ஆசையின் விலை ஆராதனா | 2 | தனுஜா ஜெயராமன்

 ஆசையின் விலை ஆராதனா | 2 | தனுஜா ஜெயராமன்

சைரன் ஒலித்தபடி போலீஸ் ஜீப் ‘மில்லேனியம் ஸ்டோன்’ காம்பவுண்டில் நுழைந்தது. ஏற்கனவே வந்திருந்த ஆம்புலன்ஸ் ஓரமாய் நின்றிருந்தது. அங்காங்கே ‘குசு குசு’வெனப் பேசியபடி ப்ளாட்டில் வசிப்பவர்கள் காரிடரில் நின்றுகொண்டிருக்க… சிலர் பால்கனி வழியாக மேலேயிருந்து பீதியுடன் எட்டிப் பார்த்து கொண்டிருந்தனர்.

ஜீப்பிலிருந்து குதித்து இறங்கினாள் அனாமிகா. இளவயதின் துடிப்பு அவரது முகத்தில் நடையில் தெரிந்தது. நடிகை அனுஷ்காவிற்கு யூனிபார்மை மாட்டியது போல் இருந்தாள் அனாமிகா.

“யார் இங்க செகரெட்டரி..?”

“நான் தாங்க..” என வந்து நின்றார் விக்னேஷ்வரன்.

“பாடியை யார் மொதல்ல பார்த்தது..?”

“இவர் தாங்க..” எனக் காட்டிய புரோக்கர் மூர்த்தி ஓர் ஓரமாய் பயத்துடன் நின்றிருந்தான்.

“பாரன்சிக் டிபார்ட்மெண்ட்க்கு சொல்லியாச்சா..? வந்துட்டாங்களா..?” -இந்தக் கேள்வி உடன் வந்திருந்த ஏட்டைப் பார்த்து.

“வந்துக்கிட்டிருக்காங்க மேடம்”…என்றார் ஏட்டு ரவி.

பரபரப்புடன் உள்ளே நுழைந்து உடலைப் பார்வையிட்டாள். கட்டில் மேல் நிலைகுத்திய விழிகளுடன் ஏடாகூடமாகக் கிடந்தாள் ஆராதனா. மணிக்கட்டிலிருந்து ரத்தம் கோடாக வழிந்து நனைந்து போர்வையில் வட்டமாக உறைந்திருந்தது. அருகிலேயே ரத்தம் படிந்த கத்தியும் கிடந்தது.

“யாரும் எதையும் தொட்டுடலையே..?”

“இல்லீங்க மேடம்..”

“பேர் என்ன சொன்னீங்க..?”

“ஆராதனா..”

“வீட்டுக்குத் தகவல் சொல்லிட்டீங்களா..?”

“சொல்லிட்டோம். அவங்க ஹஸ்பெண்ட் லண்டன்ல இருக்கார். இவங்க இரண்டு நாள் முன்னாடி தான் இந்தியா வந்திருக்காங்க. அப்பா அம்மாகூட இராஜா அண்ணாமலைபுரத்தில் தங்கி இருந்தாங்க…போன் பண்ணியிருக்கோம். வந்துகிட்டிருக்காங்க..”

“ஓ.. ஐ..சீ..” என்றவாறு அறையை நோட்டமிட்டாள். எதுவும் எங்கும் கலைந்திருக்கவில்லை. ஹாலில் இரண்டு காலியான டீக் கப்புகள் டீபாயின் மேல் கிடந்தது. ஸ்விக்கியில் ஆர்டர் செய்திருந்த உணவு அப்படியே பிரிக்கப்படாமல் டைனிங் டேபிள் மேல் கிடந்தது.

க்ரைம் போட்டோகிராபர் அருண் பாடியை 360 டிகிரி கோணத்தில் வளைத்து வளைத்து போட்டோ பிடித்துக்கொண்டிருந்தான்.

“அந்த மூர்த்தியை வரச்சொல்லுய்யா..”

பயத்துடனும் அதனால் வெலவெலத்து போன முகத்துடனும் மூர்த்தி வந்து நின்றான்.

“என்ன விஷயமா இவங்களைப் பாக்க வந்தீங்க..?”

“வீடு வாடகைக்கு விடறது சம்பந்தமா பாக்க வந்தேன்ங்க… நான் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்ங்க…மேடம் தான் நேத்தைக்கு போன் பண்ணி வரச்சொல்லியிருந்தாங்க.”

“ஆராதனாவை ஏற்கனவே தெரியுமா..?”

“தெரியும் மேடம்… இவங்க அப்பா வெங்கடாச்சலம் வாங்கின வீடுகளுக்கு நான் தான் வாடகைக்கு ஆள் கூட்டி வருவேன். அந்த வகைல தான் பழக்கம்ங்க.”

