ர ரூபத்தைச் சாந்தப்படுத்த ஈசனே வர வேண்டியதாயிற்று. ஈசனால் மட்டுமே முடிகிற, முடிந்த காரியம் அது.

நம் பயத்தையும் நீக்க அவரால் மட்டுமே முடியும். நம் ஆழமான பக்தியும், இறைவன் மேல் நாம் கொண்டிருக்கும் பக்தியுமே அவரை நம்மிடம் வரவழைக்கும்.

இறைவனின் லீலைகள் ஒவ்வொன்றுமே தன் பக்தர்களைக் காப்பதற்கே. இறை மூர்த்திகளில் பேதம் இல்லை என்பதைக் குறிக்கவே மகாவிஷ்ணுவும், சிவபெருமானும் இணைந்தே செயல் புரிகிறார்கள். ஸ்ரீ சரபேஸ்வரர் என்றால் அங்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவும் இருக்கிறார். ஈசனை வணங்குவதன் மூலம் மகாவிஷ்ணுவையும், பெருமாளைத் துதிப்பதன் மூலம் சிவனையும் வழிபட முடிகிறது.

திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள இக்கோயில் வாழ்வில் நம் பயத்தைப் போக்கி, நிம்மதி, அமைதி, திருப்தியைத் தருகிறது. சரபேஸ்வரரை வணங்கி நாமும் நம் பயங்களை நீக்கிக் கொள்ளலாம்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...