“என்ன பார்த்தீங்க..? அதை ஒண்ணுவிடாம முழுசா சொல்லணும். எதையும் விடக்கூடாது…”

“அது…. வந்து… அவங்க கிட்ட இரண்டு மணிக்கு வரேன்னு காலையிலேயே போன் பண்ணிச் சொல்லியிருந்தேன்ங்க… கரெக்டா இரண்டு மணிக்கு வந்து காலிங்பெல்லை அழுத்தினேன்… ரொம்ப நேரமா ரெஸ்பான்ஸ் இல்ல… போன் பண்ணி பார்த்தேன்.. ஹூகும்… அதுக்கும் பதிலில்லை… வெறுத்துப்போய்க் கதவைத் தள்ளினேன்… டக்குனு தொறந்துக்கிச்சு. மேடம்… மேடம்ன்னு குரல் கொடுத்துகிட்டே உள்ளே வந்தேன். பதிலேயில்லை. அப்படியே திறந்திருந்த பெட்ரூம் கதவை நோக்கிக் குரல் கொடுத்தேன். அதுக்கும் எந்த ரெஸ்பான்சும் வராததால.… எட்டிப் பார்த்தேன்ங்க. அப்ப… அப்பதான் மேடத்தை இந்தக் கோலத்துல பார்த்து அலறியடிச்சுட்டு பக்கத்து வீட்டுக்காரங்களுக்குத் தகவல் சொன்னேன். அவங்க செகரெட்டரி சாரை கூப்பிட்டு வந்து பார்த்து உங்களுக்கு தகவல் சொன்னாங்க… எனக்கு வேற எதுவும் தெரியாதுங்க”…

“சரி.… நீங்க போங்க… தேவைபட்டாக் கூப்பிடுவோம்… உங்க நம்பரைக் குடுத்துட்டுப் போங்க”…

‘மூர்த்தி ரியல் எஸ்டேட்’ என்ற கார்டை கொடுத்துவிட்டு பயத்துடனே கிளம்பினான்.

“மேடம்..! ஆராதனாவோட பேரன்ஸ் வந்துட்டாங்க…”

“ஆ.. ரா.. த.. னா…” என்று கதறியபடி மகளின் உடலைப் பார்த்து மயங்கி விழுந்தார் விஜயலஷ்மி. அருகில் கண்ணீருடன் வாயைப் பொத்தியபடி வெங்கடாச்சலம் அழுது கொண்டிருந்தார்.

“நீங்க தான் இவங்களோட ஃபாதரா..?” என்று கேட்ட அனாமிகாவைப் பார்த்து சோகத்துடன் தலையாட்டினார்..

“உங்க மக சூசைட் பண்ணியிருப்பாங்கன்னு தோணுதா உங்களுக்கு..?”

“வாட் நான்சென்ஸ்..! அவ எதுக்கு சூசைட் பண்ணனும்..? அவ ரெண்டு நாளைக்கு முன்னதான் இந்தியாவே வந்தா. அழகான குடும்பம், அருமையான குழந்தை.. அவ சூசைட் பண்ணிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு..? சான்ஸேயில்ல..” என்று கோபமாகக் கத்தினார் அழுகையினூடே.

“ஓக்கே.. ஓக்கே.. புரியுது… நாங்க இன்னும் இன்வெஸ்டிகேஷனே தொடங்கலை.. போஸ்ட்மார்ட்டம் பண்ணி ரிப்போர்ட் வந்தாத்தான் இது கொலையா? தற்கொலையா?ன்னே சொல்ல முடியும். அதுக்கப்புறம் பர்தர் இன்வெஸ்டிகேஷனுக்கு பிறகே எதையும் கன்பர்ம் பண்ண முடியும்… இவங்க பேமிலி பத்தி கொஞ்சம் சொல்லுங்க..?”

“ஆராதனாவோட ஹஸ்பெண்ட் அம்ரிஷ் லண்டன்ல பிஸினஸ் பண்றார். இவங்களுக்கு ஆறு வயசில ஆத்யான்னு ஒரு பொண் குழந்தை இருக்கா”.. என்றார் கண்களை துடைத்துக்கொண்டே.

“உங்க மருமகன்..?”

“ரொம்ப நல்லமாதிரி மேடம்..”

“ஓ.. ஐ.. ஸீ.. நான் அப்புறமா உங்களைக் கான்டாக்ட் பண்றேன்..” என்று சொல்லியபடி திரும்ப, அதற்குள் ரவி அவளை தேடி வர…

“ரவி.. பார்மாலிட்டி எல்லாம் முடிஞ்சுதா..?”

“பாரன்சிக் ஆட்கள் பிங்கர் பிரிண்ட்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டாங்க… பாடியைப் போஸ்ட்மார்ட்டம் அனுப்பிடலாம் மேடம்..” என்ற ரவிக்குத் தலையாட்டி விட்டு உள்ளே வந்தாள்.

ஸ்ட்ரெட்சரில் ஆராதனாவைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன் பெற்றோரைப் பார்க்க ஆசையாக இந்தியாவிற்கு வந்து இறங்கிய பெண்! இன்று இப்படியாக… என நினைத்தபோதே ஒரு மாதிரியாக இருந்தது அனமிகாவிற்கு.

“ஆ.. ரா.. த.. னா..” என விஜியும் வெங்கடாசலமும் கதறி அழுது துடித்து கொண்டிருந்தனர்.

ஆராதனா தனது கனவு இல்லத்திலிருந்து மார்ச்சுவரி நோக்கி கடைசியாகப் பயணித்துக் கொண்டிருந்தாள் ஆம்புலன்ஸில்.

விஜியும் வெங்கடாச்சலமும் அழுது அரற்றியபடி தங்களது காரில் ஆம்புலன்ஸைப் பின் தொடர்ந்து சென்றனர்..

“ரவி..! நீயும் அலெக்ஸூம் அக்கம்பக்கம் இருக்குறவங்களை தரோவா விசாரிச்சிடுங்க”…

“சரிங்க மேடம்..”

“தென்.. அந்த CCTV புட்டேஜ் கலெக்ட் பண்ணிடுங்க..”

“ஓக்கே மேடம்..”

“நான் இப்ப ஸ்டேஷனுக்கு கிளம்புறேன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்.. அப்பறம் நம்ம ப்ஃரீப் இன்வெஸ்டிகேஷனைத் தொடங்கலாம்” என்றபடி ஜீப்பில் ஏறிக் கிளம்பினாள் அனாமிகா.

காரில் அழுதபடி வந்த விஜயலஷ்மியை சமாதானப்படுத்திக் கொண்டே காரை ஓட்டினார் வெங்கடாச்சலம். அவரும் உடைந்து போயிருந்தார்..

“ஏங்க..! மாப்பிள்ளைக்குத் தகவல் சொல்லிட்டீங்களா…? அவர் எப்படித் தாங்கிக்கப் போறாரோ..?” என்று ‘ஓ’வென அழுதவளைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“இன்னும் இல்லை விஜி… எறங்கினதும் போன் பண்றேன்…”

“ஆத்யாவை எப்படிச் சமாளிக்க போறாங்க..? அவ அம்மாவைக் காணாமத் துடிப்பாளே… இந்தச் சின்ன வயசுல அவளுக்கு இப்படியொரு நிலைமையா..?” என்று கதறிய விஜயலட்சுமியைத் தேற்றும் வழி புரியாமல் அவருக்கும் கண்ணீர் கொட்டியது.

ம்புலன்ஸ் அரசு மருத்துவமனையில் நிற்க… ஸ்ட்ரெட்சரை மருத்துவமனை ஊழியர்கள் இறக்க… மகளை அந்தக் கோலத்தில் கண்ட விஜி மறுபடியும் ஓவெனக் கதறியவளை ஒரு ஓரமாய் உட்கார வைத்துவிட்டு அம்ரிஷ்க்கு போன் செய்ய நினைத்து மொபைலை எடுக்க, கை உதறியது. மனசும் சேர்ந்துதான்… என்ன சொல்வது..? எப்படிச் சொல்வதென மனசு துடித்தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு அம்ரிஷின் நம்பரை டயல் செய்தார்.

“மாமா..! சொல்லுங்க..! ஆராதனா வீட்டுக்கு வந்துட்டாளா..? நான் ரொம்ப நேரமா அவளுக்குத்தான் போன் ட்ரை பண்றேன். ரெஸ்பான்ஸே இல்லை பயந்துட்டேன்… அப்பாடா..! நீங்க போன் பண்ணதும் தான் உயிரே வந்தது…” என்று படபடவெனத் துடிக்கும் மருமகனிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை…

“மாப்பிள…” என்று உடைந்து போய் கதறியதை கேட்டு மறுமுனையில் பயந்த படி.… “மாமா..! ஏன் அழறீங்க..? என்னாச்சு..?” என்று பரபரத்தவனிடம்…

“ஆ.. ரா… த… னா… நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போய்ட்டா மாப்பிளை..” என்று கதறினார் வெங்கடாச்சலம்..

“வாட்..?” என்று அதிர்ச்சியான அம்ரிஷ், மறுமுனையில் போனைக் கையிலிருந்து நழுவவிட்ட சத்தம் பலமாகக் கேட்டது வெங்கடாசலத்திற்கு…

–ஆராதனா வருவாள்…

ganesh

3 Comments

  • இரண்டாவது அத்தியாயத்திலேயே ஆராதனாவை “ ஆ” ராதனாவிக்கிட்டீங்களே! விறுவிறுன்னு போகுது கதை!

  • தொடரும் இடத்தில் ஆராதனா வருவாள் என்றிருக்கிறதே…… இறந்தவள்????

  • முதல் அத்தியாயத்திலேயே ஆராதனாவிற்கு இந்த நிலைமையா..? என்ன ஆச்சு…? சஸ்பென்ஸ் எகிருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...